விவசாய விளைபொருட்களை சாலையில் உலரவைப்பதாலும், மாடுகளை சாலையை அடைத்தவாறு ஓட்டிச் செல்வதாலும் அச்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாகிவருகிறது. உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செம்மணங் கூரைச் சேர்ந்தவர் சதீஷ், இவருக்கு விக்னேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் கடந்த ஆண்டு, பெயிண்டிங் வேலை செய்வதற்காக திருநாவலூர் பகுதிக்கு சென்றுவிட்டு வேலை முடிந்து வீட்டுக்கு டூவீலரில் திரும்பி வரும்போது நரி யோடைப் பகுதியில் சாலையில் மாடுகள் திரளாகக் குறுக்கிட்ட தில், சதீஷ் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு பலத்த காய மடைந்தார். உடனடி யாக உளுந்தூர் பேட்டை அரசு மருத் துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும், மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு மாத காலமாக கோமா நிலையிலிருந்து தற்போது மீண்டுள்ளார். ஆனால் அவருக்கு பழைய நினைவுகள் மறந்துவிட்டன. தெளிவாகப் பேச முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளார். அந்த விபத்து இவரது குடும்பத்தையே நிலைகுலையச் செய்துவிட்டது.
திட்டக்குடியில், அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய வடகராம்பூண்டியைச் சேர்ந்த இளங்கோவன், கடந்த மாதம் ஒருநாள் இரவு, திட்டக்குடியிலிருந்து நைனார்பாளையம் நோக்கி பேருந்தை ஓட்டிச்சென்றபோது, அந்த சாலையில் கற்களை வைத்து, அவற்றின்மீது எள் செடிகளைப் பரப்பிக் காய வைக்கப்பட்டிருந்தன. டிரைவர் இளங்கோவன், பஸ்ஸை எள் செடி மீது ஓட்டிச் சென்றபோது, கல்மீது ஏறிய பஸ், அப்படியே புரண்டு சாய்ந்து விழுந்ததில், டிரைவர் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். கண்டக்டர் அசோக்குமார் இடுப்பு, கால்களில் பலமான அடிபட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை, நெடுஞ்சாலை, தேசிய சாலைகளில், விவசாயிகள் தாங்கள் விளைய வைத்த தானியங்களை அறுவடை செய்தவுடன் அவற்றை உலரவைக்கவும், பிரித்தெடுக்கவும் சாலைகளில் பல கிலோமீட்டர்களுக்கு பரப்பி வைக்கிறார்கள். மரக்கட்டை, கற்களையும் அதற்காக சாலைகளில் வைக்கிறார்கள். வாகனங்கள் அவற்றில் சிக்கி விபத்தானால் யார் பொறுப்பு?
இதேபோன்று அரியலூர் மாவட்டம் சிலப்பனுரை சேர்ந்த ரவி என்பவரது மனைவி சாந்தி, மகன் அமுதரசனுடன் மருத்துவச் சிகிச்சைக்காக கடலூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். விருத்தாசலம் புறவழிச் சாலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த கம்பு தானியத்தின்மீது ஏறிய டூவீலர் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், அப்பக்கமாக வந்த டிப்பர் லாரி சக்கரத்தில் சிக்கி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமுதரசன் காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து விருத் தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இதேபோல் உளுந்தூர்பேட்டை -விருத்தாச லம் சாலையில், வடக்கு நிமிலி கிராமப் பகுதியில் உளுந்து செடி பரப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்பக்கமாக டூவீலரில் வந்த இருவர், அவற்றின் மீது பயணித்தபோது நிலைதடுமாறி விழுந்ததில், இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இப்பகுதியிலுள்ள சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளில் ஒருவரான சேதுராமன் கூறுகையில், "பொதுவாக விபத்து என்பது எதிர் பாராமல் நடப்பது. ஆனால் இப்படிப்பட்ட விபத் துக்கள், எதிர்பாராமல் நடப்பவையல்ல. சாலை நடுவே இதுபோன்ற தானியங்களை, செடிகளை உலரவைப்பதைத் தடுத்தாலே இவ்விபத்துக்களைத் தவிர்த்திருக்கலாம். விபத்து நடக்கும் எனத் தெரிந்தும் விவசாயிகள் இதுபோன்ற தவறுகளைச் செய்யலாமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டோம். "தவறுதான். கிராமங்களில் தானியங்களை சுத்தம் செய்யவும், உலர வைக்கவும் அதிக அளவில் உலர்களங்கள் இல்லை. ஏற்கெனவே பல ஊர்களில் கட்டப்பட்ட உலர்களங்கள் சிதிலமடைந்து விட்டன. அதனால், தவறு எனத் தெரிந்தும்கூட சாலையில் தானியங்களை சுத்தம் செய்வதையும், காய வைப்பதையும் தவிர்க்க முடியவில்லை'' என்கிறார் விவசாயி ஆறுமுகம்.
"மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சமீபத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், "விளைபொருட்களை உலர வைக்க, சுத்தம் செய்ய, கிராமப் பகுதிகளில் உலர்கள வசதிகள் இல்லையென்பதையும், இதனால்தான் சாலையில் காய வைக்கவேண்டிய நிலை' என்றும் எடுத்துச் சொன்னோம். "சாலையில் தானியங்களைக் காய வைக்காதீர்கள்' என்று காவல்துறையினர் அவ்வப் போது அறிவுறுத்துகிறார்கள். தெரிந்தே தவறு செய்யவேண்டிய நிலையில் விவசாயிகளான நாங்கள் உள்ளோம்'' என்கிறார் கருப்புசாமி.
இதுபோன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், பவுஞ்சூர், செய்யூர், கூவத்தூர், சூனாம்பேடு ஆகிய பகுதிகளில் அறுவடை செய்த தானியங்களை சாலைகளில் கொட்டி காய வைப்ப தால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும்.
மேலும், "தானியங்களை சுத்தம் செய்வதற் காக சாலையிலேயே காற்றில் தூற்றுகிறார்கள். அந்த தூசிகளும் வாகன விபத்துக்களுக்கு காரணமாகின்றன. கண்களையும் பாதிக்கின்றன. மத்திய -மாநில அரசுகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை உலர்த்தவும், சுத்தம் செய்யவும், கிராமப்புறங்களில் மிக அதிக அளவில் உலர்களங்களை உருவாக்கித் தரவேண்டும்'' என்கிறார் விவசாயி கார்மேகம்.
"மழையிலும், வெயிலிலும் சிக்கிச் சீரழிந்து இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து காப்பாற்றி தானியங்களை விளையவைக்கும் விவசாயிகளுக்கு போதுமான உலர்களங்கள் இல்லை. மத்திய -மாநில அரசுகள், விமான நிலைய விரிவாக்கம், சிப்காட் தொழிற்பேட்டை சாலை விரிவாக்கம், அரசுக்கு தேவையான கட்டடங்கள் எனப் பல்வேறு திட்டங்களுக்கு பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப் படுத்தி, பல ஆயிரம் கோடி பணத்தை செலவு செய்கின்றன. ஆனால் விவசாயிகளின் தானியங் களை உலர வைக்கவும், சேகரிக்கவும் உலர் களங் களை உருவாக்க மட்டும் நிதி ஒதுக்க முடியவில் லையா? ஏற்கெனவே அமைக்கப்பட்ட சின்னச் சின்ன உலர் களங்கள் சிதிலமடைந்துவிட்டன. ஒரே நேரத்தில் பலரும் அறுவடை செய்யும் போது உலர்களங்கள் கிடைக்காமல் போகிறது. அதனால்தான் சாலைகளைப் பயன்படுத்து கிறார்கள். எனவே அரசு ஒரு தனித்திட்டம் உருவாக்கி, இந்த குறைகளைச் சரி செய்தால் மட்டுமே விபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் தடுக்க முடியும். அதில் மாற்றுக்கருத்து இல்லை'' என்கிறார் எழுத்தாளரும் வழக்கறிஞருமான விருத்தாசலம் பூமாலை குமாரசாமி.
தற்போது விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடக்கும் சூழலில்... உலர்களங்கள் அமைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறி, அதற்கான நிதி ஒதுக்கி விவசாயிகள், வாகன ஓட்டிகள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.
தமிழகத்திலுள்ள பெரும்பாலான உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரக் கடைகள் ஆகியவற்றின் விளம்பரப் பலகைகள் சாலைகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்படுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலைகளில் அனைத்துத் துறை அலுவலர்களும், அதிகாரி களும், காவல்துறையினரும் பயணம் செய்கிறார் கள். யாரும் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுறுத்துவது இல்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் தொழுதூர் அருகேயுள்ள திருமாந்துறை டோல்கேட் முதல் பெரம்பலூர்வரை இருசக்கர வாகனங்கள், ட்ராக்டர் போன்ற விவசாய வாகனங்கள் எதிர் திசையில் நேருக்கு நேராக சாலை விதிகளைப் பற்றி கவலைப்படாமல் வரு கிறார்கள். இதனால் விபத்துக்கள் நடக்கின்றன.
இதுகுறித்து பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து பொறுப்பு அலுவலரை நேரில் சந்தித்து முறையிட்டோம்.
"எங்கள் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லை. நானே பொறுப்பு அதிகாரியாக இங்கு பணி செய்கிறேன். இருந்தும் இங்குள்ள சாலை ஆய்வாளர் அவ்வப்போது சாலையில் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். மக்களின் ஒத்துழைப்பு பெரிதாக இல்லை. எதைப்பற்றியும் கவலைப் படாமல் வாகன ஓட்டிகள் தாறுமாறாகச் செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தங்கள் உயிரைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கவலை இருந்தால்தான் விபத்துக்களைத் தவிர்க்க முடியும்'' என்கிறார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்.
சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்திற்கு மட்டுமே என்பதை ஒவ்வொரு வரும் உணர வேண்டும்!