கடந்த 13ஆம் தேதி டெல்லி நோக்கி டிராக்டர் களில் புறப்பட்ட பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் போடப்பட்ட தடுப்புகளை உடைத்துக் கொண்டு விவசாயிகள் முன்னேறினார்கள். போகும் போதே சில மாதங்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களையும், அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் களையும் கொண்டு சென்றனர்.
விவசாயிகளின் தீவிர மான போராட்டத்தை ஒடுக்க நினைத்த பா.ஜ.க. ஒன்றிய அரசு, விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை மழைபோல வீசியது. அதனைச் சமாளிக்க ஈரச் சாக்குகளையும், அதிவேகக் காற்றைத் தள்ளும் கம்ப்ரசர்களையும் விவசாயிகள் பயன்படுத்தினர். ட்ரோன் மூலம் குண்டு வீசிய போது பட்டங்களை விட்டு ட்ரோன் களைத் தடுத்து நிறுத்தினர். எனினும் ஏராளமான விவசாயிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ரப்பர் குண்டுகள் தாக்கியதில் பல விவசாயிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஒன்றிய அரசின் தாக்குதலால் கியான் சிங் என்ற 65 வயது விவசாயி முதல் பலியானார்.
நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லும் இந்தியா, டெல்லி பார்டரில் விவசாயிகளை இப்படி வன்கொடுமை செய்வதை இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளால் ஏற்க முடியவில்லை. நாடு முழுக்க ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக டெல்டா மாவட்ட கட்சி சார்பற்ற அனைத்து விவசாய சங்கங்களும், விவசாயிகளும் இணைந்து தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்திற்கு வந்தபோது, போலீசார் முன்னதாகவே தடுப்புகளை வைக்கத் தயாரானார்கள். பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமையில் பச்சைத் துண்டுகளோடு திரண்டு வந்த விவசாயிகளை பேரிகார்டுகள் போட்டுத் தடுத்து நிறுத்தி உள்ளே போகக்கூடாது என்று போலீசார் சொல்ல, "நீங்க எல்லாம் விவசாயி விளைவிக்கிறதைத் தானே சாப்பிடணும்?'' என்று விவசாயிகள் குரல் எழுப்பினர். தடுப்புகளைத் தள்ளிவிட்டுச் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திரண்டிருந்த விவசாயிகளைத் தடுக்கும் அளவுக்கு போலீசாரால் முடியவில்லை. ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து மாலையில் வெளியில் விட்டனர். "இது முதற்கட்ட போராட்டம் தான். இன்னும் நிறைய இருக்கு'' என்று கூறியபடி அங்கிருந்து விவசாயிகள் கலைந்துசென்றனர்.
இதேபோல இன்னும் சில நாட்களில் புதுக்கோட்டை - தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் டிராக்டர் பேரணிக்கு தயாராகி வருகின்றனர். டெல்லி போராட்டத்தை ஒடுக்க நினைத்து இன்று இந்தியா முழுவதும் பரவச் செய்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு.