திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டத்தில் சமீப காலமாக சட்டவிரோத நிலப்பத்திரப் பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும், அரசுக்கு சொந்தமான இடத்தை பதிவு செய்து அதற்கு பூஜ்ஜிய மதிப்பு போட்டுள்ளனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "திருவெறும்பூர் பகுதியிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் இந்த சட்டவிரோதப் பதிவுகள் நடந்துள்ளது. திருவெறும்பூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், கிரேடு 2 அலுவலராக தற்போது பணியாற்றும் அபிராமி, டேவிட் போன்றவர்கள் சார்பதிவாளர் பொறுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அதில் டேவிட், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பதவி உயர்வுபெற்று வந்துள்ளார். அபிராமி ஏற்கெனவே பணியாற்றி வருகிறார். திருவெறும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை போலியான ஆவணங்கள் தயாரித்து, தன்னுடைய உறவினர்களின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அதில், கடந்த 21.7.2025ஆம் தேதி, திருமலை சமுத்திரம் கிராமம், சர்வே எண் 95/1-ல் அரசுக்கு சொந்தமான நிலத்தை சாமிக்கண்ணு என்ற பெயருக்கு ஒருபாக விடுதலை ஆவணம் பதிவு செய்துள்ளார். அந்த ஆவணம் 95/2025 என்ற எண் ணில் நிலுவை ஆவணமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் பதிவு செய்வதற்காக சாமிக்கண்ணு என்பவர் பெயரிலும், அவரை போன்று போலி ஆவணங்கள் தயாரித்துக் கொடுத்து, 10க்கும் மேற்பட்ட நில விற்பனையாளர் களிடம் கையூட்டாக பல லட்சங்களில் பணம் பெற்று, அரசு இடங்களை பதிவுசெய்து கொடுத் துள்ளார். மோசடியாக பல லட்சங்கள் சம்பாதிக் கும் டேவிட், சார்பதிவாளராக மட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவருகிறார்.
இவர், திருச்சி மாவட்டம் பழங்கநான்குடி கிராமம், சர்வே எண் 197/1, 199 ஆகிய எண்களில் 7 ஏக்கர் குளத்தை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அபிராமியும் லஞ்சம் வாங்குவதில் வல்லவர். இவர்களுக்கு மூளையாக, மருதாண்டா குறிச்சி சார்பதிவு அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக இருக்கும் லாவண்யா செயல்படுகிறார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் லாவண்யா உயரதிகாரிகளிடம் பேசி சரிசெய்து விடுவாராம். மேலும் டேவிட், சூரியூர் கிராமம், 199, 200 ஆகிய சர்வே எண்களிலுள்ள கலைஞர் இலவச பட்டா நிலத்தை தனி நபருக்கு பதிவுசெய்து கொடுத்துள்ளார். சட்ட விதிமுறை 11-ன்படி கலைஞர் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் அரசால் கொடுக்கப்பட்ட நிலங்களை 30 ஆண்டுகள்வரை யாருக்கும் பட்டா போட்டுக் கொடுக்க முடியாது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.டி.ஓ.விடம் என்.ஓ.சி. வாங்கி, அதன்பிறகுதான் பதிவு செய்ய முடியும். ஆனால் விதிமுறையை மீறி 5 பேரிடம் பத்திரம் போட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொறுப்பு சார்பதிவாளர் அபிராமி மற்றும் டேவிட் ஆகியோரிடம் கேட்டபோது, "நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். ஏனென்றால் மாதம் தவறாமல் எங்களுடைய உயர் அதிகாரிகள், மாவட்ட பத்திரப் பதிவாளர்கள் வரை பணம் கொடுத்துவிடுகிறோம். எங்களைப் பற்றி எந்த புகார் சென்றாலும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்'' என்றனர்.
அதேபோல் சமீபத்தில் சுமார் 5.5 ஏக்கர் நிலத்தை தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தது தொடர்பாக சம்பந்தபட்ட தாசில்தாரிடம் விசாரித்தபோது, "வேண்டுமென்றால் என்மீது ஆர்.டி.ஓ.விடம் புகார் தெரிவித்துக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
அரசாங்கத்தை ஏமாற்றும் அபிராமி, டேவிட் உள்ளிட்ட 16 பேர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜே.எம். 4 நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் அவர்கள் எந்தவொரு பத்திரப்பதிவும் செய்யக்கூடாது, ஆனால் செய்துவருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட பத்திரப்பதிவாளர் சுரேஷிடம் கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாதெனக்கூறி நழுவினார். இவர்தான் அபிராமி, டேவிட் ஆகியோரிடம் பணம் வாங்கிக்கொண்டு பொறுப்பு சார்பதிவாளர் பதவியளித்ததாகக் கூறுகின்றனர். அதேபோல் ஒவ்வொரு போலி ஆவணம் பதிவு செய்யும்போதும் அவருக்குரிய தொகை சரியாக வந்து சேர்வதால், அவர் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டாரென் றும், இவர்களுக்கு தலையே இந்த சுரேஷ் தான் என்றும் கூறுகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி. ஆலிவர் பொன் ராஜுக்கும், டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட பத்திரப் பதிவாளர் ஆடிட்டர் பாவேந்தன் ஆகியோருக்கும் மோசடிகள் குறித்த ஆதார ஆவணங்கள் அனைத்தையும் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினோம். அதில் ஆலிவர் பொன்ராஜ் மட்டும் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.
பதவி உயர்வு பெற்ற சில நாட்களுக்குள் அரசுக்கு சொந்தமான இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து கொள்ளையடித்த இந்த பொறுப்பு சார்பதிவாளர்களால் அரசாங்க நிலங்கள் சூறையாடப்படுகின்றன. எனவே அரசு இந்த விவகாரத்தை கையிலெடுத்து, இவர்கள் செய்த அனைத்து பத்திரப்பதிவுகளையும் ரத்து செய்வதோடு, அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இந்த மோசடியில் தொடர்புள்ள அனைவர்மீதும் நடவடிக்கை பாயவேண்டும்!