மிழக அரசியலில் மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் மோதிப்பார்த்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 முடிவுகள், மே 2, 2021 அன்று வெளிவந்தன. மூடத்தனத்தை மூலதனமாகக் கொண்ட முடக்குவாத சக்திகளுக்கு இந்த முடிவுகள் சாட்டையடியாகவே அமைந்தன.

பா.ஜ.க.வும், அதன் அடிமையாக மாறிவிட்ட அ.தி.மு.க.வும், மூடநம்பிக்கைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர்கள். ஜெயலலிதாவிடமும் இந்த நம்பிக்கைகள் உண்டு என்றாலும், அவர் மறைவுக்குப் பிறகு அது அதீதமானது. இவர்களின் மூட நம்பிக்கைகள் மக்கள் நலத்தை மறக்கச் செய்ததோடு, மக்களுக்கு என்ன கேடு செய்தாலும் யாகம், பூஜை, சடங்குகள் தம்மை காப்பாற்றி விடும் என நம்பவைத்தன. ஜாதகம் சாதகமாக இல்லாததால் தி.மு.க. வெல்லாது என இக்கூட்டம் நம்பியது.

h

கட்டங்களும் சட்டங்களும்..

Advertisment

ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், அ.தி.மு.க.வின் அடிமை அம்பி அமைச்சர்களும், "மு.க.ஸ்டாலினின் ஜாதக கட்டம் சரியில்லை. எனவே அவர் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது'' என்று, பொதுமேடைகளிலும்; ஊடகங்களிலும் பேசிவந்தனர். ஸ்டாலினின் கட்டம் சரியில்லை என்று பரப்புரை செய்த இவர்கள், தங்கள் ஆட்சியில் சட்டம் சரியில்லை; போடும் திட்டம் சரியில்லை என்பதை மறந்து கொட்டமடித்து வந்தனர். ஜோதிட பிழைப்புவாதிகளோ "2021 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிதான் ஆட்சி அமைப்பார், மு.க. ஸ்டாலினின் ஜாதகம் சரியில்லை' என்று மிக உறுதிபட(?) கூறினர். இந்த காணொளிகள் ஊடகங்களில் பரபரப்பாக உலாவந்தன. ஆனால் நடந்தது என்ன?

அபாரவெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்று, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார். ஜோதிடம் பொய்யாகிவிட்டது.

முரட்டு வேல் முறித்த முத்துவேல்...

Advertisment

வடமாநிலங்களில் ‘ஜெய்ஸ்ரீராம்’ என முழங்கும் மோடியும், அமித்ஷாவும் தமிழகத்தில் மட்டும், வெற்றிவேல்; வீரவேல் என்று கூட்டங்கள்தோறும் முழங்கினர். வெற்றிவேல்; வீரவேல் என்று வேல்யாத்திரை நடத்தி, தி.மு.க.வை மதவாதத்தின் மூலம் வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டனர். ஆனால் என்ன நடந்தது?

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர்கள், வேலை தூக்கி இங்கு வேலை காட்டப் பார்த்ததை, மூளைத்திறன் கொண்ட தமிழர்கள் முன்னெச்சரிக்கையோடு முறியடித்தனர். பெரும்பான்மையின இந்துக்களும்; சிறுபான்மையின முஸ்லிம்களும்; கிருத்துவர்களும்; மத நம்பிக்கையற்றவர்களும், தி.மு.க.வுக்கு பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்துவிட்டனர்.

“வீரவேல் வெற்றிவேல் ’என்றவர்களெல் லாம், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் முழக்கம் கேட்டு முடங்கிப் போய்விட்டனர்.

ராவுக்கு ரா பார்த்து

h

ராவப்பட்ட ராஜேந்திரபாலாஜி..

முற்றிலும் பேதலித்து முழு சங்கியாகவே மாறிப்போன அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது சிவகாசி தொகுதியை விட்டுவிட்டு ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். அதற்கு காரணம், "ரா' என்ற எழுத்தில் தனது பெயர் இருப்பதால் "ரா' என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டி யிட்டால் வெற்றி நிச்சயம் என்று ஜோதிடக்காரர்கள் அருள்வாக்கு சொன்னார்களாம். மடமையை நம்பி, கடமையை மறந்த மங்குனி மந்திரியை, ரா என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ராஜபாளையம் காப்பாற்றியதா? கைகழுவி விட்டது. .

தவிர, சில அரசியல் மூடநம்பிக்கை களையும் இத்தேர்தல் பொய்யாக்கிவிட்டது. அவை யாவன...

மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க.வினர், தமிழக “மக்களின் மனதை மாற்றிவிட்டார்கள். இபோது முன்புபோல் இல்லை. முஸ்லிம் வெறுப்பு வளர்ந்துவிட்டது. அதனால், முஸ்லிம் கட்சிகளோடு நெருக்கம் வைத்துள்ள தி.மு.க. தோற்கும்’என்ற மூடநம்பிக்கை பரப்பப்பட்டது. இது முஸ்லிம் அமைப்புகளை மனதளவில் பாதித்தது. ஆனாலும் தி.மு.க. எப்போதும் போலவே நெருக்கம் பேணியது. முஸ்லிம்களின் மாநாட்டில் தி.மு.க. பங்கேற்று நம்பிக்கை யூட்டியது.

தேர்தல் முடிவு என்ன சொன்னது,?

நாங்கள் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இனத்தால் தமிழர்கள். தீரமிகு திராவிடர்கள் என்ற தமிழக மக்களின் தீர்ப்பு முஸ்லிம் வெறுப்பு பரப்புரையை கிழித்து மூலையில் வீசியது.

vv

ஒரு சில இயக்கங்களைத் தவிர, ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றன. முஸ்லிம் வேட்பாளர்களை, முஸ்லிம் அல்லாத சகோதரர்களே முன்னின்று களப்பணியாற்றி வெற்றிபெற வைத்துள்ளனர். இது தந்தை பெரியார்; அண்ணா; காயிதேமில்லத்; கலைஞர் பண்படுத்திய மண் என்று தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர்.

எதிர் திரட்சி எனும் மனமருட்சி..!

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித் துவப்படுத்தும் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்த்தால், சாதி இந்துக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டுவிடுவார்கள். எனவே, விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்த்துள்ள தி.மு.க. தோற்கும் என பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் என்ன நடந்தது? சாதி இந்துக்கள் எனக் குறிப்பிடப்படுவோர் பெருவாரியாக விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சியினருக்கும் வாக் களித்தனர். இதுவே தமிழகத்தின் தனிப்பெருமை. நாகை, திருப்போரூர் ஆகிய பொதுத்தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகளும், பிற தொகுதிகளோடு ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் குறைவாக வாழும் பாபநாசம்; மணப்பாறை தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சியும் மகத்தான வெற்றியைப் பெற்று மூடநம்பிக்கை களை குப்பையில் வீசி எறிந்துள்ளனர்.

ராசியில்லாதவர் வைகோ... அவருடன் சேர்ந்த கூட்டணி தோற்கும் என்ற ஒரு மூடநம்பிக்கையையும் பா.ஜ.க. தரப்பினர் அரசியலில் பரப்பிவைத்திருந்தனர். வைகோவைப் போல வரலாற்று தரவுகளுடன் பேச இயலாத பொறாமையில், அவர்கள் பரப்பிய மூடநம்பிக்கை இது. அதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இந்த சட்டமன்றத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தவிடுபொடியாக்கியுள்ளது.

வென்றது ராகுகாலம்?

மூடநம்பிக்கையின் கூடாரமான பா.ஜ.கவின் ஆயிரம்விளக்கு வேட்பாளர் குஷ்புவை எதிர்த்து களமிறங்கிய தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் எழிலன், உலகறிந்த பெரியாரிஸ்ட். கெட்ட நேரம்; ராகுகாலம் என்றெல்லாம் குறிப்பிடப் படும் நேரத்தில், மனுத்தாக்கல் செய்தார். சனாதனிகள் கெட்டநேரம் என்று குறிப்பிடும் நேரங்களிலேயே தனது பணிகளை துணிவாய்த் துவங்கும் மருத்துவர் எழிலன், மக்களின் மகத்தான ஆதரவோடு வென்றுள்ளார். குஷ்பு கட்சியின் நம்பிக்கைதான் குப்புற விழுந்துவிட்டது.

தி.மு.க. எந்த மதத்திற்கும் எதிரி அல்ல. மதத்தை வைத்து அரசியல் செய்யும் மத வெறியர்களுக்கே தி.மு.க. எதிரி என்று த.மு.மு.க. வெள்ளி விழா மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டார் மு.க. ஸ்டாலின்.

மக்களின் நலனில் அக்கறைகொண்ட தி.மு.க. கூட்டணி, ஜாதகக் கட்டங்களை நம்பாமல், தமிழகத்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச்செல்லும் முயற்சியோடு வென்றிருக்கிறது.

மக்கள் நலன் வாழட்டும்; மடமைகள் வீழட்டும்.