உலக சிந்தனையாளர்களிலேயே முதல் சிந்தனையாளராக கருதப்படுபவர் தந்தை பெரியார். அத்தகைய புகழ்மிக்க தந்தை பெரியா ரைப் பற்றி நண்பர் சீமான் சமீபகாலமாக மிகவும் கடுமையாக விமர்சித்துவருகிறார். அதுவும் மிகமோசமாக ஒருமையில் பேசுவதோடு, பெரியார்தான் தன் முதல் எதிரி என்றும் அவரைப் பற்றி பெருமை பேசுபவர்கள், தன் இயக் கத்திலேயே இருக்கக்கூடாதென் றும், இருந்தால்... விலகிவிடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
ஏன் சீமானுக்கு இப்படிப் பட்ட வெறித்தனமான வெறுப்பு பெரியார் மீது தற்போது வந்தது? இவருக்கு பின்னால் இருந்து யார் இயக்குகிறார் என்பது மக்க ளுக்கு தெளி வாகவே தெரிகிறது.
தந்தை பெரியார் இல்லையென்றால் திராவிட இயக்கமே கிடையாது, ஏன் அறிஞர் அண்ணாவும்... முத்தமிழறிஞர் கலைஞரும் கூட கிடையாது. அதனால்தான் 1967ல் தி.மு.க. வென்று ஆட்சி அமைக்கும் முன்பு அண்ணா, கலைஞர், நாவலர், அன்பில் போன்றவர்களோடு திருச்சி சென்று தந்தை பெரியாரைப் பார்த்து "இந்த ஆட்சியை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்' என்று அண்ணா, தந்தை பெரியாரிடத்தில் சொன்னார். கலைஞரை முதல்வ ராக்கியதும் தந்தை பெரியார்தான்.
அண்ணல் அம்பேத்கா ரிடம் சென்று தமிழகத் தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள் சிலர் "நீங்கள் எங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்காக பேச வேண்டும்' என்றபோது... "உங்களுக்குத்தான் பெரியார் ஈ.வெ.ரா. இருக்கிறாரே, பிறகு நான் எதற்கு வரவேண்டும். உங்களுக்கு அவரே பெரும் பாதுகாப்பு' என்று அம்பேத்கர் கூறினார்.
தந்தை பெரியாரின் கொள்கைகளைத்தான் அண்ணாவும் கலைஞரும், முதல்வராக இருக்கும் போது நிறைவேற்றி ஆட்சி நடத்தினர். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார் பெரிதும் விரும்பிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதையும் நிறைவேற் றும் வண்ணம் பலரை, அதிலும் குறிப்பாக பெண்களையும் அர்ச்சகராக்கி சிறப்பித்துள் ளார். பெரியார் கடைசியாக பேசிய தி.நகர் கூட்டத்தில், தன் விருப்பமான "தனித் தமிழ்நாடு வேண்டும்' என்ற கோரிக்கையை பேசினார். இப்படி சீமானால் தனித் தமிழ்நாடு வேண்டு மென்று கேட்க முடியுமா? கேட்டுத்தான் பாருங்களேன்! அவரால் நிச்சயம் முடியாது. அந்த தந்தை பெரியாரைத்தான் "இவர் தமிழரா?' என்று சீமான் கேட்கிறார்.
இதே சீமான், தந்தை பெரியாரைப் பற்றி முன்பு என்ன பேசினார் என்பதற்கு ஒரே ஒரு சான்றைத் தருகிறேன். "இன்றைக்கு பெண்கள் ராணுவத்தில் இருக்கிறார்கள், காவல்துறையில் இருக்கிறார்கள், விமானம் ஓட்டுகிறார்கள், அமைச்சர்களாக இருக்கிறார்கள், விஞ்ஞானி களாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தியவர் தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற தலைவர். "பொம்பளை கொள்ளி வைத்தால் பிணம் எரியாதா?' என்று கேட்டவர் தந்தை பெரியார். மான உணர்வோ டும், இன உணர்வோடும் மனிதன் வாழ வேண்டும் என்று இனத்திற்கு சூடேற்றி, சொரணையூட்டி, சுயமரியாதையோடு வாழ கற்றுத் தந்தவர் தந்தை பெரியார். இது சீமானின் பேச்சு, என்பதோடு புகழுரை ஆகும். இதை சீமான் மறுப்பாரா? இன்றைக்கு என்ன ஆயிற்று சீமானுக்கு?
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை சந்தித்ததைப் பற்றி பேசிவருகிறார். அவர் சந்தித்தது 8 நிமிடமோ 12 நிமிடமோ என்றும், அவரது சந்திப்புக்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் கொளத்தூர்மணி, வன்னி அரசு, சந்தோஷ், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் போன்ற பலர் "சீமான் பெரும்பாலும் பொய்யைத்தான் கூறுகிறார்' என்று தெரிவிக்கிறார்கள். அதன் உண்மைத் தன் மைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. சீமான் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சில நிமிடங்கள் அல்ல... ஒருநாள் முழுவதும் சந்தித்துக் கூடப் பேசியிருக்கட்டும். அதற்காக பெரியாரிஸ்டுகள் பதில் சொன்னால் "பெரியாரா, பிரபாகரனா பார்த்துக் கொள்வோம்' என்று சீமான் பேசுவது அபத்தமில்லையா?
பிரபாகரன் 1985, 86-ல் எல்லாம் சென்னை இந்திரா நகரில்தான் இருந்தார். அப்போது எனக்கு பிரபாகரனோடு பழக்கம் ஏற்பட்டது. நிரஞ்சன் என்ற விடுதலைப்புலிதான் அவர் சார்பாக என்னுடன் தொடர்பில் இருப்பார். ஐந்துமுறை அப்போது நான், பிரபாகரனை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பல்வேறு போராளிக் குழுக்கள் சென்னையில் இருந்தனர். அவர்கள் எந்தப் பிரிவு என்று பார்க்காமல் அவர்கள் நடத்திய பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டுள்ளேன்.
நான் அப்போது சென்னை சட்டக் கல்லூரி விடுதி செயலாளராக இருந்தேன். எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவன். 50 ஆண்டு கால சட்டக் கல்லூரி வரலாற்றில், இன்றுவரை அதன் பிறகு தேர்தலே நடந்த தில்லை. அப்படியிருந்த சமயத்தில் "பிளாட்' இயக்க தலைவர் உமாமகேஸ்வரனை அழைத்து விடுதியில் கூட்டம் நடத்தினேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசினார். அதன்பிறகு மறுநாள் நிரஞ்சன் என்னை சந்தித்து, "பிரபாகரன் உங்களை அழைக்கிறார்' என்றார் நானும் சென்று பார்த்தேன். அப்போது அந்த கூட்ட விபரத்தை கேட்டார். அதற்கு நான் "இன்று நீங்கள் வருவதாக இருந்தால் கூறுங்கள் உங்களுக்கும் கூட்டம் ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறினேன். ஆனால் அவரோ, "நான் உங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு வந்து ஈழ மக்களிடம் எந்தப் போராளிக் குழுவிற்கு ஆதரவு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு நாங்களே தமிழ்நாட்டில் கூட்டம் போடு கிறோம். நீங்கள் பார்த்து அறிந்ததை கூறுங்கள்'' என்றார். நான் அவரிடம் "என்னுடன் இரண்டு மாணவர்களை அழைத்துக் கொள்ளலாமா?'' என்று கேட்டேன். "தாராளமாக அழைத்து வாருங்கள்'' என்றார்.
அப்படி நான் அழைத்துச் செல்ல நினைத்தவர்கள் என் வகுப்புத் தோழர் அரசு கணேசன் மற்றும் எங்களது ஜூனியர், தமிழ் ஈழ உணர்வாளர் இன்றைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் ஆவர்.
பிறகு அந்தநேரம் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது. அதன்பிறகு போர் தொடங்கி விட்டது. அப் போது பிரபாகரன் போர்க் களம் சென்றுவிட்டார். எங்கள் பயணம் தடைபட் டது. ராஜீவ்காந்தி கொலைக் குப் பிறகு நான் இருந்த கட்சித் தலைமை ஜெய லலிதா அம்மையார், விடுதலைப்புலிகள் அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுத்ததால் என்னால் தொடர்பு வைத்துக் கொள்ள இயலவில்லை.
பிரபாகரனின் தொலைத்தொடர்பு கருவிகள் பிடுங்கப்பட்டதற்காக உண்ணாவிர தம் இருந்தபோது இரவு 12:30 மணியளவில் ஆசிரியர் வீரமணி கூறச் சொன்னதாக புலி நிரஞ்சன் என்னிடத்தில் கூறினார். மறுநாள் காலை மாணவர்களை திரட்டி உண்ணா விரதத்தை நிறுத்தச் செய்ய வேண்டுமென்றார். இரவு முழுவதும் தூங்காமல் எங்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி விடுதி மாணவர்கள், மாநிலக் கல்லூரி விடுதி மாணவர்களை திரட்டி சுமார் 1000 பேருக்கு மேல் ஊர்வலமாக சென்று பிரபா கரனை சந்தித்து வாபஸ் பெற வலியுறுத்தி னோம். அதற்குள் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பி கருவிகளை திருப்பித் தந்ததோடு உண்ணாவிரதத்தையும் முடித்திட வலியுறுத்தி னார். மாணவர்களை ஊர்வலமாக திரண்டெழ வைத்தது ஆசிரியர் வீரமணிதான். அதேபோல் விடுதலைப்புலி தமிழ்ச்செல்வன் அண்ணனோடு எனக்குப் பழக்கம் உண்டு. களத்தில் நின்று போராடியவர் அவர்.
மேலும் அன்றைய காலகட்டத்தில் சட்டக்கல்லூரி பழைய விடுதியில் போராளிகள் தங்க பத்து அறைகளை ஒதுக்கித் தந்தேன். அதில் ஒன்பது அறைகளில் அவர்கள் தங்கி யிருந்தனர். ஏன் இதனை தற்போது கூற வேண் டியது வந்ததென்றால் அந்த காலகட்டத்தில் இன்று பேசுபவர்கள் என்ன செய்துகொண்டி ருந்தார்கள் என்பதை நான் அறியேன்.
இருந்தாலும் தற் போது நண்பர் சீமான் பெரியாரைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் பேசிவருவது வருத்தமாக இருக்கிறது. அப்படி பேசுவதால் சிலர் எதிர் வினையாற்ற வேண்டிய தால் ஈழப் போராளிகள் கொச்சைப்படுத்தப்படு கிறார்கள். தந்தை பெரியாரை யாரெல்லாம் நேசித்தார்களோ அவர் களெல்லாம்தான் அன்று பிரபாகரனை முழுமையாக ஆதரித்தவர்கள். என்னைப் போல் பலர் ஆதரவாக இருந்தவர்கள், உழைத்தவர்கள் மௌனமாகத் தான் இருக்கிறோம். கலைஞரிடம் இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை உங்கள் விருப்பம் என்ன என்று பத்திரிகை யாளர்கள் கேட்டபோது, தமிழ் ஈழம்தான் என்றார். விடுதலைப் புலிகளை காரணமாகக் கூறி பிரதமர் சந்திரசேகர் மற்றும் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. அதுதான் அனைவரின் விருப்பம். பிறகு எதற்கு விமர்சனம்? வேண்டாம் விவாதம். மேலும் சிலவற்றை என்னால் சில காரணங்களுக்காக சொல்ல முடியவில்லை. தயவு செய்து நண்பர் சீமான் அவர்களே பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!