100 ஆண்டுகளைக் கடந்தும் வலிமையாக, தமிழக-கேரள எல்லையில் அமைத்துள்ள முல்லைப்பெரியாறு அணை யைக் கட்டிக் கொடுத்தவர் கர்னல் பென்னிகுவிக். தன் சொத்தை விற்று அணையைக் கட்டிய அந்த ஆங்கிலேய பொறியாளரைக் கடவுளாக மக்கள் வணங்கி வருகின்றனர். அத்தகைய தேனி மாவட்டத்தில்தான் செம்மண்ணால் தடுப்பணை கட்டி, புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது தமிழக அரசு. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்தக் கட்டுமானப் பணியில்தான், முறை கேடுகள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஆண்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேக்கம் பட்டியில் கோத்தலக்குண்டு மலையடிவாரத்தில் உள்ள வண்ணானூத்து ஓடையில், சுமார் 14 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்யப் பட்டது. இந்தத் தடுப்பணை என்பது இப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மானாவாரி நிலங்கள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்குக் கிடைத்த திட்டமாகும்.
அதன் அடிப்படையில் தடுப்பணை கட்டும் பணி கடந்த வாரம் தொடங்கியது. ஆனால் தடுப்பணை கட்டுவதற்கு சிமெண்டு, மணல் கலவைக்கு பதில் செம்மண், எம்-சாண்ட் கலந்த கலவையைப் பயன்படுத்தி, தடுப்பணை கட்டும் பணி தொடங்கியது. அதைக் கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், இப்படி தரமற்ற தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பணியை இதேபோல் தொடர்ந்தால் போராட்டத்தில் குதிப்போம் என்றும் அவர்கள் எச்சரித்தனர். அதோடு நிறுத்தாமல், அந்த தரமற்ற தடுப்பணைக் கட்டுமானப் பணிகளைப் புகைப்படம் எடுத்து வாட்சப் மற்றும் பேஸ்புக் வாயிலாக சமூக வலை தளங்களில் பகிரங்கப்படுத்த, அது இப்போது வைரலாகி வருகிறது.
இதைக் கண்டு டென்ஷன் அடைந்த காண்டிராக்டர் மாரிமுத்துவோ, இரவோடு இரவாக பொக்லைன் எந்திரம், லாரிகளுடன் தனது ஆட்களை அனுப்பி, தரமற்ற நிலையில் கட்டப்பட்ட அந்த தடுப்பணையைப் பெயர்த்து எடுத்துச்சென்று விட்டார். அங்கு போடப் பட்டு இருந்த தளவாடப் பொருட்களும் இரவோடு இரவாக அகற்றப்பட்டு தடுப்பணை பணி தொடங்கியதற்கான அடையாளமே இல்லாத அளவிற்குச் செய்து விட்டனர்.
""இந்தப் பணிக்கு கலெக்டர் தலைவர் என்பதால் அவரிடம் இந்த பிரச்சினையை விவசாயிகள் கொண்டு செல்ல இருந்த நிலையில், இரவோடு இரவாகத் தடுப்பணை அகற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் நள்ளிரவில் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்து விட்டோம். ஆனால் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சிலர் விவசாயிகளை தொடர்பு கொண்டு மிரட்டி வருகின்றனர். இந்த தடுப்பணையை அரசு கட்டவில்லை என்றும் விவசாயிகளே கட்டியதாகவும் பொய்யான தகவலைச் சொல்லும்படி நிர்பந்திக்கின்றனர். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்கவில்லை. எனவே, இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உரிய நடவடிக்கை எடுத்து, தரமான தடுப்பணை கட்டிக்கொடுக்க வேண்டும்.
அதேபோல் இந்த தரமற்ற கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து, அவர்மீதும், அவருக்குத் துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நாகலாபுரம். வால்பாறை பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக பல தடுப்பணைகள் இதேபோல் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளன. அந்த தடுப்பணைகளையும் ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்து பணிகளிலும் முறைகேடுகள் நடந்து வருகிறது. அதனால விவசாயிகள், அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழுவை மாவட்ட கலெக்டர் நியமித்தால்தான் இப்படிப்பட்ட முறைகேடு களைத் தடுக்க முடியும்'' என்கிறார் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஜெயமங்கலம் கண்ணன்
இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் நாம் கேட்ட போது...“""அந்தத் தடுப்பணை சம்பந்தமாக அதிகாரிகளிடம் விசாரணை செய்து வருகிறேன். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முடித்துக் கொண்டார்.
செம்மண்ணில் தடுப்பணை கட்டப்பட்ட தும், அதை இரவோடு இர வாக அகற்றியதும் தேனி மாவட்ட விவசாயி கள் மத்தியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.
-சக்தி