நக்கீரன் 2018, அக்டோபர் இதழில் "மோடி பெயரைச் சொல்லி பெண்ணுக்கு டார்ச்சர்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது. மூத்த பத்திரிகையாளர் என்றும் பா.ஜ.க.வின் முக்கிய புள்ளி என்றும் கூறிக்கொள்ளும் பிரகாஷ் எம்.சுவாமி என்பவர், தான் பிரதமர் மோடியுடன் இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துவருவதாகவும்; அவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான நடிகை காயத்ரி சாய் என்பவர் நம்மைத் தொடர்புகொண்டு தனக்கு நடந்த கொடுமைகளையும், பிரகாஷ் எம்.சுவாமி தன்னைப் பற்றி நக்கீரனில் செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டி வருவதாகவும் நம்மிடம் புகாரளித்தார்.
இதைத் தொடர்ந்து நாம் தீர விசாரித்து, பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் அளித்த புகார் மற்றும் ஆவணங்களின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டியுடனும் செய்தி வெளியிட்டோம். சமூகத்தில் மூத்த பத்திரிகையாளர் என்ற பெயரில் பிரதமர் படத்தை போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பதை நம்பி, பாமர மக்களோ பெண்களோ ஏமாறக் கூடாது என்ற தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் நல்லெண்ணத்துடன் எவ்வித உள்நோக்கமுமின்றி சம்பந்தப்பட்ட பிரகாஷ் எம்.சுவாமி கருத்துகளுடன் அந்த செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால் அந்த செய்தி வெளியானவுடன் "ஐக்கிய நாடுகளின் செய்தியாளர், மூத்த பத்திரிகையாளராகிய என்னைப் பற்றி நக்கீரனில் அவதூறான செய்தி வெளியிட்டுள்ளார்கள்' என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் நக்கீரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரகாஷ் எம்.சுவாமி புகாரளித்தார். அந்தப் புகாரில், தான் ஒரு பிராமணர் என்பதாலும் விகடன் குழுமத்தில் பணியாற்றுவ தாகவும், தன்னால் விகடன் விற்பனை அதிகரிப்பதாலும், பொறுத்துக் கொள்ளமுடியாமல் போட்டி மனப்பான்மையில் நக்கீரன் பத்திரிகை உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டதாக ஒரு வன்மமான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
இந்த வழக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் விசாரணை நடைபெற்று நக்கீரன் தரப்பு பதிலுரை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் ஐதராபாத்தில் விரிவான விசாரணை நடை பெற்றது. அதில் புகார்தாரரான பிரகாஷ் எம்.சுவாமி நேரில் ஆஜராகி தனது புகார் பற்றிய விளக்கத்தைக் கூறினார். நக்கீரன் சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் தேஜஸ்வி ரெட்டி ஆஜராகி, நக்கீரன் செய்தி வெளியிட்ட பிறகு பாதிக்கப்பட்ட பெண் காயத்ரி சாய் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் ஆவணங்களையும், அதன் விளைவாக 27.05.2019ல்
பிரகாஷ் எம்.சுவாமி மீது ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை யையும் சமர்ப்பித்து வாதாடினார்கள். அதனை ஏற்றுக் கொண்ட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, "பிரகாஷ் எம்.சுவாமி பற்றி 2018-ல் நக்கீரனில் வெளியான செய்தி யில் முகாந்திரம் உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து அவர்களது கருத்து களுடன் வெளியிடப்பட்ட அந்த நக்கீரன் செய்தி பிரஸ் கவுன்சில் விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைந்துள்ளது. அதில் பத்திரிகை தர்மம் மீறப்படவில்லை' என்று கூறி பிரகாஷ் எம்.சுவாமியின் புகாரை 22-08-2019 அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
உண்மையில் நக்கீரன் செய்தி வெளியான பிறகு பிரகாஷ் எம்.சுவாமி பெண்களுடன் ஆபாசமாக வும் மிரட்டலாகவும் பேசும் பல ஆடியோ, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதும், பிரகாஷ் எம்.சுவாமி தன் மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு... "அந்தப் புகாரில் முகாந்திரம் இருப்ப தாக'க் கூறி, சென்னை உயர்நீதிமன்றத் தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும் குறிப் பிடத்தக்கதாகும். ஆனாலும் பிரகாஷ் எம்.சுவாமி வன்மத்துடன் போலியான தகவல்களுடன் நக்கீரன் மீது புகாரளித்தார்.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போன்று போலியான புகார்களையும் துஷ்பிர யோகங்களையும் மீறி நக்கீரன் எப்போதும் உண்மைகளை உலகத்திற்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
-கீரன்