இயற்கை வளம் பாதுகாப்பு, புவி வெப்ப மயமாதலைத் தடுத்தல் என உலக அளவில் பேசப்பட்டாலும் உள்ளூர் நிலைமை வேறுவிதமாகத்தான் இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் -மன்னார்கோட்டை ஊராட்சி -எம்.சின்னையாபுரத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சந்தனபிரபு, ஸ்ரீதர், செல்வகுமார் ஆகியோர் கேள்விகளை எழுப்பினர்.
என்ன விவகாரம் இது?
வறட்சியான விருதுநகர் மாவட்டத்தில், மன்னார்கோட்டை சின்னையாபுரமும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் விவசாயம் செழித்தோங்கும் பூமியாக உள்ளன. இங்கே, கல் குவாரிகளும் எம்.சாண்ட் உற்பத்தியும், ‘புளூ மெட்டல்ஸ்’ என்ற பெயரில், மிரட்டலான அரசியல் பலத்துடன், விவசாய நிலங்களுக்கு மத்தியில் விதிமீறலாக இயங்கி வருகின்றன.
கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின்போது, விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் செந்நெல்குடி மாரியப் பன், சின்னையாபுரத்தில் கல்குவாரி நடத்துவதற்கு இசைவாணை மட்டுமே பெற்று, எத்தனை அடி ஆழம் தோண்டவேண்டும் என்பதற்கான முறையான அனுமதி பெறாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். இது புகாரான நிலையில், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA), சுற்றுச்சூழல் தண்டம் விதிப்பதற்காக, தோண்டப்பட்ட உயரம், அகலம், ஆழம் குறித்த அளவீட்டைக் கணக்கிடும்படி கனிமவளத்துறையிடம் தெரிவித்தது.
அத்துறையினரோ, தண்டம் மூலம் கோடிகளில் அரசுக்கு வருவாய் வருவதைத் தடுத்ததோடு, இந்த விவகாரத்திலிருந்து தப்பிப்பதற்கான வழியையும் செந்நெல்குடி மாரியப்பனுக்கு காட்டியுள்ளனர். அவரும் ‘உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தொடர்ச்சியாக கல்குவாரியை நடத்த முடியவில்லை. அதனால், "ஐந்தாண்டுகளுக்கு கல்குவாரி குத்தகை உரிமம் வழங்கக் கேட்ட விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்'’என்று புவியியல் மற்றும் சுரங்கத் துறையினருக்கு கடிதம் எழுதி, விவர மாக நழுவிவிட்டார்.
விவசாய பம்பு செட் அறைகள் எல் லாம் தெறித்து விழுந்த குவாரி கற்களால் சிதிலமாகியிருந்ததை அந்தப் பகுதியில் கள விசாரணை நடத்திய போது, நேரிலேயே பார்த்தோம். கிணறுகள் சரிந்து விழுந்ததும் நடந் துள்ளது. கல்குவாரிகள் வெடிவைத்து தகர்த்த போது நிலம் கடுமை யாக அதிர்ந்து, பயிர் களை சேதப்படுத்தியுள் ளன. தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, மானாவாரி பயிர்களான நிலக்கடலை, பாசிப்பயறு போன்றவை தப்பவில்லை. மாடு வளர்ப்பு, பால்பண்ணை தொழிலும்கூட, கல்குவாரிகளால் மூடுவிழா கண்டது.
தான் உயிராக மதித்துவரும் விவசாயத்துக்கு செந்நெல்குடி மாரியப்பனால் ஆபத்தான சூழல் உருவாகிவருவதை அறிந்த பெரியசாமி என்பவர், 2008-லிருந்தே ஆட்சேபனை மூலம் எதிர்ப்பையும், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார். 2020-ல் பெரியசாமி மரணித்துவிட, அவருடைய மகன் சந்தனபிரபு சட்டப் போராட்டத்தை தொடர்கிறார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகள் எழுப்பி பதில் பெற்று, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சளைக் காமல் புகார் அனுப்பியிருக்கும் சந்தனபிரபு, ‘மாரியப்பனின் எம்.சாண்ட் தொழிற்சாலையான ஸ்ரீகணபதி புளுமெட்டல்ஸி லிருந்து லாரிகளோ, டிராக்டர்களோ வெளியேறுவதற்கான பாதை இல்லாததால், நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து பாதை யாக்கி பயன்படுத்தி வருகிறார். அதனால், மண் சரிவு ஏற்பட்டு ஓடை தூர்ந்துபோக வாய்ப்புள்ளது. விவசாய நிலங்களினூடே கனரக வாகனங்களை இயக்குவதால், நிலங்கள் அனைத்தும் இயற்கைத் தன்மையை இழந்ததுடன், மலட்டுத்தன்மை உடையதாக மாறிவிட்டன..’ என்பதை ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
‘எம்.சாண்ட் கிரஷர் அமைப்பதற்கு இவ்வலுவலகத்திலிருந்து அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை’என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், ‘அனுமதியின்றி செம்மண் விற்பது, கல்குவாரியிலிருந்து தண்ணீர் விற்பது, நீர் செல்லும் ஓடையை ஆக்கிரமித்துள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என புவியியல் மற்றும் சுரங்கத் துறைக்கும், பொதுப்பணி (நிலத்தடி நீர் பிரிவு) துறைக்கும், விருதுநகர் தாலுகா வட்டாட்சி யர் மற்றும் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கும் கடிதம் வாயிலாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்ட நிலையில், ‘"இந்த விதிமீறல் தொழிற்சாலைக்கு மின் சார இணைப்பு வழங்கக் கூடாது'’என்று சந்தனபிரபு ஆட்சேபனை தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ளது. ஆனா லும், வருவாய்த்துறையும் மின்சார வாரியமும் கவனிப்புக்கு ஆளாகி, மின்னிணைப்பு தந்துள்ளன.
விருதுநகர் ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலர் செந்நெல்குடி மாரியப்பன் நம்மிடம், "முறைப்படி லைசன்ஸ் போட்டிருக் கோம். முறைப்படி சீட்டு வாங்கிருக்கோம். வாங்கிய லைசென்ஸுக்கே இன்னும் கல் எடுக்கல. வேற என்னத்த சொல்ல?''’ என்று விவகாரத்துக்குள் நுழைய விரும் பாமல், ஏதோ ஒப்புக்கு பேசி முடித்துக் கொண்டார்.
விருதுநகர் தாலுகா வட்டாட்சியர் செந்தில் வேலை தொடர்புகொண் டோம்.
“"மின்வாரியத்துல வரைபடம் கேட்டாங்க. கொடுத்திருக்கோம். நானே போய் பார்த்தேன். ஓடைல ஆக்கிரமிப்பெல்லாம் இல்ல. அவங்களுக்குள்ள என்ன மோட்டிவோ தெரியல. டிபார்ட்மென்ட குற்றம் சொல்லுறாங்க''’என்றார் கூலாக.
"மினிமம் பத்தாயிரம். அதற்குக் குறைவாக லஞ்சம் வாங்கமாட்டார்'’என்று சந்தனபிரபு குற்றம்சாட்டிய செயற்பொறியாளர் (மின் பகிர்மானம்) அகிலாண் டேஸ்வரியிடம் பேசினோம். "அடேங்கப்பா... நான் லஞ்சம் வாங்குறேன்னு எழுதியே கொடுத்துட்டாரா சந்தன பிரபு?''’என்று ஆச்சரியம் காட்டிவிட்டு,
"ஓடை புறம்போக்குன்னு தாசில்தார் எழுதிக் கொடுத்துட்டாரு. நாங்களும் ஹைகோர்ட் லாயர்கிட்ட லீகல் ஒபீனியன் வாங்கியிருக்கோம். ஆரம்பத் துல இருந்தே பெட்டிஷன் போட்டுக்கிட்டே இருக்காங்க. தேவையான டாகு மெண்ட்ஸ் தந்தாங்கன்னா சப்ளை கொடுங்கன்னு மின்சார வாரியம் சொல்லுது. இதெல்லாம் செக்ஷன் ஆபீஸ்ல நடக்கிற வேலைகள். எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. டிஸ்கனெக்ட் பண்ணுங்கன்னு கோர்ட் தீர்ப்பு சொன்னா.. டிஸ்கனெக்ட் பண்ணிருவோம். எங்களுக்கு எல்லா கன்ஸ்யூமரும் ஒண்ணுதான்''’என்று விளக்கினார்.
சந்தனபிரபு நம்மிடம், "நீரோடை ஆக்கிரமிப்ப நேர்ல பார்த்தீங்கள்ல.. தாசில்தார் ரோட்டு மேலயே நின்னுட்டுப் போயிட்டாரு.. எத்தனை பெரிய தவறு பண்ணு னாலும் ஒண்ணுமே நடக்காத மாதிரி ரொம்ப நல்லா விளக்கம் தருவாங்க அதிகாரிங்க. உண்மையச் சொல்லணும்னா.. விவ சாயத்துக்கு ஆதரவா அரசுத்துறையினர் யாரும் இல்ல. லாப, நஷ்ட கணக்கு பார்த்து விட்றாம.. விவசாயமே மூச்சுன்னு விடாப்பிடியா அதுக்குள்ளேயே கிடையா கிடக்கிற எங்க கிராமத்து ஜனங்க மாதிரிதான், எல்லா ஊரு விவசாயிகளும் இருக்காங்க. விவசாயத்தோட பலன் எல்லா மக்களுக்கும்தானே? ஏன் இந்த சுயநல அதி காரிகளுக்கு புரியல? பாவம் சார் விவசாயிங்க''’என்றார் தழுதழுத்த குரலில்.
கொண்டாடப்பட வேண்டிய விவசாயிகளைக் குமுறவைக்கும் கொடுமை தொடர்வதா? வேதனையும் வெட்கமுமே மிஞ்சுகிறது.