உலகமே கொரோனா பீதியில் அதிர்ந்து கிடக்கிறது. இந்தச் சூழலில்... உலகம் முழுவதும் மூடி மறைக்கப்பட்ட பல்வேறு ரகசியங்களை வெளிக் கொண்டு வந்த "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயின் நிலை, மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் கருத்து சத்தமில்லாமல் நெரிக்கப்படுவதாக, இதைக் குறிப்பிட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர்.
அமெரிக்காவையே அதிரவைத்த விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே, கடந்த ஒரு வருடமாக இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி லண்டன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அமெரிக்க தரப்பு வழக்கறிஞர் ஜேம்ஸ் லீவிஸ், அசாஞ்சே வெளியிட்ட ஆவணங்களால் பலரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை அமெரிக்க அரசின் வசம் ஒப்படைக்கவேண்டுமென வாதிட்டார். அதற்கெதிராக அசாஞ்சேயின் வழக்கறிஞர்கள், "விசாரணை என்ற பெயரில் அசாஞ்சே 11 முறை விலங்கிடப்பட்டு, இரு முறை நிர்வாணமாக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இது அவரது மனநிலையைப் பாதிக்கும்' என வாதிட்டனர்.
ஜூலியன் அசாஞ்சேயின் வாழ்க்கையைச் சுருக்கமாகப் பார்ப்பது இந்த வழக்கைக் குறித்த கூடுதல் தெளிவை அளிக்கும். ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லி நகரில் ஜூலியன்பால் ஹாக்கின்ஸுக்கும் கிறிஸ்டின் ஆனுக்கும் மகனாகப் பிறந்தார் ஜூலியன் அசாஞ்சே. ஜூலியனுக்கு ஒரு வயதாகும்போது, கிறிஸ்டின் தனது கணவரை விவாகரத்துச் செய்துவிட்டு அசாஞ்சே என்பவரை மணந்தார். இவரது பெயரிலுள்ள அசாஞ்சேதான் ஜூலியன் பெயருக்குப் பின்னால் காணப்படுகிறது.
இளம்வயதில் ஜூலியனின் பொழுதுபோக்காக இருந்தது ஹேக்கிங் சாகசங்கள்தாம். எனினும் 1994-ல் ஆஸ்திரேலியப் போலீஸ் அவரை மடக்கியது. ஜூலியனின் தாய் அடுத்தடுத்து கணவர்களை மாற்றிக்கொண்டே போனது மனதளவில் ஜூலியனைப் பாதித்திருக்கலாம் என்பதைக் கருத்தில்கொண்டு, நீதிபதிகள் குறைந்தளவு தண்டனையும் அபராதமும் விதித்தனர்.
ஜூலியன் அசாஞ்சேயும் இன்னும் சிலரும் சேர்ந்து 2006-ல் விக்கிலீக்ஸைத் தொடங்கினர். ராணுவம், போலீஸ் போன்றவை மேற்கொள்ளும் அத்துமீறல், மனித உரிமை மீறல் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டு வந்தனர். ஏமனில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல், திபெத்தில் சீனாவின் காரணமாக ஏற்பட்ட கலவரம் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டபோதிலும், செல்சா மேனிங் எனும் பெண் அதிகாரி ஈராக் போர்ப் பதிவுகள், ஆப்கானிஸ்தான் போர்க் குறிப்புகள் எனும் தலைப்பிலான வீடியோக்களை விக்கிலீக்ஸுக்குக் கொடுக்க, அது வெளியாகி உலகையும் அமெரிக்காவையும் ஒருசேர அசைத்தது. ரகசிய சிறையான குவாந்தனமோ பே குறித்தும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் வெளிக்கொண்டு வந்தது விக்கிலீக்ஸ்தான்.
தவிரவும், 2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்ய அரசின் தலையீடு இருப்பதாகப் புகார் கிளம்பியது. தேர்தல் முடிவுகளை தனக்கு உகந்ததாக வளைக்க ரஷ்யா முயன்றதாகவும், இதே ரஷ்யாவுக்காகத்தான் ஜூலியன் அசாஞ்சே ராணுவ ரகசியங்களை திருட முயன்றதாகவும், 2016 தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்குப் பின்னணியிலும் விக்கிலீக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உண்டென அமெரிக்கா குற்றம்சாட்டியது.
2010-ல் பழைய பாலியல் வழக் கொன்றில் ஜூலியனுக்கு எதிராக ஸ்வீடன் சர்வதேச கைது ஆணை பிறப்பித்தது. அதனை மறுத்த ஜூலியன், ஐக்கிய இங்கிலாந்து போலீஸில் சரணடைந்து, பெயில் வாங்கி தற்காலிகமாகத் தப்பினார். ஈக்வடார் அரசிடம் புகலிடம் கேட்டு 2012-ல் விண்ணப்பித்தார். ஈக்வடாரும் தஞ்சமளிக்க, ஈக்வடாரிலுள்ள லண்டன் தூதரகத்திலே ஏழாண்டுக் காலத்தை கழித்தார். 2018-ல் ஈக்வடார் அரசு அவருக்கு குடியுரிமையும் அளித்தது. எனினும் ஓராண்டுக்குள் அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக குடியுரிமையை விலக்கிக்கொண்டது.
ஈக்வடார் குடியுரிமையை விலக்கிக்கொண்டதையடுத்து இங்கிலாந்தின் காவல்துறை 2019, ஏப்ரல் 11-ல் ஜூலியன் அசாஞ்சேயைக் கைதுசெய்தது. அவருக்கு வழங்கப்பட்ட பிணையை மீறித் தப்பிச்சென்றதற்காக 50 வாரம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்தும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதையடுத்து 2020, பிப்ரவரி 17-ல் 18 நாடுகளைச் சேர்ந்த 117 மருத்துவர்கள் சிறையில் அசாஞ்சேயை பார்வையிட்டு அசாஞ்சேயின் உடல்நிலை மிகமோசமாக உள்ளதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டுமென தெரிவித்தனர்.
அமெரிக்காவோ பல்வேறு கிரிமினல் குற்றங்களை இழைத்த ஜூலியன் அசாஞ்சேயை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் ஒளிவுமறைவுச் செயல்பாடுகளை வெளிப்படுத்துதல் பெரிய குற்றமல்ல. அசாஞ்சே வெளிப்படுத்திய ரகசியங்கள் மானுட சுதந்திரத்துக்கும், மனிதநேயத்துக்கும் அவசியமானவை. அசாஞ்சே போன்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் மட்டுமின்றி பாதுகாக்கப்படவும் வேண்டியவர்கள். ஜூலியன் அசாஞ்சே விடுவிக்கப்படவேண்டும் என்கிறார்கள் அவருக்கு ஆதரவானவர்கள்.
லண்டனில் அவருக்கு ஆதரவாக நடந்த போராட்டமொன்றில், பிரபல ராக் ஸ்டார் பிங்க் ப்ளாய்டு, டெல்லியைச் சேர்ந்த மாணவன் பாடிய கவிதையொன்றைப் பாடினார். மாணவர் ஆஸிஸின் அந்தக் கவிதை டெல்லியில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிராகப் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அசாஞ்சேவுக்கு எதிரானவர்களோ, “குற்றச் சட்டங்களை மீறுவதற்கான உரிமமாக ஜர்னலிஸத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்கமுடியாது. தப்புச் செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்'' என்கிறார்கள்.
அமெரிக்காவிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு இங்கிலாந்து தலையாட்டப் போகிறதா… மறுக்கிறதா என்பதில் இருக்கிறது ஜூலியன் அசாஞ்சேயின் எதிர்காலம்.
-க.சுப்பிரமணியன்