"ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்கால ரகசிய காப்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்' என்ற முழக்கத்தை, மத்திய பா.ஜ.க. அரசின் செவிகளுக்கு சென்னை பத்திரிகையாளர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

Advertisment

against

ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக பெரும்பாலான இந்திய ஊடகங்கள் விரிவாக வினா எழுப்பவோ, செய்திகளை வெளியிடவோ தயங்குகின்றன. இந்நிலையில் மூத்த பத்திரிகையாளரும் தி ஹிண்டு குழுமத்தின் சேர்மனுமான என்.ராம் புலனாய்வு மேற்கொண்டு, ரஃபேல் விமான பேரம் தொடர்பாக தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டார். இந்தக் கட்டுரைகளில் ஒன்று மார்ச் 6 ஆம் தேதி வெளியானது. விமான பேரம் தொடர்பான கோப்புகளை ஆதாரமாகக் கொண்டு அந்தக் கட்டுரை வெளியானது. அந்த ஆவணங்கள் திருடப்பட்டதாகவும், அதுதொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அரசு ரகசியக் காப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். இது ஒருவகையில் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டது.

ramஅதைத்தொடர்ந்து என்.ராமுக்கு ஆதரவாக ராகுல், மம்தா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். தமிழகத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்த கண்டன அறிக்கையில் ""ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஆகிய பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மக்கள் துணை நிற்கவேண்டும்''’என்று கூறியிருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ""பாதுகாப்புத் துறையிலிருந்து ஆவணங்களையே பாதுகாக்க முடியாதவர்கள், நாட்டை எப்படிப் பாதுகாப்பார்கள்?''’என்று வினா எழுப்பியிருந்தார்.

Advertisment

இந்நிலையில்தான், சென்னையில் என்.ராம் அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர் அமைப்புகள் சார்பில் கண்டனக்கூட்டம் நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நமது நக்கீரன் ஆசிரியர், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், மூத்த பத்திரிகையாளர்கள் இரா.ஜவஹர், அ.குமரேசன், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், புதியதலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், ஊடக சுதந்திரத்திற்கான கூட்டமைப்பின் அமைப்பாளர் பீர் முகமது, நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியாவின் கவிதா முரளிதரன், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்தின் ஹசீஃப், மீடியா அகடமி தாவூத் மியாகான், பவுண்டேஷன்ஸ் ஃபார் மீடியா புரபஸனல்ஸ் அமைப்பின் சந்தியா ரவிசங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றார்கள்.

கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன், நக்கீரன் சார்ந்த வழக்குகளில் தனது அனுபவங்களை முன்வைத்துப் பேசும்போது, ""சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1923 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ரகசியக் காப்புச் சட்டத்தைக் காட்டி, புலனாய்வு இதழியலை அச்சுறுத்தும் நிலை இருக்கிறது. போபர்ஸ் பேர ஊழலை வெளிக்கொண்டுவந்த இந்து என்.ராம், இப்போது யாருமே தொடத் தயங்கும் ரஃபேல் விமான ஊழல் தொடர்பாக ஆதாரபூர்வமாக கட்டுரைகளை எழுதி பா.ஜ.க. அரசின் மோசடிகளை மக்களுக்குத் தெரிவிக்கிறார். நமக்கான அரசியல் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கியபோது, அடிப்படை உரிமைகளில் பத்திரிகை சுதந்திரத்தையும் சேர்க்க வேண்டுமா என்று கேட்டனர். அவர் அவசியம் என்றார். அதன் காரணமாகத்தான் மக்கள் அறியமுடியாத பல அரசு ரகசியங்களை பத்திரிகைகள் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கின்றன. 1995-ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் வழக்கில் நக்கீரனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புதான் இந்திய பத்திரிகை வரலாற்றில் முக்கிய தீர்ப்பாகும். ஒரு தனிமனிதன் பொதுவாழ்க்கைக்குள் இயங்குகிறபோது அவரும் ஆக்கப்பூர்வ விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவார் என்று அந்த தீர்ப்பு கூறியது. நமக்கென்று ஒரு அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் அரசின் சட்டம் எதற்கு?

judge

Advertisment

இந்த அச்சுறுத்தலை நக்கீரன் பலமுறை சந்தித்திருக்கிறது. வீரப்பன் யார் என்று உலகிற்கு தெரிவித்தபோது நக்கீரனையும் அச்சுறுத்தினார்கள். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் நின்று குரல் கொடுத்தவர் என்.ராம். ஒரு செய்தி பொய் என நினைத்தால் வெளியிட்டவர்கள் மீது மானநஷ்ட வழக்கு போடலாமே தவிர சிறையில் அடைப்பேன் என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும்''’என்றார் விரிவாகவும் தெளிவாகவும்.

புதியதலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் பேசும்போது, ""போபர்ஸ் ஊழலை என்.ராம் வெளிக்கொண்டு வந்தார். ஒருகட்டத்தில் ஹிண்டு பத்திரிகையே அதை பிரசுரிக்க முடியாது என்றபோது, வெளியில் வந்து அதை வெளியிட்டார். இப்போது ரஃபேல் ஊழலை வெளியிட அகில இந்திய அளவில் யாரும் முன்வராதபோது, ஹிண்டு அதை வெளியிட்டிருப்பது சவாலான பணிதான். பிரதமர் மோடியை செய்தி ஆசிரியர்கள் சந்தித்தபோது, “"இந்து ராம் என்னுடைய நெருக்கமான நண்பர்'’என்றார் மோடி. இருந்தாலும் அரசின் தவறுகளை அவர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை''’என்றார்.

மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் பேசும்போது, ""ஆட்சியாளர்களுக்கு பத்திரிகை சுதந்திரம் தர்மசங்கடத்தை கொடுத்தாலும், பத்திரிகை சுதந்திரத்தின்மீது அணு அளவு தாக்குதல் நடக்கவும் நான் அனுமதிக்கமாட்டேன் என்றார் நேரு. இப்போது, எந்த தனிப்பட்ட செல்வாக்கும் இல்லாத சில குப்பைகள் பத்திரிகை சுதந்திரத்தின்மீது தாக்குதல் தொடுக்க நினைக்கின்றன. சமீபத்தில் கவர்னர் தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டதற்காக நக்கீரன் கோபாலை ஒரு நாளாவது ஜெயிலில் வைத்துவிட வேண்டும் என்று அரசாங்கம் பட்டபாட்டை நாம் பார்த்தோம்''’என்றார்.

meet

நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் பேசும்போது, “""இதற்குமுன் இதே இடத்தில் கௌரி லங்கேஷ் படுகொலையின்போது நடந்த கண்டனக் கூட்டத்தில், என்.ராம் முன்னிலையில், "பெங்களூரிலே ஒன்று நடந்தால் நாம் இங்கு கண்டிக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசையோ, மத்திய அரசையோ எதிர்த்து தமிழ்நாடு சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு என்றால் பேசத்தயங்குகிறோம்' ஏன் என்று கேட்டேன். அது முடிந்து ஒரு ஆண்டுக்குள் மாநில அரசு நிர்மலாதேவி வழக்கில் நக்கீரன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியபோது முதல்ஆளாக ராம்தான் வந்து நின்றார். யார் ஆட்சிக்கு வந்தாலும் அடக்குமுறை இருக்கும். அளவுகோல் மாறுமே தவிர, ஆட்சியாளர்களின் யோக்கியதை மாறவே மாறாது''’என்றார்.

நக்கீரன் ஆசிரியர் தனது உரையில், “""உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால், எஃப்.ஐ.ஆர். இன்னும் போடவில்லை. விசாரித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார். அதாவது, என்.ராமை கைதுசெய்வோம் என்று மறைமுகமாக மிரட்டுகிறார். அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இந்தக் கண்டன கூட்டம். நிர்மலாதேவி என்றால் கவர்னர் எப்படி பதைபதைக்கிறாரோ அதுபோல ரஃபேல் என்றால் மோடி படபடக்கிறார். நக்கீரனின் ஒவ்வொரு போராட்டத்திலும் ராம் பின்னால் இருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனையில் சி.சி.டி.வி. கேமராவை ஆஃப் செய்ததைப் போலவே, ராணுவ அமைச்சகத்திலும் கேமராவை அணைத்துவிட்டார்கள் போல. ஆவணங்களை திருடியது உண்மையா, இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை. மறைக்கப்பட்ட தகவல்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்று நூறாவது நாளில் அவர் கொடநாடு எஸ்டேட் சென்றார். அவர் வந்து சென்ற 6-வது நாளில் நக்கீரனில் இது அட்டைப்படமாக வெளியானது. அதுவரை ஜெயலலிதா, சசிகலா என தனித்தனி அட்டைப்படமாக பார்த்தவர்கள், இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பார்த்தார்கள். அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்று கையெழுத்து போடச்சென்றபோது, “இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது’’ என்றார்கள். அதற்கு நான் "அவங்க வீட்ல இருந்துதான் அண்ணே எடுத்தேன்'’என்றேன். அப்போதிருந்தே சோர்ஸை சொல்லாமல் இந்த பாடுபட்டுட்டு இருக்கோம்.

ராமை எதுவும் செய்ய முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்கூட நாம் இருக்கிறோம். பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்போம்''’என்றார் உறுதியாக.

கருத்துரிமைக்கான முழக்கங்களுடன் கவனத்தை ஈர்த்தது கண்டனக் கூட்டம்.

தொகுப்பு : ஆதனூர் சோழன், கமல்குமார்

படங்கள் : ஸ்டாலின்