சோலார் பேனல் மோசடி சரிதா நாயர், தங்கக் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் வரிசையில், வசதியானவர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து, முதலிரவு நடத்தி, அதை வீடியோவாக்கி, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் ஸாஜிதா என்ற பெண் தற்போது கேரளாவை பரபரப்பாக்கியுள்ளார்.
காசர்கோடு நயன்மார் மூல் பகுதியை சேர்ந்த பட்டதாரியான 30 வயதான ஸாஜிதா, பெற்றோரை பிரிந்து தனியாக வசித்துவருகிறாள். தன்னுடைய இளமையையும் அழகையும் வைத்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட ஸாஜிதா, போலி திருமணம் என்ற திட்டத்தை வகுத்து, பெண் தேடியலையும் இளைஞர்களைத் தொடர்புகொண்டு, திருமணம் செய்து, முதலிரவின்போது ரகசிய கேமராவில் முதலிரவுக் காட்சிகளைப் படம் பிடித்து, பின்னர் அதைக்காட்டி மிரட்டி நகைகளையும் பணத்தையும் பறித்து வந்தாள். அவளின் திட்டத்திற்கு உடந்தையாக, உம்மர் என்பவரும், அவரது மனைவி பாத்திமா மற்றும் இக்பாலும் செயல்பட்டனர்.
இந்நிலையில், கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் ஷத்தார்க்கு பெண் தேடிவந்த நிலையில், ஷாஜிதாவின் போலி பெற்றோர்கள் தொடர்புகொண்டு பேசி முடிக்க, கடந்த 22-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கொவ்வல்பள்ளியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் அன்று இரவு முதலிரவை முடித்த அப்துல் ஷத்தார்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த நாள் மதியம் அப்துல் ஷத்தாரை தொடர்புகொண்ட இக்பால், முதலிரவு வீடியோ காட்சிகளைக் காட்டி அப்துல் ஷத்தாரை அலற வைத்தார். அந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பரப்பாமல் இருக்க 10 லட்சம் கேட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் ஷத்தார், 5 லட்சம் தருவதாக கூறிக்கொண்டு கான்ஞான்காடு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஸாஜிதா, உம்மர், பாத்திமா, இக்பால் ஆகியோரைக் கைது செய்தனர்.
கான்ஞான்காடு டி.எஸ்.பி சஜீவன் நம்மிடம், "ஸாஜிதா கேரளாவில் இதுவரை 10 பேரை போலி திருமணம் செய்து ஏமாற்றி யிருக்கிறார். தமிழ்நாட்டிலும் காயல்பட்டணத்தில் ஒருவரை ஏமாற்றியிருக்கிறார். இதில் நால்வர் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கும்பலுக்கு திருமண தகவல் மையத்தை சேர்ந்தவர்கள் உடந்தையாக உள்ளனர். திருமணத்துக்குப் பெண் தேடித்தேடி வெறுத்துப் போன வர்களின் தொடர்பு விவரங்களை இவர்கள்தான் வழங்குகிறார்கள். கொரோனா காலமான கடந்த ஒன்றரை ஆண்டு களில்தான் இந்த மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல், ஒருத்தரை ஏமாற்றிவிட்டால் உடனே இருப்பிடத்தையும் பெயரையும் மாற்றிவிடுவார்கள்.
திருமணப் பேச்சுவார்த்தையின்போது வரதட்சணையாக பணம் தரமாட்டோம், நகை போடுறோம் எனக்கூறி, கொல்லம் போலி கவரிங் நகைகளை அணிந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தோதான இடத்தில்தான் முதலிரவும் நடக்கும். அப்போதுதான் வீடியோ எடுக்க ஏதுவாக இருக்கும். முதலிரவுக்கு மறுநாள், ஸாஜிதாவே எதேச்சையாக அந்த கேமராவைப் பார்ப்பது போலப் பார்த்து, "என்னை ரகசியமாகப் படமெடுத்தாயா? எனக்கேட்டு, பழியை அவர்கள்மீது போட்டு, இனி இவர்களோடு வாழ முடியாதென்று தொடர்பைத் துண்டிப்பாள். அதன்பின்னர், இக்பால் மணமகனைத் தொடர்புகொண்டு, முதலிரவு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேனென்று மிரட்டி பணம் பறிக்கவும், அவர்களுக்குள் அப்பணத்தைப் பங்கிட்டுக்கொள்வார்கள். இதில் தொடர்புடைய திருமணத் தகவல் மையத்தையும் விசாரித்துவருகிறோம்'' என்றார்.
இவர்களால் ஏமாற்றப்பட்ட. கண்ணூர் தளிபரம்பை சேர்ந்த ஒருவர் போலீசார் மூலம் நம்மிடம் பேசும்போது, "எனக்கு வயது வித்தியாசத்தால் பெண் கிடைக்காத சூழலில், திருமணத் தகவல் மையத்தை நாடினேன். ஆயிஷா (ஸஜிதாவின் அடுத்த பெயர்) என்பவர், வயது வித்தியாசமில்லாமல் திருமணம் செய்யத் தயார் என்று கூறியிருப்பதாக அவரது விவரத்தைக் கொடுத்தனர். 9 மாதத்திற்குமுன் அவளுடன் திருமணம் நடந்தது. அவளுடைய விருப்பப்படியே 10 ஆயிரம் ருபாய் வாடகையில் ஒரு வீட்டில் முதலிரவு நடந்தது. அடுத்தநாள் மாலையில் அங்கு அவள் மறைத்து வைத்திருந்த ரகசிய காமிராவை என்னிடம் காட்டி நீ திட்டமிட்டு என் நிர்வாணப் படத்தை எடுத்திருக்கிறாய், நான் உன்னை சும்மா விடமாட்டேன் போலீசில் புடிச்சிக் கொடுக்கப் போறேனு சொல்லி "ஓ'வெனக் கதறினாள். அப்போதுகூட நான் அவளைச் சந்தேகப்படவில்லை. ஆனால் போலீசுக்குப் போனால் கவுரவப் பிரச்சனையாகுமே என்று அஞ்சிய என்னை மிரட்டி, 5 லட்சம் ரூபாயையும், நான் அணிந்திருந்த 13 பவுன் நகைகளையும் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டாள். இதுகுறித்து என் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் சொன்னேன். எனது உறவினர்களோ, என்மீதுதான் குற்றம் சொன்னார்கள். ஆனால் இப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டது தெரியவருகிறது'' என்றார் அப்பாவியாக.
திருமண விவகாரங்களில், பெண்களை ஏமாற்றிவிட்டு, ஆண்கள்தான் பல திருமணங்களை நடத்திவிட்டு ஏமாற்றும் செய்திகளைப் பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கோ, ஒரு பெண் துணிச்சலாகப் பல ஆண்களை ஸ்கெட்ச் போட்டு, திருமணம் செய்து, மிகவும் புத்திசாலித்தனமாக நாடகமாடி ஏமாற்றியிருக்கிறாள். இறுதியாக, பலநாள் திருடி, ஒருநாள் அகப்பட்டுக் கொண்டாள்.