திகார பலத்தால் யாரையும் அடக்கிவிடலாம் என்ற பா.ஜ.க. அரசின் எண்ணத்தில், “"பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக'’’என்ற முழக்கத்தின் மூலம் பலமாக அறைந்திருக்கிறார் தூத்துக்குடி மாணவி சோபியா. தூத்துக்குடி படுகொலையின் சோக நினைவுகளால் வெடித்துச் சிதறிய சோபியா என்ற தனி மனுஷியின் ஒற்றை முழக்கம், ஒட்டுமொத்த இந்தியாவின் குரலாகவும் ஒலித்திருக்கிறது. தமிழகத்தில் தனக்கெதிரான எந்தக் குரலையும், மாநில அரசின் உதவியோடு அடக்க நினைக்கும் மத்திய அரசு, மாணவி சோபியாவிற்கு தீவிரவாதி முத்திரை குத்த காரணம் தேடிவருகிறது என்பதுதான் தற்போதைய களநிலவரம்!

sofhia

தமிழிசை தள்ளுமுள்ளு

தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் சோபியா, கனடாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துவந்தவர். சமீபத்தில் ஆய்வுத்தேர்வை முடித்துவிட்டு, சென்னை வழியாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அதே விமானத்தில், குற்றாலத்தில் தன் முன்னிலையில் தேவேந்திர குல வேளாளர்கள் ஆயிரம் பேர் பா.ஜ.க.வில் இணையும் விழாவிற்காக பயணித்தார் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை. அவருக்குப் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சோபியா, "பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக' என முழக்கமிட்டதாக, விமானநிலையம் வந்தபிறகு கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இரண்டே நிமிடத்தில் நிகழ்விடத்தில் ஆஜரான விமானநிலைய காவல் ஆய்வாளர் நித்யா, தமிழிசையை சமாதானப்படுத்தினார். மாணவி சோபியாவை மன்னிப்பு கேட்கச் சொன்னபோது, மறுத்துவிட்டு மீண்டும், "பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'’என அவர் சொன்னது தமிழிசைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. “""அவதான் அறிவில்லாம பேசுறா... பொறுங்களேன்''’என ஆய்வாளர் நித்யா கேட்க, “""அவ அறிவிருப்பதால்தான் இப்படி பேசுறா...''’என்று கொந்தளித்த தமிழிசை அங்கிருந்து கத்திக்கொண்டே நகர்ந்தார்.

கைகொடுத்த தலைமைச் செயலாளர்

sofiyafather""மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது, பின்னணியையும் விசாரிச்சு நடவடிக்கை எடுங்க''’என போலீசாரிடம் எரிச்சல் காட்டிய தமிழிசை, அங்கேயே அமர்ந்து செல்போனில் பேசினார். எதிர்முனையில் இருந்தவரிடம் பேசிவிட்டு போனை வைத்தவர், “""தலைமைச் செயலாளர்கிட்ட பேசிட்டேன். இனி அவங்க பாத்துப்பாங்க''’என கட்சிக்காரர்களிடம் கூறியபடி கிளம்பினார். அவர் வெளியேறிய ஒன்றரை மணிநேரத்திற்குள், தூத்துக்குடி-புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை, டி.எஸ்.பி.க்கள் விமான நிலையத்திற்கு வரத்தொடங்கினர். ""கைது செய்யல. சாதாரண விசாரணைதான்'' எனக்கூறி சோபியாவை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று, எதுவும் பேசாமல் மாலை 7 மணிவரை உட்கார வைத்தனர். சோபியாவின் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்திற்கு வந்து கேட்டபோது, தாமதப்படுத்திய காவல்துறை.. ஒருகட்டத்தில், "இன்னும் மேலிடத்து உத்தரவு வரவில்லை'’என்று கூறியிருக்கிறது. சிறிதுநேரத்தில் ஐ.பி.சி. 290, 75(1) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சோபியா.

டென்ஷனான நீதிபதி

அப்போதுவரை பட்டினியாக இருந்த சோபியா, வயிறு வலியால் அவதிப்பட்டார். இரவு 10:30 மணிக்கு கணேசன் நகரிலுள்ள தூத்துக்குடி ஜே.எம்.3 நீதிபதி தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு சோபியாவை அழைத்துச்சென்றனர். வழக்கு விவரங்களைப் பார்த்த நீதிபதி, ""இந்த விவகாரத்துக்கு எதுக்கு 505 போட்டீங்க?''’என கோபமாக கேட்டபடி, அந்தப் பிரிவை வழக்கிலிருந்து நீக்கிவிட்டார். ""வயிறுவலி அதிகமாகிவிட்டது. மருத்துவமனை செல்லவேண்டும். ஜாமீன் தாருங்கள்'' என சோபியா தரப்பு கேட்டதற்கு, ""இங்கு ஜாமீன் வழங்கமுடியாது. காலையில் கோர்ட்டுக்கு வாங்க பாத்துக்கலாம். இப்போ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க''’எனக்கூறி அனுப்பினார். பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சோபியா.

சோபியாவுக்கு ஜாமீன்

மறுநாள் காலையில், ""இனி இதுபோல பேசக்கூடாதுன்னு நீங்கதான் உங்க மகளுக்கு அறிவுரை சொல்லணும்'' என தந்தையிடம் கூறிவிட்டு, மாணவி சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது ஜே.எம்.3 நீதிமன்றம். இதனிடையே மாணவி அட்மிட்டான மருத்துவமனை நான்காவது தளத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட போலீசார், மாணவி சோபியாவை யாரிடமும் பேசவிடாமல் அவருடைய வீட்டிலேயே இறக்கிவிட்டனர்.

பேசியதில் என்ன தவறு?

சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, ""பொதுவாகவே நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிரான கோபம் என் மகளுக்கு உண்டு. தூத்துக்குடி படுகொலைகள் குறித்து என் மனைவியிடம் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, தமிழிசை கடந்து சென்றிருக்கிறார். அப்போது "பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக' என அவள் கூறியதைக் கேட்டுவிட்டுதான் பிரச்சினை செய்கிறார். விமானத்தில் நடந்ததற்கு grijavidyanathanவிமானநிலையத்தில் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து கூச்சலிட்டு, பூதாகரமாக்கியதே தமிழிசைதான். கருத்துமோதலை அடிதடியாகவும், வழக்காகவும் மாற்றி மிரட்டுகிறார்கள். சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்கி அவளது எதிர்காலத்தை சிதைக்கவும் முயற்சி நடக்கிறது. எங்கள் தரப்பிலிருந்து வழக்கு தொடர்ந்தும் எந்தவித பலனுமில்லை''’என்கிறார்.

அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்

பேச்சுரிமைக்கு எதிரான இந்தக் கைது நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ""நானும் சொல்கிறேன்... பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக'' என ட்வீட் செய்து சோபியாவை ஆதரித்த மு.க.ஸ்டாலின், ""மாணவி சோபியாவின் எதிர்காலம் கருதி அவர்மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும். அதற்கான சட்ட உதவிகளை செய்துதரத் தயார்'' என தெரிவித்துள்ளார். ""சோபியா மீதான வழக்கினை வாபஸ் பெறவேண்டும். அதோடு அவரது தந்தை தொடர்ந்துள்ள வழக்கின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என தூத்துக்குடியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன். இடதுசாரிகள், காங்கிரஸ், தமிழ் அமைப்பினர் என பலரும் சோபியாவின் பா.ஜ.க. எதிர்ப்புக் குரலை எதிரொலித்தனர். தமிழ்நாடு கடந்தும் இந்தக் குரல் கேட்டது.

நக்சல் முத்திரை குத்துவதா?

""தமிழிசையைப் பார்த்து திடீரென சோபியா கோஷமிடவில்லை. தமிழிசையைப் பார்த்தவுடன் விமானத்தில் இருந்தபடியே இதுபற்றி டுவீட் செய்திருக்கிறார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டுவீட்டுகளை வைத்தே அடுத்த நகர்வுகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி படுகொலை, திருமுருகன் காந்தி, வளர்மதி போன்றோர் கைது, அர்பன் நக்சல் உள்ளிட்ட பலவற்றைக் குறித்து அவர் விவாதித்துள்ளார். இதையெல்லாம் வைத்து அவரை நக்சல் என முத்திரை குத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்கிவிட்டன. முதற்கட்டமாக அவரது குடும்பத்தினர் மூன்றுபேரின் செல்போன்களை வாங்கி வைத்திருக்கிறோம்''’என்கிறார் வழக்கை விசாரிக்கும் ஐ.பி. டீமிலுள்ள அதிகாரி ஒருவர்.

ஸ்னோலினும், சோபியாவும்

""தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் பேரணி மீது குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சிறுமி என்றும் பாராமல் வாயிலேயே சுட்டுக்கொன்றார்கள் ஸ்னோலினை. அதைப் பார்த்த வேதனையின் வெளிப்பாடுதான், சோபியா முழங்கியதற்குக் காரணமாக இருக்கும். சோபியாவும் எங்களுக்கு இன்னொரு ஸ்னோலின்தான். “"உன்னை என்ன செய்கிறேன் பார்'’என தமிழிசை மிரட்டல் விடுத்தது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இதோடு விடாமல், சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்கி, தீவிரவாதச் சாயம்பூசி, எதிர்காலத்தை நாசம் செய்யத்துடிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது. பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரான சமீபத்திய அடக்குமுறைகள் அரசமைப்புச் சட்டங்களின் செயல்பாடுகள் குறையத் தொடங்கிவிட்டதோ என்கிற அச்சவுணர்வை ஏற்படுத்துகின்றன''’ என்கின்றனர் சமூக ஆர்வலர்களான அக்ரி பரமசிவனும், மெரினா பிரபுவும்.

புதுக்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து சோபியாவிற்கு அனுப்பப்பட்ட சம்மனில், சோபியாவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. நீதிமன்றம்தான் இதுபோன்ற சம்மன் பிறப்பிக்க முடியும் என சோபியாவின் தந்தை சாமி ஏற்கெனவே நிராகரித்திருந்தார். காவல்துறை மீண்டும், மீண்டும் இதுபோன்ற சம்மன் அனுப்புவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

சோபியாவிடமிருந்து விமானத்தில் வெளிப்பட்டது, தரையில் வாழும் சாதாரண மக்களின் நியாயக்குரல்தான். அதனை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அந்த ஆய்வு மாணவி மீண்டும் கனடாவில் தன் படிப்பைத் தொடர உறுதியுடன் துணைநிற்க வேண்டும்.

-நாகேந்திரன்

Advertisment