சங்கரன்கோவில் அ.தி.மு.க. துணை சேர்மன், அ.தி.மு.க. மா.செ. ஆகியோரின் துணையுடன் நகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி தி.மு.க. சேர்மன் பதவியை கைப்பற்றியிருக்கிறது. ஆனாலும், உண்மையில் அங்கு வென்றதும், தோற்றதும் தி.மு.க.வே என்கிறது செங்குந்தர்கள் சமூகம்.
30 வார்டுகள் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 12 வார்டுகளிலும், தி.மு.க. 9 வார்டுகளிலும், ம.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. தலா ஒரு வார்டிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். நகர்மன்ற தலைவருக்கான தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த உமா மகேஸ்வரி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், இருவரும் தலா 15 வாக்குகள் பெற்றதால் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து, குலுக்கல் முறையில் நகராட்சி தலைவராக உமா மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக அ.தி.மு.க.வின் கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வின் தென்காசி வடக்கு மா.செ.வுமான ராஜாவிற்கும், நகர்மன்றத் தலைவியான உமாமகேஸ்வரிக்கும் பனிப்போர் துவங்க, இதன் பின்னணியில் "சங்கரன்கோவில் நகராட்சிக்குட் பட்ட முப்பது வார்டு பகுதிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை' எனக்கூறி அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் உமாமகேஸ்வரி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டி, நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். கடந்த ஜூன் 2ஆம் தேதி நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 30 பேரில் 28 பேர் ஆதரவாக வாக்களிக்க, நகராட்சி தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழக்க, நகராட்சி தலைவர் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு நடத்தியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உமா மகேஸ்வரி செய்த புகாரை யேற்று, மறைமுக வாக்கெடுப்பு நடத்த உத்தர விடப்பட்டது. அதன்படி, ஜூலை 18ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதிலும் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களிக்க, இப்போதும் பதவியிழந்தார் உமா மகேஸ்வரி. பின்னர், அ.தி.மு.க.வின் கண்ணன், பொறுப்பு நகர்மன்றத் தலைவரானார். இச்சூழலில் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டது.
நகர்மன்றத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க. சார்பாக கௌசல்யாவும், அ.தி.மு.க. சார்பாக அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். நகராட்சி ஆணையர் கிங்ஸ்டன் முன்னிலையில், மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது. உமா மகேஸ்வரியும், அவரது ஆதரவு கவுன்சிலர் விஜயகுமாரும் வாக்கெடுப்பில் பங்கு பெறாததால், மீதமுள்ள 28 கவுன்சிலர்களில் கௌசல்யாவிற்கு 22ம், அ.தி.மு.க. அண்ணாமலை புஷ்பத்திற்கு 6 வாக்குகளும் கிடைக்க, கௌசல்யா நகர்மன்றத் தலைவராக தெர்ந்தெடுக்கப் பட்டார். 12 வாக்குகளைக் கொண்ட அ.தி.மு.க.வில் 6 வாக்குகள் மாறிய விவகாரம், அ.தி.மு.க. தலைமை வரை சென்றுள்ளது.
"துணைத்தலைவருக்கான தேர்தலில் 16 வாக்குகள் வாங்கிய அ.தி.மு.க., இப்பொழுது வெறும் 6 வாக்குகளை மட்டும் வாங்கியதேன்? இது தி.மு.க. மா.செ.வினாலும், அ.தி.மு.க. மா.செ.வினாலும் முன்னரே பேசி முடிக்கப்பட்ட ஒன்று. இதனை செயல்படுத்தியது நகர்மன்றத் துணைத் தலைவரான கண்ணன். அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு தலைக்கு ரூ.5 லட்சம் பேசப்பட்டு, ரூ.4 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. மா.செ.வும் கடையநல்லூர் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமுரளி, அனைத்துக் கவுன்சிலர்களையும் கூப்பிட்டு, "அப்படியே ஓட்டை மாத்திப்போட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும். கட்சிப் பதவியிலுள்ளவர்கள் மட்டும் அ.தி.மு.க.விற்கு வாக் களியுங்கள்' எனக்கூற, அதன்படி நடந்திருக்கிறது. அதுபோல் உள்ளூரிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, ந.செ. ஆறுமுகம் ஆகியோர் சொல்வதைக் கேட்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டால் தி.மு.க. ஏன் ஜெயிக்காது?'' எனக் கேள்வி எழுப்பினார் சங்கரன்கோவில் அ.தி.மு.க. நிர்வாகி.
தி.மு.க. நிர்வாகியோ, "தி.மு.க.வின் தென்காசி வடக்கு மா.செ.வும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வுமான ராஜாவிற்கு இது பின்னடைவே. சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவி என்பது செங்குந்தர்கள் சமூகத்திற்கே என்பது வழமையான ஒன்று. தனித்தொகுதி என்பதால் இது எங்களுக்கான கௌரவம் என்பது அந்த சமூகத்தின் நிலைப்பாடு. முன்னர் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உமாமகேஸ்வரியும், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துலெட்சுமியும் செங்குந்தர் சமூகத்தை சார்ந்தவர்கள். இந்த முறை அப்படி நடக்கவில்லை. செங்குந்தர் சமூகம் சார்பில் அ.தி.மு.க. போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்ற நிலையில், வேண்டுமென்றே வேறொரு சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை புஷ்பத்தை போட்டியிட வைத்தது அ.தி.மு.க. அதுபோல் தி.மு.க. ந.செ. பிரகாஷின் மனைவி முத்துமாரி செங்குந்தர் சமூகம் என்றாலும், தேவையான பணத்தை செலவழிக்க தகுதியில்லையென்று அவரை கழட்டிவிட்டார் மா.செ. ராஜா. ஆகையால் ஒட்டுமொத்த செங்குந்தர் சமூகமும் ராஜாவிற்கு எதிராகியுள்ளது. அது சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் இங்கு வென்றாலும், அது தோல்வியே'' என்கிறார் அவர்.
தி.மு.க.வின் வில்லங்க வெற்றி, சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும்!
-வேகா, ப.ராம்குமார்