புதுச்சேரி, தமிழகத்தின் வங்கிகளிலும், அடகுக் கடைகளிலும் போலி நகைகளை ஆபரண நகைபோல உருவாக்கி விற்பனை செய்துவந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மாபியா கும்பலை, காரைக்கால் போலீசார் கைதுசெய்துள்ளனர்.
காரைக்கால் பெரமசாமிப்பிள்ளை வீதியில் கைலாஷ் என் பவர் நகைக்கடை நடத்திவருகிறார். அந்த கடைக்கு கடந்த 10-ஆம் தேதி சின்னக்கண்ணு செட்டிதெருவைச் சேர்ந்த பரசுராமன் 12 பவுன் செயினோடு வந்து, "எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது, இந்த செயினை விற்கனும்' என கூறியிருக்கிறார், அந்த செயினை வாங்கிய கைலாஷ் நகை பரிசோதனை இயந்திரத்தில் வைத்து பரிசோதித்தபோது 916 கே.டி.எம். என்றே தெரியவந்திருக்கிறது. ஆனாலும் ஒரிஜினல் செயினுக்கும் பரசுராமன் கொண்டுவந்த செயினுக்கும் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணர்ந்த கைலாஷ் தனது சித்தப்பா பாலமுரளிக்கு தகவல் கொடுத் திருக்கிறார். பாலமுரளி அந்த செயினை சோதித்துப் பார்க்கை யில் செம்புக் கம்பியில் தங்கமுலாம் பூசியிருந்ததை கண்டு அதிர்ச்சி யாகி, சக நகைக்கடைக்காரர்களுக்கும், நகர காவல்நிலையத்திற்கும் தகவல் கூறிவிட்டு போலிஸ் வரும்வரை, நகையைக் கொண்டுவந்த பரசுராமனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண் டிருந்தனர். அங்குவந்த போலீசார் பரசுராமனை கைதுசெய்து விசாரணை செய்ததில் போலி நகை மாபியாக்களின் நெட்வொர்க் கோவை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நீண்டதைக் கண்டு போலிசாரே அதிர்ச்சி யாகியுள்ளனர்.
மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெரோம், திருவாரூர் மாவட் டத்தைச் சேர்ந்த ரிபாத் காமில், காரைக்காலைச் சேர்ந்த ரமேஷ், தேவதாஸ், புதுத் துறையைச் சேர்ந்த முகம்மது மைதீன், சிதம்பரத்தைச் சேர்ந்த சிவக்குமார், கடலூரைச் சேர்ந்த சோழன், பரசுராமன் உள்ளிட்ட 8 பேரை கைதுசெய்ததோடு, இவர்களுக்கு மூளை யாக இருந்துவந்த ஜெரோமின் கள்ளக்காதலி புவனேஸ்வரி யையும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள சொகுசு ஹோட்டலில் கைதுசெய்துள்ளனர்.
விசாரணை டீமில் உள்ளவர்களிடம் பேசினோம், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடியே போலீஸ்காரரின் உதவியோடு போலிநகை விற்பனை நடக்கிறது என பேச்சு வந்துச்சு, ஆனால் புகாரோ, ஆதாரமோ எங்களிடம் இல்லை. ஆனால் இப்போது கிடைத்துள்ளது, முழுமையான நெட் ஒர்க்கை பிடிக்காமவிடமாட்டோம்'' என்கிறார்கள்.
மோசடி எப்படி வெளிவந்தது என விசாரித்தோம். "காரைக்காலைச் சேர்ந்த புவனேஷ்வரி இந்தப் பகுதிக்கான மூளையாகச் செயல்பட்டுள்ளார், இவருக்கு நிரவி காவல்நிலைய எஸ்.ஐ.யாக இருந்த ஜெரோம் என்பவர் உடந்தையாக இருந்துவந்துள்ளார். புவனேஷ்வரி தன்னை பெரிய தொழிலதிபராகவே காரைக்கால் பகுதியில் அடையாளப் படுத்திக்கொண்டிருந்தார். கழுத்து நிறைய நகை, விதவிதமான கார்களில் பவனிவந்ததால் இவரை மக்களும், பெரும் செல்வந்தர்களும், ஏன் போலீசாரும்கூட நம்பினர். புவனேஷ்வரிக்கும் எஸ்.ஐ. ஜெரோமிற்கும் அப்போதிலிருந்தே நெருக்கம் இருந்துள்ளது. புவனேஷ்வரிக்கு ஜாகிர் உசேன் என்கிற கணவரும் இருக்கிறார். புவனேஷ்வரியும், ஜெரோமும் வேலையில்லாத நபர்களுக்கு கடன்கொடுத்து, அந்த கடனை அடைப்பதற்குப் பதிலாக போலியான நகையை விற்பனை செய்யக்கொடுத்து கடனை கழிக்கவைத்திருக்கிறார்.
இந்த போலி நகை கோவையிலுள்ள பிரபல தொழிலதிபர் ஒருவர் மூலம் தயாராகிவருகிறது. அந்த நகை செம்புக் கம்பியின்மேல் தங்கமுலாம்பூசி அழகுபடுத்தி அசல் தங்க நகையைப்போல 916 கே.டி.எம். முத்திரை பதித்து, இயந்திரத்தில் சோதனை செய்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி தயாரித்துள்ளனர். விசாரணையில் பரசுராமன் கொடுத்த தகவலின்படி, திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமிலை கைதுசெய் தோம். இருவரிடமும் நடத்திய விசாரணையில் உதவி ஆய்வாளராக இருந்து பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட ஜெரோம், புவனேஷ்வரி உள்ளிட்ட எட்டு பேரை கைதுசெய்துள்ளோம், மூன்று டீம் கோவை, ஆந்திரா, பெங்களூர் சென்றுள்ளது. விரைவில் இதற்கான முக்கிய புள்ளிகள் கைதாவார்கள்''’ என்கிறார்கள்.
இதற்கிடையில் காரைக்காலில் செயல்பட்டுவரும் அரசு வங்கியான புதுவை பாரதியார் வங்கியின் லாக்கரி லுள்ள நகைகளை வருடாந்திர கணக்கிற்காக வங்கி மேலாளர் அருண் தலைமையிலான வங்கி ஊழியர்கள் சரி பார்த்தபோது, புதுத்துறை யைச்சேர்ந்த முகமது மைதீன் அடகு வைத் திருந்த தலா 15 பவுன் கொண்ட இரண்டு செயின்கள் போலி என்பதைக் கண்டு வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். முகம்மது மைதீன் அடகுவைத்திருந்த நகையிலும், பரசுராமன் விற்பனைக்கு கொண்டுசென்ற நகையிலும் ஒரே கடையின் சீல் இருப்ப தால், நகைப்பிரியர்கள் மத்தியில் மட்டு மின்றி நகைக்கடைக்காரர்கள் மத்தியிலும் பீதியாகியுள்ளது.
காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரனிடம் கேட்டோம்... "போலி நகை விவகாரத்தில் விசாரணை நடத்திக் கிட்டு இருக்கோம். இது பெரிய டீம் ஒர்க்கா நடந்திருக்கு. அதோட ரொம்ப காலமா நடந்திருக்கு. நிறைய பேர் இன்வால்வ் ஆகியிருப்பது தெரியவந்தி ருக்கு'' என்றார். அவரிடமே வங்கியில் அடகுவைக்கப்பட்டிருந்த போலி நகை யிலும், பறிமுதல் செய்யப்பட்ட நகையிலும், நகைக் கடைக்கு விற்பனை செய்யப்பட்ட நகையிலும் காரைக்காலிலுள்ள பிரபல நகைக் கடை சீல் இருப்பதாகக் கூறுகிறார் களே” என கேட்டோம், “"உண்மைதான் அது குறித்தான விசாரணை நடந்துவரு கிறது. அந்தக் கடையின் சீலை போலியாக தயார்செய்து மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது''’என்கிறார்.
-க.செல்வகுமார்