புனே செல்வதற்காக அக்டோபர் 9-ஆம் தேதி காலை 8.15 சென்னை விமான நிலையத்தில் நமது ஆசிரியரும் இணையதள ஆசிரியர்குழுவின் வசந்த், மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரும் காத்திருந்தனர். ஏர்போர்ட் ஏ.சி.விஜயகுமார் உலவிக்கொண்டிருந்தார். ரெஸ்ட் ரூம் பக்கம் சென்ற ஆசிரியரை அவர் மடக்க, அடுத்த 5 நிமிடத்தில், அடையாறு டி.சி. ஷசாங்சாய் உடன் வந்த போலீஸ் படை சுற்றி வளைத்தது. என்ன காரணம் என்று கேட்ட ஆசிரியரிடம் முறையாக எதுவும் தெரிவிக்க வில்லை காவல்துறை. கழிவறைப் பக்கம் இருந்தபடியே உடன் வந்த இருவரிடமும் தன்னைப் போலீஸ் சுற்றி வளைத்திருப்பதைத் தெரிவித்தார் ஆசிரியர்.
ஏர்போர்ட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட செய்தி, மீடியாக்கள் வழியே காட்டுத் தீயாகப் பரவியது. அவருடன் வந்திருந்த இருவரும் 10 மணிவரை ஏர்போர்ட் போலீஸ் விசாரணைக்குள்ளாகி, அதன்பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆசிரியரிடம், ""உங்க மேலே ஒரு கம்ப்ளைண்ட் பதிவாகியிருக்கு'' என்று மட்டுமே சொன்ன போலீசார், அவரை எங்கு அழைத்துச் செல் கிறோம் என்பதையும் தெரிவிக்கவில்லை. அடையாறு-கிண்டி-ஜாம்பஜார்-திருவல்லிக் கேணி என பலவித தகவல்கள் பரவிய நிலை யில், நீண்ட அலைக்கழிப்புக்குப் பின், 10.30 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
கவர்னர் மாளிகை சம்பந்தப்பட்ட நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான செய்திக்காகத்தான் ஆசிரியர் இ.பி.கோ. 124-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டி ருக்கிறார் என்பது போலீஸ் மூலமாக ஊடகங்களுக்குப் பரவி, பிரேக்கிங் நியூஸ் பரபரத்தது. ஊடகத்துறையினர் சிந்தாதிரிப் பேட்டை நோக்கி வர, ஆசிரியரின் வழக் கறிஞர்கள் உள்பட யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
அரசியல் அரங்கிலும் ஆசிரியரின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டன அறிக்கையை முதலில் வெளியிட்ட வைகோ, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த வேகத்தில் சிந்தாதிரிப் பேட்டைக்கு வந்தார்.
தான் ஒரு வழக்கறிஞராக வந்திருப்ப தாகவும் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தனது வழக்கறிஞர் அட்டையைக் காட்டி போலீஸாரிடம் அனுமதி கோரினார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
அங்கிருந்த மீடியாவிடம் பேசிய வைகோ, ""நீதித்துறையையும் காவல்துறையையும் கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த எச்.ராஜாவை அழைத்து விருந்து வைக்கிறார் கவர்னர். ஆனால் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியிட்டதற்காக விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருப்பது சர்வாதிகார நடவடிக்கை. நக்கீரன் கோபால் இந்த சிறைக்கெல்லாம் அஞ்சமாட்டார்'' என்ற வைகோ, அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் பத்திரிகையாளர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை விடுதலை செய்யும்படி அவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். அந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, வைகோவையும் போலீஸார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வந்தார். அவரும் ஆசிரியர் கைதுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மறைமுகமாக சர்வாதிகார ஆட்சி நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
நக்கீரன் அலுவலக ஊழியர்கள் பலரும் கைது செய்யப்படலாம் என பதற்றமும் பரபரப்பும் அதிகரித்த நிலையில், நமது ஆசிரியரை மருத்துவப் பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது காவல்துறை. அங்கு ""பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக, பாசிச அ.தி.மு.க. ஒழிக'' என கோஷமிட்டார் ஆசிரியர். தகவலறிந்து அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொரு ளாளர் துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, எ.வ/வேலு ஆகியோர் வந்தனர். மருத்துவமனைக்குள் சென்று ஆசிரியரைச் சந்தித்துப் பேசினார் மு.க.ஸ்டாலின். நக்கீரன் ஆசிரியர் மீதான கைது நட வடிக்கையை வன்மையாகக் கண்டித்ததுடன், ""நக்கீரன் கோபாலை விடுதலை செய்யத் தவறினால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்'' என மீடியாக்களிடம் தெரிவித்தார். கூட்டம் அதிகரிப்பதைக் கண்ட போலீசார், மருத்துவமனையின் மற்றொரு வாசல் வழியாக ஆசிரி யரை அழைத்துச் சென்று, அல்லிக் குளம் வணிக வளாகத்தில் இயங்கி வரும் எழும்பூர் 13-வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் கோபிநாத் முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போதுதான் அவர் மீது என்ன வழக்கு என்ற விவரமே தெரிவிக்கப்பட்டது.
நக்கீரன் தரப்பில் சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் தலை மையில் சீனியர்கள் இளங்கோவன், ப.பா.மோகன், வழக்கறிஞர்கள் சிவகுமார், பாவேந்தன், ஆரோக் கியம், வெங்கடாசலபதி, வர்கீஸ், டெல்லிராஜ் உள்ளிட்ட வழக்கறிஞர் கள் அணி வலுவான வாதங்களை வைத்தது. அது குறித்து பின்னர் நம்மிடம் விளக்கிய சீனியர் வழக் கறிஞர் இளங்கோவன், ""குடியரசுத் தலைவரையோ, ஆளுநரையோ பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 124 பாய்கிறது. நக்கீரன் இதழில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பற்றி ஏப்ரல் மாதம் மூன்று கட்டுரைகளும், செப்டம்பரில் ஒரு கட்டுரையும் வெளிவந்தது. நிர்மலாதேவி கூறிய கருத்துகள் என்கிற ரீதியில் இந்தக் கட்டுரைகளின் கருத்து இருந்தது. நான்குமுறை ஆளுநரைச் சந்தித்ததாக நிர்மலா தேவி சொல்லியிருக்கிறார். இதுபோன்ற செய்தி வெளியானதால் ஆளுநரின் எந்தப்பணி தடைசெய்யப் பட்டது? ஆளுநர் தன்னுடைய மாளிகையில் இருக்கிறார். பத்திரிகை மக்களின் மத்தியில் வெளியாகிறது.
கட்டுரைகள் வெளியான காலத் தில் ஆளுநரின் எந்த சட்டரீதியான வேலை தடைப்பட்டுப் போனது? இந்த 124 பிரிவின் கீழ் வழக்குத் தொடர வேண்டுமென்றால், கை ஓங்குவது, தாக்குவது அல்லது மிரட்டுவது என ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். பணிசெய்யப் போகிறவரை செய்யவிடாமல் தடுத்திருக்க வேண்டும். உதாரணத் திற்கு, ராஜீவ் வழக்கில் சிறைப்பட்டிருக்கும் ஏழுபேரின் விடுதலை தொடர்பான கோப்பில் கையொப்பமிடும் ஆளுநரின் மக்கள் பணியை நக்கீரன் கட்டுரைத் தடுத்துவிட்டதா? பார்வைப் பரிமாற்றம்கூட இந்தப் பிரிவின் கீழ் கொண்டுவரப் படும். ஆனால், நக்கீரன் கோபாலும், ஆளுநர் பன் வாரிலாலும் நேருக்கு நேர் சந்திக்கவே இல்லையே. கட்டுரையில் நிர்மலாதேவி கூறிய கருத்தே வெளி யாகியிருக்கிறது. அந்த உண்மையைச் சொல்ல விடாமல் சட்டம் போட்டுத் தடுக்கும் முயற்சியா இந்த கைது நடவடிக்கை என வாதிட்டோம்.
ஆளுநர் இந்தக் கட்டுரையைப் படித்ததாக வோ, இதனால் அவரது பணிக்கு இடையூறு ஏற்பட்டதாகவோ, குறிப்பிட்ட சமயத்தில் அவரது எந்தப்பணி தடைப்பட்டது என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. எனில், இத்தனை நாட்கள் வேலை செய்யாமல் சும்மா இருந்திருக் கிறாரா? இந்தச் செய்தி உண்மையானதாக இல்லையென்று கருதினால், அவதூறு வழக்கு பதிந்திருக்கலாமே? என நீதிபதி அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். அவர்களும் அதனை ஏற்று, ""அதற்கு வாய்ப்பிருப்பதாக வாதிட்டார்கள்'' என்றார்.
வாதங்கள் வலுவாகத் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் தொல்.திருமாவளவன் நீதிமன்றத்திற்கு வந்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வந்தார். சிறிது நேரத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் அங்கு வந்தார். காவலர்களின் அனுமதியுடன் அவர் கோர்ட் ஹாலுக்குள் சென்றார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் புகாருக்கு காரணமான நக்கீரன் இதழின் அட்டைப் படத்தை என்.ராமிடம் காட்டிய நீதிபதி கோபிநாத், ""இப்படிப்பட்ட படத்தை நீங்கள் வெளியிடுவீர்களா?'' என்று கேட் டார். அதற்கு என்.ராம், "நான் வழக்கறிஞர் இல்லை' என்று தெரிவித்தார். உடனே நீதிபதி, ""பரவா யில்லை உங்கள் கருத்துகளை எக்ஸ்பெர்ட் கருத் தாக பதிவு செய்கிறேன்'' என்றார். கீழ்நீதிமன்ற வர லாற்றில் முதன்முறையாக மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் கருத்துகளை நீதிபதி பதிவு செய்தார்.
என்.ராம் தன்னுடைய கருத்தாக, “""நான் வழக் கறிஞர் இல்லை. ஆனால், தி ஹிந்து பத்திரிகையின் முன்னாள் முதன்மை ஆசிரியர் என்ற வகையிலும், ஹிண்டு குழுமத்தின் தலைவர் என்ற வகையிலும் கருத்துத் தெரிவிக்கிறேன். இதற்கு முன்னால் ஆளுநர்களை விமர்சனம் செய்தும் பாராட்டியும் பல தலையங்கங்களை எழுதியிருக்கிறோம். அப்போதெல்லாம் எந்த ஆளுநரும் 124-ஆவது பிரிவை பயன்படுத்த நினைத்ததில்லை. இப்போது நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது அனு மதிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் மோசமான முன்னுதா ரணம் ஆகிவிடும்.
எங்களுடைய பத்திரிகை பணி வேறுபட்டது. இப்படிப்பட்ட படங்களை நாங்கள் வெளியிட மாட்டோம். ஆனால், நக்கீரனின் புலனாய்வுத் தன்மை வேறுபட்டது. அதை நமது சட்டம் அனு மதிக்கிறது. இந்தப் படத்தை வெளியிட்டதற்காக இவ்வளவு பெரிய அடக்குமுறை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் அவர்களை சிறையில் அடைத்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதன்மூலம் நீதித்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீணாகிவிடும். அதற்கு இந்த நீதிமன்றம் ஒரு காரணமாகிவிடக் கூடாது.
நாட்டிலேயே இந்தப் பிரிவில் ஒரு பத்திரிகை யாளர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இந்தப் பிரிவை உபயோகிப்பதற்கான முகாந்திரமே இல்லை. பத்திரிகையில் வரும் கட்டுரைகளுக்கு 19(1)ஏ பிரிவு சட்டப்பாதுகாப்பு வழங்குகிறது. பத்திரிகையில் வரும் படங்களுக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது'' என்றார் விரிவாக. என்.ராம் தெரிவித்த கருத்துக்கள் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றன. அவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கோபிநாத், "நக்கீரனில் வெளியாகியிருந்த கட்டுரைகள் தொடர்பாக ஆளுநர் புகார் கொடுத்திருந்தாரா' என அரசுத் தரப்பைக் கேள்விகேட்டார். பின்னர், தீர்ப்பை சற்றுநேரம் தள்ளிவைத்தார். வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் நக்கீரன் ஆசிரியருடனும், என்.ராம் அவர்களுடனும் நீதிமன்ற வளாகத்திலேயே கலந்துரையாடினர். அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடியது.
அடிப்படை ஆதாரமற்ற வகையில் 124-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டு நமது ஆசிரியரை சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார். இதையடுத்து விடுதலையான ஆசிரியர், நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில்வந்து, தன்னைக் கைது செய்த விதம் குறித்து விரிவாக விளக்கி, நக்கீரன் மேற்கொண்ட சட்டப் போராட் டத்தைத் தெரிவித்து, கருத்துச் சுதந்திரத்துக்கு துணைநின்ற ஊடக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
பாசிச அதிகாரத்தின் 8 மணி நேர சட்டவிரோத அட்டூழியங்களை நீதிமன்றத்தில் சட்டத்தின் துணையுடன் தகர்த்தெறிந்து நெஞ்சுயர்த்தி நிற்கிறது உங்கள் நக்கீரன்.
-மனோசௌந்தர், அரவிந்த், ஜீவாபாரதி, அருண்பாண்டியன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக், குமரேஷ்
ஆணித்தர வாதம்!
""பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட்ட பிறகுதான் அரசாங்கமே அக்குற்றத்தை தடுக்கவும் தண்டிக்கவும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செய்தது. அவரது பணியை எந்த விதத்திலும் தடுக் காதபோது 124 பிரிவின்படி கைது செய்தது செல்லாது. ஒருவேளை, நக்கீரனின் கட்டுரை உண்மைக்கு புறம்பாக இருந்தால் இந்திய தண்டனை சட்டம் 500 பிரிவின்படி அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாம். நக்கீரனுக்கு அவதூறு வழக்குகள் புதிதல்ல. நிர்மலாதேவி விவகாரம் குறித்து மேலும் செய்தி கிடைத்தால் வெளியிடுவோம். அதுதான், ஊடகப்பணி. அந்த பணியை தடுப்பதற்கான மிரட்டலாகவும் அதிகார துஷ்பிரயோகமாகவும்தான் இந்தக் கைது. இது, இந்திய அரசியல் அமைப்பு வழங்கியிருக்கும் பிரிவு 19-ன் படி கருத்துரிமை, எழுத்துரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயல்'' என்று தனது அழுத்தமான வாதங்களை முன்வைத்தார் நமது மூத்த வழக்கறிஞர் பி.டி. பெருமாள்.