அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மோதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. 24-ஆம் தேதி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் மிகப்பெரிய மோதலாக வெடித்திருக்கிறது.

ஓ.பி.எஸ்.ஸின் மனைவி இறந்த நேரத்தில்... இ.பி.எஸ். தனியாக சென்று கவர்னரை சந்தித்தார். துக்கத்தில் இருந்த ஓ.பி.எஸ்.ஸை தவிர்த்துவிட்டு கவர்னரை சந்தித்த இ.பி.எஸ்., தி.மு.க.வுக்கு எதிராக ஒரு பெரிய புகார்ப் பட்டியலையும் கொடுத்துவிட்டு வந்தார். இ.பி.எஸ். தனியாக கவர்னரை சந்திப்பதற்கு போட்டியாக ஓ.பி.எஸ்., மொழிபெயர்ப்பாளர் ஜே.சி.டி. பிரபாகரன் உதவியுடன் கவர்னரை சந்தித்து அரசியல் பேசிவிட்டு வந்தார். இது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல்களுக்கு ஒரு உதாரணம்.

admk

ஓ.பி.எஸ்., கவர்னரிடம் பெரிதாக எதையும் சொல்ல வில்லை. பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நல்ல உறவு தொடர்கிறது என்பதை மட்டும் சொல்லிவிட்டு வந்தார். எதற்காக ஓ.பி.எஸ். கவர்னரை சந்தித்தார் என அரசியல் வட் டாரங்கள் குழம்பிக்கொண் டிருந்த சூழ்நிலையில், "இ.பி.எஸ். கவர்னரை சந்தித்துவிட்டு வந்ததற்குப் போட்டியாகத்தான், கவர்னரை அவர் சந்தித்தார்' என்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமானவர்கள்.

Advertisment

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மோதல் 24-ஆம் தேதி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எதிரொலித்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நடக்கவிருக்கிற உட்கட்சித் தேர்தல் இவைகளைப் பற்றி புதிதாக எம்.ஜி.ஆர். மாளிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ராமநாதபுரம் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா பேசியபோது, சசிகலா பற்றிய பேச்சு வந்தது. "கூட்டத்திற்கு வருபவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களைப் பற்றி பேசக்கூடாது' என தெளிவான கட்டளையை இ.பி.எஸ். பிறப்பித்திருந்தார். சசிகலா பற்றியோ, தினகரன் பற்றியோ பேசக்கூடாது என மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருந்த கட்டளையை மீறி அன்வர்ராஜா, "சசிகலாவை கட்சியில் சேர்க்கவேண்டும் என்றால், மாநில நிர்வாகிகள் கூடி முடிவு செய்யலாம் என ஓ.பி.எஸ். பேசியது சரிதான்'' என்றார்.

தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அன்வர்ராஜா பேசிக்கொண்டி ருந்தபோது... திடீரென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "உனக்கும் நகர்ப்புற தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? நீ வெளியே பேசும்போது இ.பி.எஸ்.ஸை ஒருமையில் பேசுகிறாய்'' என்றபடி, தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு வேகமாக எழுந்தார்.

admk

Advertisment

அடிக்கப் பாய்வதுபோல் வந்த சி.வி.சண்முகத்தைப் பார்த்து, "நான் நரேந்திரே மோடிக்கே பயப்படாதவன்... பாராளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தின்போது "முஸ்லிம்களின் சாபம் உங்களை சும்மாவிடாது' என சொல்லிவிட்டு வந்தவன்...'' என பேசினார். "உனக்கு வாய் அதிகம்யா, உன்ன கட்டுப்படுத்த முடியாது. இதுல அவைத்தலைவர் பதவி வேற உனக்கு வேணும்னு கேட்டுக்கிட்டிருக்கியா?'' என சி.வி.சண்முகம் எகிறினார். மதரீதியாகவும் அன்வர்ராஜாவை சண்முகம் குறிப்பிட்டார் என்கிறார்கள் ர.ர.க்கள்.

அப்பொழுது, வைத்திலிங்கம் குறுக்கிட்டார். "அன்வர்ராஜா சீனியர். அவரை இப்படி ஒருமையில் பேசக்கூடாது'' என சி.வி.சண்முகத்தை அவர் கண்டித்தார். அதனால், வைத்திலிங்கத்திற்கும் சி.வி.சண்முகத்திற்கு மான மோதலாக மாறியது. அதில் இ.பி.எஸ். தலையிட்டார். "சசிகலா, அ.தி.மு.க.வில் சேர்க்கப்படமாட்டார் என தெளிவாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். இனி அந்தப் பிரச்சினையைப் பற்றி யாரும் பேசக்கூடாது'' என்றார்.

ஓ.பி.எஸ். வேகமாக எழுந்து, "அன்வர்ராஜா வுக்கு பேசுவதற்கு சுதந்திரம் இருக்கிறது. அனை வருக்கும் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு சுதந்திரம் இருக்கிறது. யாரும், யாரையும் கட்டுப் படுத்த முடியாது'' என்றும் "சி.வி.சண்முகம் நடந்து கொண்ட விதமும் தவறானது' என்றார். அவரையும் சி.வி.சண்முகம் நக்கலடித்தார். மற்றவர்கள் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். "இது முக்குலத்தோருக்கும் கவுண்டர்களுக்கும் நடைபெறும் மோதல். இதில் வன்னியரான சண்முகம் ஏன் மூக்கை நுழைக்கிறார்?' என மற்றவர்கள், தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

admk

அ.தி.மு.க.வைச் சேர்ந்த வழிகாட்டுதல் குழு உறுப்பினரான சோழவந்தான் மாணிக்கம், காரைக்குடி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமி ஆகியோர், பா.ஜ.க.வில் இணைந்த சூழ்நிலையில்... ஓ.பி.எஸ். தரப்பு "வழிகாட்டுதல் குழு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் எடப்பாடி பழனிச்சாமி, "கட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்க தேர்தல் கமிஷனிடம் சிறப்பு அனுமதி பெறலாம்'' என கோரிக்கை வைக்க... "அது வேண்டாம் தேர்தலை நடத்துவோம்'' என ஓ.பி.எஸ். முரண்டு பிடித் திருக்கிறார்.

மொத்தத்தில்... இருவரது மோதலால் அ.தி.மு.க. ஓடாத சைக்கிளாக மாறிவிட்டது என கட்சிக் காரர்கள் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் நிலையில்... தனது ஆதரவாளரான ஜே.சி.டி. பிரபாகரனின் மகனுக்கும் மகளுக்கும் கட்சியில் பதவி வாங்கிக் கொடுத்து, ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்... கட்சியின் அன்றாட செலவுகளை சந்திப்பதற்கு வைத்திருந்த பணத்தில், 100 கோடியை காணவில்லை. இதுபற்றி இ.பி.எஸ்.ஸிடம் மூத்த தலைவர்கள் கேட்டபோது, "எனக்கு ஐந்து வருடம் ஆட்சி நடத்தியதில் 300 கோடி ரூபாய் கடன் வந்துள்ளது. இந்தக் கடனை நான் எப்படி அடைப்பேன் என திணறிக்கொண்டிருக்கிறேன்'' என்று இ.பி.எஸ். பதில் கூற, கேட்டவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வெளியே வந்துவிட்டார்கள்.

இதற்கிடையே, அவைத்தலைவரை வருகிற டிசம்பருக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும், பொதுக்கூழுவை கூட்டவேண்டும், கட்சித் தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என... ஏகப்பட்ட வேலைகள் அ.தி.மு.க.வில் நிலுவையில் இருக்கிறது.

அவைத்தலைவர் பதவிக்கு பொன்னையன், அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. பொன்னையனை இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் ஆதரிக்கவில்லை. அன்வர்ராஜாவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவர் அவைத் தலைவரானால் சசிகலாவிடம் கட்சியை எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார் என்கிற பேச்சு இ.பி.எஸ். வட்டாரங்களில் உலாவருகிறது. தமிழ்மகன் உசேன் அவைத்தலைவரானால் சொன்னபடி கேட்பார். அவருக்கு செலவுக்கு தேவையானதை கொடுத்தால் போதும் என்கிற கருத்து வலுவாக வெளிப்படுகிறது.

admk

இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கக்கூடிய அ.தி.மு.க., நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க.வுக்கு போட்டியாக சந்திக்க தயாராகவே இல்லை. "உள்ளாட்சித் தேர்தலில் யார் செலவு செய்வது?' என்கிற கேள்விக்கு வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகிய மூவருடன் எடப்பாடியின் பெயரும் சேர்ந்து வருகிறது.

மொத்தத்தில் விரக்தியின் விளிம்பில் கூடி கலைந்த அ.தி.மு.க.வினரின் கவலையெல்லாம், அடுத்து தி.மு.க. யார் மீது ரெய்டு நடத்தும்? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற தி.மு.க. சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை கையில் எடுத்தால் என்ன செய்வது? என்பதே மிகுதியாக மிஞ்சியிருந்தது.

cvsanmugam

இந்நிலையில், சசிகலா குடும்பத்தில் டி.டி.வி.தினகரனை ஒதுக்கும் வேலைகள் வேகம் பெற்றுள்ளன. சசிகலாவின் சொத்துக்கள் எல்லாம் தினகரன், அனுராதா, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவகுமார், விவேக், இளவரசி, கார்த்திகேயன் ஆகியோரை சுற்றியே இருக்கிறது. இந்த சிலந்தி வலைதான்... சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கத்திலிருந்து வெளியே வராமல் வைத் திருக்கிறது. இதில் சிக்காமல் இருப்பவர் சசிகலாவின் சகோதரரான திவாகரன் தான். ஆகவே, சசிகலா குடும்பத்தில் முதற்கட்டமாக சொத்துக்களை பிரிக்கும் வேலை நடைபெற ஆரம்பித்துள்ளது. "சொத்துக்கள் பிரிக்கப்பட்டால், சசிகலாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. யார் முகத்தையும் சசிகலா திரும்பிப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை' என அவரது நலன்விரும்பி கள், சசிகலாவுக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஒரு விரிவான சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் சசிகலா, தினகரனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதற்காக குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பிற்கு சசிகலா ஏற்பாடு செய்துள்ளார். "அந்தச் சந்திப்பில் அனைத்து விவகாரங்களும் முடிவுக்கு வரும்' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்க மானவர்கள்.

இதற்கிடையே, தி.மு.க. தனது ஆயுதங்களான ரெய்டு போன்றவற்றில் மிகவும் நிதானமாக நகர்கிறது. "தி.மு.க.வின் ஆக்ஷன் வேகம் பெற்றால்... அ.தி.மு.க. சைலண் டாகிவிடும்' என்கிறார்கள் ர.ர.க்கள்.