முகநூலில் ஏற்பட்ட காதல் மண விழாவில் முடியாமல் மரணத்தில் முடிந்துள்ளது. சென்னை எம்.கே.பி. நகரில் வசித்துவருவர் ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது பள்ளிப் பருவம் முதலே முகநூலைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். போலீசான மகேஷ். சென்னை புழல் சிறையில் சூப்பிரண்டென்ட் செந்தில்குமாரிடம் கன்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

policepolice

முகநூல் மூலமாக மகேஷ் பேச ஆரம் பித்ததும் ரோசியும் பேச ஆரம்பித்துள்ளார். ""எனக்கும் போலீஸ் ஆகணும் என்பதுதான் ஆசை'' என்று சொல்லியுள்ளார். மகேஷும் ""உங்களை ஐ.பி.எஸ். ஆகவே ஆக்கிவிடலாம்'' என்று சொல்ல... தொடர்ந்த உரையாடல் காதலானது. திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து காமத்தில் முடிந்து, கரு வளர்ந்துள்ளது. மாத்திரைகளால் கரு கலைக்கப்படவே, அடுத்தடுத்து இன்ப விளையாட்டுகள் தொடர்ந்து, மீண்டும் கரு உருவானது. இந்தமுறையும் கலைக்கச் சொல்லி மகேஷ் வலியுறுத்தியபோதுதான் ரோசிக்கு சந்தேகம் வந்தது. சண்டையும் வலுத்தது.

அக்டோபர் மாதம் புளியந்தோப்பு டி.சி. ராஜேஷ்கண்ணன் அவர்களை சந்தித்து புகார் கொடுக்கவே, அவர் எம்.கே.பி. நகர் ஆல் வுமன் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மலர் செல்வியிடம் புகாரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். 16 வயது பெண்ணை ஏமாற்றியது பற்றி விசாரிக்க வேண்டிய காவல்துறை, இருவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து மட்டுமே செய்தது.

Advertisment

மனம் நொந்துபோன ரோசி, நவம்பர் 19-ம் தேதி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டாள். பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாமல் 22-ம் தேதி இறந்துபோனார். தன் மகள் இறப்புக்கு காரணமான மகேஷை கைதுசெய்யச் சொன்ன தாயை, காவல்துறையே பேரம் பேசி மிரட்டி அனுப்பியுள்ளது. பணமும், புழல் சிறை அதிகாரியின் பின்புலமுமே மகேஷை காப்பாற்றியுள்ளது.

புழல் சிறையில் மகேஷ் பற்றி விசாரித்த போது, ""அதிகாரியின் பெயரைச் சொல்லி அவன் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லை. விதிகளை மீறிச் செல்போன் எடுத்துவருவான், கேட்டா சார் பெயரைச் சொல்லி மாஸ் காட்டுவான்'' என்றார்கள்.

police

Advertisment

இதன்தொடர்பாக ரோசியின் தாயார் எலிசெபத் கூறுகையில், ""பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, கொரானா காலம் என்பதால் பள்ளி செல்லமுடியாமல் வீட்டிலே இருந்து வந்தாள். சில நாட்களாவே கோபமாகவும், சோறு, தண்ணிகூட உண்ணாமல் கிடந்தாள். நான் கேட்டபோதுகூட எதையும் சொல்லாமலே இருந்துவந்தாள். திடீரென ஒருநாள் இரவு தீவைத்துக்கொண்டு என் பின்னாடி வந்து நின்றாள். என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி. அதன்பிறகு அவள் ஆஸ்பிட்டலில் சொன்ன வாக்கு மூலத்திற்குப் பிறகுதான் இந்த விஷயங்கள் எனக்கே தெரியவந் தது. அதன்பிறகு எம்.கே.பி. நகர் போலீஸ் ஸ்டேசனில் என் பெண் ணின் சாவுக்கு காரணமாக இருந்த அந்தப் பையனை கைது செய்யுங்க என்று 15 நாள் போராட்டத்திற்கு பிறகே, இன்ஸ்பெக்டர் ரமேஷ் எங்களை அழைத்து "நடந்தது நடந்து போச்சு... என்று ஒரு லட்சம் கொடுக்கிறாங்களாம். அதை வாங்கிட்டு பொழப்பை பாரு' என்று சொன்னாரு. நானும் ""2 லட்சம் தருகிறேன், அந்த பையனை இங்கே கொளுத்திக்கச் சொல்லுங்க'' என்று சொன்னேன். அதற்கு இன்ஸ்பெக்டர் "இந்தாம்மா எங்களால் வழக்கையே மாத்தி போட முடியும், கிளம்பு' என மிரட்டி அனுப்பிவிட்டார்'' என்றார்.

இதுதொடர்பாக பேசிய இன்ஸ்பெக்டர் ரமேஷ், ""இந்த வழக்கை சந்தேக மரணம் எனப் பதிவு செய்துள்ளோம். மேலும் செக்ஷன் 305, தற்கொலைக்கு தூண்டுதல் என மாற்ற முடியுமா என்று பார்த்துவருகிறோம். அந்தப் பையன் காதலித்தது உண்மைதான். ஆனால் கருவை கலைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கிடைத்தால் நிச்சயம் கைது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பாலா... ""இவர்கள் வெறுமனே தற்கொலை வழக்காக (செக்ஷன் 174) பதிவு செய்துள்ளனர். 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக பொய்யாகப் பேசி, தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டு தற்போது ஏமாற்றியதால்தான் அந்தப்பெண் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் இருக்கிறது. ஏன் இவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்ய வில்லை என, என்னிடமே ஆதாரத்தைக் கேட்டபோது, நானே அனைத்து ஆதாரத் தையும் கொடுத்தும்... எந்த வழக்கும் பதிவு செய்யவே இல்லை, முழுக்க மூடி மறைக்க நினைக்கிறார்கள்'' என்றார்.

இது தொடர்பாக மகேஷிடம் கேட்ட போது, பேச மறுத்துவிட்டார்.

அநீதியைக் கண்டு அதிர்ந்து போகாமல்... அவர் களுக்குச் சாதகமாக செயல்படும் காவல் துறையை யார் தட்டிக்கேட்பது.