மிழகத்தில் சென்ற வருடம் டெங்கு காய்ச்சலுக்கு 65 பேரும் பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேரும் பலியாகியுள்ளனர். இந்த வருடம் டெங்குவுக்கு 2, பன்றிக்காய்ச்சலுக்கு 5, 11 என தம் பலி கணக்கைத் தொடங்கிவிட்டன. கொசுவிலேறி வரத்தொடங்கிவிட்டான் எமன்.

இத்தகைய கொசுவால் பரவும் நோய்களை கொசுமருந்து அடித்துக் கட்டுக்குள் வைக்கலாம். ஆனால் கொசுமருந்து அடிக்கிறேனென போலிரசீது சமர்ப்பித்து ஊழல் செய்பவர்களை யார் கட்டுப்படுத்துவது என்பதுதான் இப்போதைய பிரச்சனை.

madurai-corporation

சமூக ஆர்வலர் ஹக்கீம் 2016-17-ஆம் ஆண்டின் மதுரை மாநகராட்சி வரவு-செலவுகளை இணையத்திலிருந்து தரவிறக்கி ஆராய்ந்தார். அதில் சந்தேகம் வரவே தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சி வரவு-செலவுக் கோப்புகளை வாங்கி ஆராய்ந்தபோது வெளிச்சத்துக்கு வந்ததுதான் இந்த கொசுமருந்து ஊழல்.

மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனரான ஹக்கீம், ""கோப்புகளை ஆராய்ந்தபோது ஹெரன்பா இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து டேம்போஸ் கொசுமருந்து வாங்கியதாக ரசீது இருந்தது. அதிலுள்ள டின் நம்பரும் முகவரியும் தவறாக இருந்தது. அந்த கம்பெனியில் கொசுமருந்து வாங்கியதாக 6,27,000 ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தேன். இந்த ஊழல் நடக்கும்போது ஆணையராக இருந்தவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருக்கும் சந்தீப் நந்தூரிதான். அவரிடம் விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும்''’என்கிறார்.

ரசீதிலுள்ள ஹெரன்பா நிறுவன எண்ணுக்குப் போன்செய்தால், அட்டெண்ட் செய்தவர், ""சென்னையில் சின்னதா ஹார்டுவேர் கடைவெச்சிருக்கேன்'' என்றார். ""ஹெரன்பா இன்டஸ்ட்ரீஸா?''’என நம்மையே திருப்பிக் கேட்டார். கூகுளில் தேடி, மும்பையில் தலைமையகத்தைக் கொண்ட திருச்சியிலுள்ள அதன் கிளை அலுவலகத்துக்குப் பேசியபோது, கிளைமேலாளர் செந்தில் பேசினார். “""எங்க நிறுவனத்திலிருந்து மதுரை மாநகராட்சிக்கு வருடத்துக்கு 5,000 லிட்டர் கொசுமருந்து சப்ளை செஞ்சது உண்மைதான். 2014-லேயே எங்க டெண்டர் முடிந்துவிட்டது''’என்றார். 2016-17-ல் மதுரை மாநகராட்சி 1000 லிட்டர் டேம்போஸ் கொசுமருந்து வாங்கியதாக ரசீது இருக்கும் விவரத்தைச் சொன்னோம். அது நிச்சயம் போலியானதுதான். இரண்டு மாதத்துக்கு முன்பு தகவலறிந்து மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்''’என்றார்.

தற்போதைய மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஷ்சேகர், ""விசாரணை நடைபெற்று வருகிறது''’என்பதோடு முடித்துக்கொண்டார். சந்தீப் நந்தூரியைத் தொடர்புகொண்டபோது, “""எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது''’என போனை துண்டித்தார்.

நிர்வாகத்தில் ஊழல்ங்கிற கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா நாராயணா.

-வினாயக்பாபு

(இளம்பத்திரிகையாளர்)