காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் கிராமத்தில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான "நரேன் பயர் ஒர்க்ஸ்' என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கே, திருவிழாக்களில் வெடிக்கக்கூடிய அதிர்வேட்டுகள், வண்ணப் பட்டாசுகள் மற்றும் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப் படும் பட்டாசுகளை சேமித்துவைக்கும் குடோன், ஆலைக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

fireworkaccident

இந்த பட்டாசு ஆலையில் குருவிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி புதனன்று, இங்கு 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வழக்கம்போல பட்டாசுகளுக்கான வெடிமருந்துகளைத் தயாரிப்பது, வெடி மருந்துகளை நிரப்புவது, வெடிகளுக்கான திரியைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்தனர். அப்போது மதியம் உச்சிவெயில் பொழுதில் திடீரென அங்கே ஏற்பட்ட தீ விபத்தில், பட்டாசு வெடிமருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களில் தீப்பிடித்து, அங்கிருந்த பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. இந்த வெடிவிபத்தில், அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக்கொள்ள, பலர் உடல் சிதறத் தூக்கி வீசப்பட்டனர். பட்டாசுகளின் அதிர்வால் அப்பகுதியிலிருந்த 4 கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாயின.

இந்த வெடிவிபத்தின் அதிர்வு, சுற்றியுள்ள 5 கி.மீ. வரை கேட்டதால் அப்பகுதி மக்களனைவரும் பதட்டத்தோடு ஓடிவந்து பார்த்ததோடு, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, காஞ்சிபுரத்திலிருந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் வந்தன. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். பின்னர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரங்களின் மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு, அவற்றில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சையளித்தனர். பலத்த காயமடைந்த தொழி லாளர்கள், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில், சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் 5 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தனர்.

Advertisment

ff

காஞ்சிபுரம் பல்லவன் தெருவைச் சேர்ந்த பூபதி, பள்ளூரைச் சேர்ந்த முருகன், குருவிமலையைச் சேர்ந்த தேவி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுதர்சன், குருவிமலை, முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சசிகலா, காஞ்சிபுரம் வளர்த்தோட்டத்தைச் சேர்ந்த கங்காதரன், கங்காதரனின் மனைவி விஜயா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கவுதம், குருவிமலையைச் சேர்ந்த கோட்டீசுவரி மற்றும் ரவிக்குமார் என மொத்தம் 10 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களில், சுதர்சன் என்பவர், பட்டாசு ஆலையின் மற்றொரு உரிமையாளராவார். மேலும் பலர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

f

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியையும், அனுதாபத்தையும் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி சார்பாக, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந் தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப் பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பட்டாசு ஆலை விபத்துக்களைத் தடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சியினரும் பேசினர். தீர்மானத்துக்கு விளக்கமளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமசந்திரன், "விபத்தில் காயமடைந் தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிறிய பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுவதால்தான் விபத்து ஏற்படுகிறது'' என்று தெரிவித்தார்.