"எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை பதிவு செய்தே ஆகவேண்டும்' என்று விவசாயிகளும், "நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அத்தீர்மானத்தை பதிவு செய்யமாட்டோம்' என அதிகாரிகளும் முறுக்கிக்கொண்டு நின்றதால், சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டங்கள் சலசலப்புகளுடனும், சர்ச்சைகளுடனும் முடிந்துபோனது.
சேலம்-சென்னை இடையிலான எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மற்றும் மக்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடிவருகின்றனர். இத்திட்டத்தை ரத்து செய்து ஏற்கனவே கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி, உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு தடை கேட்டு, மத்திய-மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில், சேலத்தை அடுத்த பூலாவரியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், அரசுத்தரப்பு பார்வையாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி கலந்துகொண்டார். எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான விவசாயி மோகனசுந்தரம், "பூலாவரி கிராமத்தின் வழியாக எட்டுவழிச் சாலை அமைப்பதில் விவசாயிகளுக்கு துளியும் விருப்பமில்லை' என்று ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால் அத்தீர்மானத்தை பதிவுசெய்ய மறுத்துவிட்டார் ஜெயந்தி.
குள்ளம்பட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்திலோ அரசுத்தரப்பு பார்வையாளராக வந்தவர், "எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் பதிவுசெய்ய முடியாது' எனக்கூறிவிட்டு, கூட்டத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தீர்மான புத்தகத்துடன் ஓட்டம் பிடித்தார். விவசாயி பன்னீர்செல்வம், "நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது குறிப்பிட்ட ஒரு திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது என்று பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதா?' எனக் கேட்க, அரசுத் தரப்பு பார்வையாளரோ, "ஆட்சியர் சொல்லிவிட்டார். அதனால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது,' என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார். குப்பனூர், ராமலிங்கபுரம், மின்னாம்பள்ளி, நிலவாரப்பட்டியிலும் இதேநிலைதான்.
இதுதொடர்பாக எட்டுவழிச்சாலைத் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மோகனசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர், “""சேலம் மட்டுமின்றி இத்திட்டம் அமையவுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, ஒரே மாதிரியான முடிவை எடுத்துள்ளார்கள். அதனால்தான், இந்த ஐந்து மாவட்டங்களிலும் கிராமசபைக் கூட்டங்களில் எட்டுவழிச் சாலைக்கு எதிராக தீர்மானங்கள் பதிவு செய்ய அதிகாரிகள் ஒரேயடியாக மறுத்துவிட்டனர்''’என குமுறினர்.
ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 243ஏ-ன்படி, சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராகத்தான் கிராமசபைகளில் தீர்மானம் கொண்டுவர முடியாது என்று சொல்லப்பட்டு உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
-இளையராஜா