அரசியலிலிருந்து துறவறம் போகிறேன்' என சசிகலா கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அறிவித்தார். அது தற்காலிகமான அறிவிப்பு என்பது போல மறுபடியும் அரசியல் தளத்திற்கு அ.தி.மு.க. கொடியோடு வந்தார். ஆனால் தற்பொழுது, "சசிகலாவை அரசியலிருந்து விரட்ட அவரது குடும்பத்தினரே தயாராகி விட்டார்கள்' என்கிறார்கள் சசிக்கு நெருக்கமானவர்கள்.
சசிகலாவின் அரசியலுக்கு எதிராக முளைத் திருப்பவர் டி.டி.வி. தினகரனின் மனைவி அனுராதா. சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை நகர மக்களுக்கு ஆறுதல் சொல்ல சசிகலா புறப்பட்டார். சென்னை ஓட்டேரி பகுதியில் சசிகலா கொடுத்த நிவாரணப் பொருட்களை வாங்க ஏழை மக்கள் திரண்டனர். சசிகலாவின் வருகையால் ஏற்பட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஆட்கள் இல்லை. "கட்சிக்காரங்க யாரும் வரலையா?' என வாய்விட்டுக் கேட்டார் அவர். உடனே அ.ம.மு.க.வின் மா.செ. சித்திக்கிற்கு போன் போட்டார்கள் சசிகலாவின் ஆட்கள். சசிகலாவின் நிகழ்ச்சிக்கு ஏன் வரவில்லை என கேட்டதற்கு, "சசிகலாவின் நிகழ்ச்சிக்குப் போனால் அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்படுவீர்கள்' என டி.டி.வி. தினகரன் சொன்னதாக சித்திக் சொன்னார், என்ற தகவலைக் கேட்ட அவர் நொந்து போனார்.
இது முதல் முறை அல்ல... சசிகலா, ஜெ.வின் சமாதிக்கு வந்தபோது வந்தவர்கள் 20,000 பேர் என கணக்குச் சொன்னார்கள்... ஆனால் உண்மையில் வந்தது 2800 பேர்தான். இதைப் பற்றி சசிகலா விசாரித்தார். அதற்கு டி.டி.வி. கட்சியின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழன், "டி.டி.வி. தினகரனும் அவரது பி.ஏ. ஜனாவும் சசிகலாவுக்கு கூட்டம் கூடுவதை விரும்பவில்லை. கொஞ்சம் பேர் போதும் என சொல்லிவிட்டார்கள்' என்று தெரிவித்தனர் என்கிறார்கள் சசியின் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
சசி, தேவர் சமாதிக்குச் சென்றபோது பல அ.தி.மு.க. தலைவர்கள் வந்து சசியை சந்திக்கிறோம் என வாக்குறுதி அளித்திருந்தார்கள். அவர்கள் சசி குடும்பத்தாரால் தடுக்கப்பட்டனர். ஒருசில சிறிய தலைவர்கள்தான் சசியை சந்தித்தார்கள். இது ஓ.பி.எஸ். விவகாரத்திலும் நடந்தது. சசிகலாவுடன் நல்ல உறவில் ஓ.பி.எஸ். இருந்தார். அவரது மகன்கள், சசிகலாவின் உறவினர் களுடன் நன்றாகப் பேசினார்கள். அதிலும் குறிப்பாக டி.டி.வி. தினகரனுடன் ஓ.பி.எஸ். நெருக்க மாக இருந்தார். அதன் அடிப் படையில் மாநில நிர்வாகிகளுடன் பேசி சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது பற்றி முடிவு செய்யலாம் என தேவர் ஜெயந்தி யின்போது பேட்டியளித்தார் ஓ.பி.எஸ்.
எடப்பாடியைத் தோற்கடிக்க கட்சியை சசி கைப்பற்ற ஓ.பி.எஸ். உதவுகிறார் என சொல்லப்பட்ட நேரத்தில் திடீரென ஓ.பி.எஸ். தனது நிலையை மாற்றிக்கொண்டார். எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாக அறிக்கை தந்தார்கள். தனித்தனியாக வெள்ள நிவாரணம் கொடுத்துவந்தார்கள் என்கிற நிலை மாறி, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், வைத்திலிங்கம் ஆகியோர் புடைசூழ ஓ.பி.எஸ். ஸும் இ.பி.எஸ்.ஸும் இணைந்து டெல்டா மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் தந்தார்கள். ஓ.பி.எஸ். வருவதற்காக ஒருமணி நேரம் எடப்பாடி காத்திருந்து வரவேற்றார். ஓ.பி.எஸ். இப்படி இறங்கி வருவார் என எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. விழாவிற்கு வந்த ஓ.பி.எஸ்.ஸிடம், "சசிகலாவிடம் போனால் நாம் மீண்டும் அடிமையாவோம்' என பேசினார்.
ஆனால் ஓ.பி.எஸ்., சசி இணைப்பை கெடுத்தது யார் என சசி விசாரிக்கிறபோது... அதற்குக் காரணம் டி.டி.வி.தான் என அவருக்கு சொல்லப்பட்டது. சசிகலா தனது விசாரணையை தீவிரப்படுத்தினார். அத்துடன் தொண்டர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
சசிகலா விடுதலையான தும் டி.டி.வி. தினகரனுடன் முரண்பாடுகள் அதிகமானது, அன்றிலிருந்து நடந்த விவகா ரங்கள்தான் இதற்குக் காரணம் என அவரது உறவினர்கள் சசிகலா விடம் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் ஒரேயொருவரை சுட்டிக்காட்டினார்கள். அது தினகரனின் மனைவி அனுராதா.
அனுராதாவிற்கு இளவரசியுடன் ஒத்துப்போக பிடிக்காது. இளவரசி மகன் விவேக், மகள் விஷ்ணுப்ரியாவையும் ஏற்கமாட்டார். டாக்டர் வெங்கடேஷுக்கும் தினகரனுக்கும் ஒத்துவராது. சசிகலாவின் குடும்பத்தில் அடுத்து யார் என ஒரு ரேஸ் நடந்துகொண்டிருக்கிறது. இதில் விவேக், விஷ்ணுப்ரியா, டாக்டர் வெங்கடேஷ், டி.டி.வி.தினகரன் என நான்குபேர் இருந்தனர்.
தினகரனை அவரது உதவியாளர்களான ஜனா, சேலஞ்சர் துரை இவர்களைத் தாண்டி யாரும் அணுக முடியாது. தினகரனின் கட்சியை நடத்துவது அனுராதாதான். அ.தி.மு.க.வில் சசி இணைவதற்காக தினகரனை ஒதுக்குவது அனுராதாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சசிகலாவை பகைத்துக்கொள்ள முடியாது என்பதால் சைலண்டாக இருந்த அனுராதா கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு எதிரா காய் நகர்த்தினார். அதன் இறுதிக்கட்டம்தான் ஓ.பி.எஸ்.ஸையும் சசிகலாவையும் பிரித்தது.
இப்போது நகராட்சித் தேர்தலில் தனியாகக் களம்காண ப்ளான் செய்கிறார் தினகரன். சசிகலாவை விட்டு தினகரனையும் அ.ம.மு.க. வையும் வெகுதூரம் போக வைத்து விட்டார் அனுராதா என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்க மானவர்கள்.