கடந்த மே 22-ஆம் தேதி பிபிசி பத்திரிகையில் பணியாற்றும் ரோக்ஸி கெக்டேகர் என்பவர் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது சகோதரர் கடந்த மே 16-ஆம் தேதியே இறந்தும், அன்று மாலை வரை தங்களுக்குத் தகவல் சொல்லாதது ஏன், தனது சகோதரர் தமன் 1 வென்டிலேட்டரில் வைக்கப்பட்டாரா... அவரது செல்போன், வாட்சுக்கு என்ன ஆனது என்ற கேள்விகளை எழுப்பினார்.
கொரோனா நோயாளியை வென்டிலேட்டரில் வைப்பது என்ன அத்தனை பெரிய பிரச்சனையா என்ன?
இல்லைதான்…. ஆனால் அதற்குமுன்னால் குஜராத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை கருத்தில்கொள்ள வேண்டும்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அகமதாபாத் பொது மருத்துவமனையில் தமன் 1 வென்டிலேட்டரை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்வில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் துணைமுதல்வரும் கலந்துகொண்டனர். ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜோதி சி.என்.சி. நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தமன் 1 வென்டிலேட்டர் கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் எதிர்பார்த்த பலனைப் பெறவில்லையென அரசு மருத்துவர்களிடமிருந்து வந்த அறிக்கைக்குப் பின், அகமதாபாத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர், குஜராத் மெடிக்கல் சர்வைஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு தமன் 1 வென்டிலெட்டரின் போதாமைகளைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதினார்.
கொரோனா நோய்த்தொற்றால் அதிக அளவில் உயிர்ப்பலி நேரும் குஜராத்தில், எதிர்க்கட்சிகளிடையே பரவலான எதிர்ப்பலைகளை இந்தக் கடிதம் கிளப்பியது. எனினும் தமன் வென்டிலெட்டர் பயனுள்ளதுதான். அதில் சில மேம்பாடுகள் செய்யப்படவேண்டும் என அந்தக் கண்காணிப்பாளர் நழுவிக்கொண்டார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல மயக்க மருந்து நிபுணர் பிபின் படேலோ, ""தமன் 1 உண்மையில் ஒரு வென்டிலேட்டரே அல்ல. அதில் சுவாசத்தை செட் செய்வதற்கான பாராமீட்டரோ, ஆக்ஸிஜன் மீட்டரோ இல்லை. ஆக்ஸிஜனை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கான வசதியில்லை. ஆக்ஸிஜன் ஈரப்பதத்துடன் நுரையீரலைச் சென்றடையாவிடில் நுரையீரல் வறண்டுவிடும்'' என்கிறார். மேலும் இந்த சாதனத்துக்கு மருத்துவ அங்கீகாரம் இல்லையென்பதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
பத்தே நாட்களில் இந்த வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டிருப்பதும், மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்படாததும் இந்த வென்டிலேட்டர்களின் இன்னும் சில பின்னடைவுகளாகும்.
மாறாக குஜராத்தின் முதன்மைச் சுகாதாரச் செயலாளர் ஜெயந்தி ரவி, ""மருத்துவத் துறை உரிமம் பெற்றிருக்க வேண்டியதாகக் குறிப்பிடும் 37 மருத்துவ சாதனங்களில் வென்டிலேட்டர் இடம் பெறவில்லை. மேலும் தமன் 1-க்கு உரிமம் தர வேண்டுமெனில் அதற்கு முறைப்படி 18 மாதங்கள் பிடிக்கும். பெருந்தொற்று நிலவும் நிலையில் அரசுகள் விரும்பினால் சில தளர்வுகள் செய்து கொள்ளலாம். இது பெரிய குற்றமில்லை'' என்கிறார்.
எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் சில விஷயங்களும் கவனத்தில் கொள்ளவேண்டியவையே. இந்த சர்ச்சை வெடிக்கும்முன்பு அகமதாபாத் பொது மருத்துவமனைக்காக இந்தியாவிலேயே தயாரிக் கப்பட்ட ஜோதி சி.என்.சி. நிறுவனத்தின் நூற்றுக் கணக்கான வென்டிலேட்டர்கள் இலவசமாகத் தரப்பட்டதாக ஒரு செய்தி பரவலான கவனம் பெற்றது. இந்நிறுவனத்தின் தலைவர் பராக்ராமசிங் ஜடேஜா முதல்வர் விஜய் ரூபானியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைக்காளான இந்த நிறுவனத்திடமிருந்து ஹெச்.எல்.எல். லைப்கேர் மூலம் மத்திய அரசு 50,000 வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்துள்ளதாக ஜெயந்தி ரவி குறிப்பிட்டார். இதற்கு பி.எம்.கேர்ஸிலிருந்து ரூபாய் 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த கேள்விகளுக்கு மத்திய அரசுத் தரப்பிலிருந்து பதில்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
“அதிர்ஷ்டவசமாக இந்த தமன் வென்டி லெட்டர்களை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. ஏற்கெனவே கைவசமிருக்கும் தரமான வென்டிலேட்டர்களே நோயாளிகளிடம் பயன்படுத்தப்பட்டுள்ளன’’ என்கிறார்கள் குஜராத் மருத்துவர்கள். தமன் வென்டிலெட்டர்கள் பயன்படுத்திய நோயாளிகளின் நுரையீரல் தமனிகளில் கிழிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அகமதாபாத் மருத்துவமனையில் இறந்துள்ள 300 கொரோனா நோயாளிகளில் எத்தனை பேருக்கு தமன் 1 பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களையும் வெளியிடவேண்டும் என்று கேள்வியெழுப்பியுள்ளது.
இந்த சர்ச்சைகளை அடுத்து தமன் 1 வென்டிலேட்டர்களை ஆர்டர் செய்திருந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அந்த ஆர்டரை ரத்துசெய்துள்ளார். மற்ற மாநிலங்களும் இந்த வென்டிலேட்டரை கொள்முதல் செய்ய தயக்கம்காட்டி வருகின்றன.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் பாரதப் பிரமதர் மோடியின் பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. ஜோதி சி.என்.சி. நிறுவனத்தின் கணிசமான பங்குகளுக்குச் சொந்தக்காரர்கள் வைர வியாபாரிகளான வீரானி குடும்பத்தினர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வருகையின் போது, மோடியைச் சந்தித்தார். அப்போது மோடி அணிந்திருந்த கிட்டத்தட்ட பத்துலட்சம் ரூபாய் மதிப்பிலான சூட், இந்த வீரானி குடும்பத்தால் மோடிக்கு அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மோடிக்கு வேண்டிய அந்த வைரவியாபாரி ஜோதி சி.என்.சி.யின் கணிசமான பங்குகளை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு வென்டிலேட்டர் ஆர்டர் அளிக்கப்பட்டிருப்பதும், அதன் குறைபாடுகளை அரசு அதிகாரிகளே காரணங்கள் சொல்லி சமாளிப்பதும் தேசிய அளவில் விவாதத்துக்கு ஆளாகியிருக்கிறது.
-க.சுப்பிரமணியன்