"ஜவுளித்துறையில் ஏமாற்று அதிகமாகிவிட்டது. மக்களும் ஏமாறுகிறார்கள். உண்மையான நெசவாளிகளான நாங்களும் ஏமாறுகிறோம். இது குறித்து மனு தந்தால் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அநியாயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன' -என நம்மை தொடர்புகொண்டு அதிரவைத்தார்கள் நெசவாளர்கள்.
அவர்களின் குமுறலை அறிய, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் உள்ள கம்பன் கைத்தறி நெசவாளர்கள் சங்கத் தலைவர் கணேசனை முதலில் சந்தித்தோம்.
அவர் நம்மிடம் "தமிழ்நாட்டில் பல லட்சம் பேர் நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். காஞ்சிபுரத்துக்குப் போனால் காலாட்டிக்கொண்டே வாழலாம் என்கிற பழமொழியே, நெசவுத்தொழிலின் செழிப்பைக் காட்டும் வகையில் உருவானதுதான். அப்படிப்பட்ட அந்தத் தொழில் இப்போது கெட்டுவிட்டது. நெசவை நம்பியிருக்கும் நாங்கள் இன்று தொழிலை இழந்து நிற்கிறோம். தமிழ்நாட்டில் பட்டு என்றால் காஞ்சிபுரம், ஆரணி தான் புகழ்பெற்றது. வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பட்டுப்புடவைகள், பட்டு வேட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பட்டுப்புடவைகளை காஞ்சிபுரம், செய்யாறு, ஆரணியை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வாழும் நெசவாளர்கள்தான் நெய்து தந்துவந்தார்கள்.
இப்போது. டெக்னாலஜி வளர்ச்சி என்ற பெயரில் பவர்லூம் என்கிற விசைத்தறி வந்துவிட்டது. அவை எந்திரத்தனமாக புடவைகளை உருவாக்குகின்றன. அந்த பவர்லூம்களோடு போட்டி போட முடியாமல், பலர் இந்தத் தொழிலைவிட்டே போய்விட்டார்கள். இப்போது குறைவான நெசவாளர்களே தறியால் நெய்துவருகிறார்கள். இவர்களையும் அழிக்கும் வேலையை பவர்லூம் முதலாளிகளும், துணிக்கடை முதலாளிகளும் செய்கிறார்கள். பட்டுப்புடவை, பட்டு வேட்டிகளில் அதன் ஜரிகையை வைத்துதான் அதற்கு மதிப்பு. அந்த ஒரிஜினல் ஜரிகைகளை பவர் லூம்களில் நெய்யவே முடியாது. கைத்தறியால் நெய்ய முடியும். இப்போது விற்கப்படும் பட்டுப்புடவைகளில் 80 சதவிதகிம் டூப்ளிக்கெட் பார்டர் கொண்ட பட்டுப் புடவைகள் தான்.முழுமையாக பட்டுப் புடவைகளை விசைத்தறியால் நெய்யவே முடியாது''” என்றார்.
ஏன் அப்படி? என்ற நம் கேள்விக்கு, அவரே... "100 சத ஒரிஜினல் ஜரிகையை மரத் தறியில் மட்டுமே நெய்யமுடியும், விசைத்தறி யில் நெய்தால் அறுந்து போய்விடும். ஒரிஜினல் ஜரிகை என்பது, ஒரு கிலோ ஜரிகையில் 2 கிராம் தங்கம், முக்கால் கிலோ வெள்ளி இருக்கும். டூப்ளிகேட் ஜரிகை என்பது தங்கத்துக்கு பதில் காப்பர் அல்லது பாலியஸ்டர் நூலில் டூப்ளிக்கெட் தங்கமூலம் பூசி இருக்கும். இது பார்க்க ஒரிஜினல் போலவே இருக்கும். இதைப் பயன்படுத்தியே பவர்லூம் கொண்டு ஜரிகை பார்டர் போடுகிறார்கள். இதனையே ஒரிஜினல் பட்டு என விற்பனை செய்கிறார்கள். இந்த மோசடிகள் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.
அதேபோல் கைத்தறியில் ஒரு பட்டுப் புடவையை உருவாக்க 10 நாட்கள் வரை ஆகும். ஒரு மாதத்துக்கு 3 புடவைகள் மட்டுமே ஒரு குடும்பத்தால் நெய்ய முடியும். ஒரு விசைத்தறி ஒருநாளைக்கு 3 புடவைகள் நெய்கின்றது. கைத்தறியால் நெய்த பட்டுப்புடவையின் உற்பத்தி விலை குறைந்தபட்சம் 20 ஆயிரம் என்றால், விசைத்தறியில் உருவாகும் ஒரு பட்டுப்புடவையின் உற்பத்தி விலை அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாய் தான் ஆகும். ஆனால் விசைத்தறி பட்டுப் புடவை களை கண்டமேனிக்கு விலை வைத்து விற்று மக்களை ஏமாற்றுகிறார்கள். கைத்தறித் தொழிலாளர் களுக்கு ஒரு புடவை நெய்தால் 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்கும். அதற்கு 10 நாளைக்கு இரண்டு பேர் தினமும் உழைக்கவேண்டும். அப்படியெல்லாம் வியர்வையிலும் அக்கறையிலும் உருவான பட்டுப்புடவைகள் இப்போது, பவர்லூம்களில் போலியாக தயாராவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது''’என்றார் கவலையாய்.
பொருளாளர் மணிகண்டன் கூறும்போது, "கைத்தறி பட்டு ஜரிகை புடவை என்றால் 35 ஆண்டுகள் ஆனாலும் அது கிழியாது, சாயம் போகாது. ஆண்டுகள் ஆக ஆக விலை கூடும். உதா ரணத்துக்கு, 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரிஜினல் ஜரிகை வைத்து தயாரித்த பட்டுப்புடவையை கூலி இல்லாமல் 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். அது பழையதாகிவிட்டது என இரண்டு மாதத்துக்கு முன்பு விற்றபோது 24 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. விசைத்தறி பட்டுபுடவைகள் 3 ஆண்டுகளில் கிழிந்து விடும், குவாலிட்டி இருக்காது. இதனைக் கொண்டு சென்று விற்றால் வாங்கிய தொகையில் கால்வாசி பணம்கூட கிடைக்காது. மக்களுக்கு ஒரிஜினல் எது? டூப்ளிகேட் எது என தெரியாமல் இருப்பது வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை தருவதில்லை. இப்போது மாதம் ஒன்று அல்லது இரண்டு புடவை நெய்ய ஆர்டர் தந்தாலே பெரியதாக இருக்கிறது. ஒரு புடவை நெய்தால் நெசவாளருக்கு 5 ஆயிரம் கிடைக்கும், அதற்கு 10 நாளைக்கு இரண்டுபேர் தினமும் உழைக்கவேண்டும். அந்த பட்டுப்புடவை யில் சிறியதாக கரை படக்கூடாது, நூல் அறுந்து இருக்ககூடாது. சிறிய கரை இருந்தால் அதனை நீக்க 1500 ரூபாய் வரை செலவாகும். அதனை முன்பு வியாபாரிகள் செய்தார்கள், இப்போது அதனை நெசவாளர்களே செய்யவேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் இந்த தொழிலில் இல்லை. வருமானம் இல்லை என்பதால் இந்த தொழில் மட்டுமே தெரிந்த பலர் குடும்ப வறுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். கடந்தவாரம் காஞ்சிபுரத்திலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்'' என்றார்.
நெசவாளர் சங்கச் செயலாளர் சிவாவோ, "விசைத்தறி வருகையினால் கைத்தறி நெசவாளர் கள் பாதிக்கப்படக்கூடாது என 1985-ல் கைத்தறி சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதன்படி பட்டுப்புடவை, வேட்டி, துண்டு என 11 ஐட்டங்கள் விசைத்தறியில் நெய்யக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை மீறிதான் இப்போது உற்பத்தி செய்கிறார்கள். சென்னையில் கைத்தறி அமலாக்கத்துறை இருக்கிறது. இவர்களுக்கு காஞ்சிபுரம், ஆரணி பட்டுப்புடவையில் நடைபெறும் மோசடிகள் குறித்து புகார்களை அனுப்பினோம். அவர்கள் வருவதற்கு முன்பாகவே காஞ்சிபுரம், ஆரணியில் பிரபலமாக உள்ள கடைகளுக்கு தகவல் சொல்லி தப்பவைத்தார்கள். மற்றொருமுறை வந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மக்களிடம் பிரபலமான காஞ்சிபுரம் துணிக்கடைகள், இயந்திரத்தில் தயாரான பட்டுப்புடவைகளை தறி பட்டுப் புடவை என்று விற்பனை செய்வதை கண்டுபிடித்து அபராதம் விதித்தார்கள். அவ்வளவுதான், அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காஞ்சிபுரத்தில் 800 பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் உள்ளன. மாதா மாதம் இந்த வியா பாரக் கடைகள் அமலாக்கத்துறைக்கு லஞ்சத்தைக் கொட்டிக் கொடுக்கின்றன. இவர்கள் தரும் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு வியாபாரிகளுடன் சேர்ந்து, அதிகாரிகளும் நெசவாளர் வயிற்றில் அடிக்கிறார்கள். எங்களின் கோரிக்கையே, தறியில் நெய்த ஒரிஜினல் பட்டு என டூப்ளிகேட் பட்டுப் புடவைகளை விற்பனை செய்யவேண்டாம் என்பதே. இது கைத்தறியில் நெய்த புடவை, இது விசைத்தறியில் நெய்த புடவை எனச்சொல்லி விற்கட்டும். மக்கள் விரும்பியதை வாங்கட்டும். மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒரிஜினலுக்கு தான் அவர்கள் முக்கியத்துவம் தருவார்கள்''’என்றார் நம்பிக்கையோடு.
நெசவாளி அருள் நம்மிடம், "கூட்டுறவு சங்கத்தில் பணியாற் றும் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நெய்துதரும் நெசவாளர்களுக்கு கூலி உயர்வே கிடையாது. கடந்த 40 வருடங்களாக கூலி உயர்வு இல்லாத தொழில் இதுதான். காஞ்சிபுரத்தில் மணி என்கிற நெசவாளி கடந்த வாரம் கடன் கொடுத்தவர்களின் டார்ச்சரைத் தாங்க முடியாமல் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். அந்த அளவுக்கு நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் இருக்கிறது. இப்படிப்பட்ட கண்ணீர்க் கதைகள் தொடராமல் தடுக்கவேண்டியது அரசின் கடமை''’என்றார் எதிர்பார்ப்போடு.
கைத்தறி நெசவாளர்களின் துயரக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு?