ஜெயராஜ், பென்னிக்ஸ் விஷயத்தில் காவலர்கள் உணர்ச்சிவசப்பட்டு, மனிதாபி மானத்தை இழந்து மிருகத்தனமாக நடந்து கொண்டது காக்கி களுக்கே உரிய இயல்பு. அதே நேரத்தில் காவல் நிலைய சித்ரவதைக்குப் பிறகு, நீதி மன்றக் காவலுக்கு அனுப்பு வதற்கு முன்பாக, சாத்தான் குளம் அரசு மருத்துவமனை மருத்துவரும், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவரும் ஒரு கணம் இரு வரையும் தீர விசாரித்திருந்தால் காவல் அடைப்பிற்கு செல்லவேண்டி யிருந்திருக்காதே! உயிரிழப்பும் நடந்திருக்காதே. FIT FOR REMAND என கொடுக்கப் படவேண்டிய அவசியம் என்ன? என்கின்ற கேள்விகள் அனைவரிடமும் உண்டு. ஆனால் பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இச்சூழலில் அன்று நடந்தது என்ன என்பதனை மருத்துவர் வினிலாவும், நீதிபதி சரவணனனும் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தை கோவில்பட்டி ஜே.எம்.1 நீதிபதி பாரதிதாசனிடம் முறையே திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையிலும், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திலும் கொடுத்த நிலையில் அது பதிவுசெய்யப்பட்டு சி.பி.ஐ. தரப்பின் ஒரு ஆவணமாக மாறியுள்ளது. அந்த வாக்குமூலங்கள் நக்கீரனுக்கு பிரத்யேகமாக கிடைக்க FIT FOR REMAND-க்கு பரிந்துரைத்தது ஏன்? என்கின்ற விடை கிடைத்துள்ளது.
மருத்துவர் வினிலா:
மருத்துவர் வினிலா கன்னியாகுமரி மாவட்டம் பொழிக்கரையை சேர்ந்தவர். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.ஸையும், மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.டி.யையும் நிறைவு செய்தவர். கடந்த செப்டம்பர் 5, 2019 முதல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திலோ, ""கடந்த 20/06/2020 அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பணியில் இருந்தேன். அப்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரு வருக்கும் ஓ.பி.சீட்டை பதிவு செய்துவிட்டு, அடிப்படை பரி சோதனைகளான உடல் எடை, உயரம், உடல் வெப்ப நிலை, ரத்தக்கொதிப்பு ஆகியனவற்றை பரிசோதித்துவிட்டு அவர்களை என்னிடம் 9 மணிக்கு அழைத்து வந்தார்கள் போலீசார். அவர்கள் வரும்போதே இரண்டு பேருக்கான ரிமாண்ட் SCREENING FORM மற்றும் மெடிக்கல் மெமோ வுடன் வந்திருந்தார்கள்.
ஜெயராஜ் குறித்து:
முதலில் ஜெயராஜை பரிசோதனைக்காக அழைத்து அவரது பெயர், அடையாளக்குறிகள், யாரால் அழைத்து வரப்பட்டார்கள் என்கின்ற விவரம், காயத்தின் காரணத்தை விளக்கும் குறிப்பாணையை வாங்கிப் பார்த்ததில் அதில் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் காவலர்கள் முன் புரண்டு, புரண்டு பிரச்சனை செய்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது என்றிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு போலீஸ் துரத்தும்போது ஏற்பட்ட காயம் என்றார். அதனை விபத்துப் பதிவேட்டில் பதிவு செய்தேன். அதுபோக அவர் பின்பக்க புட்டத்தில் ஏற்பட்ட காயத்தில் மிகுந்த வலியிருப்பதாகக் கூறினார். அதனைப் பார்த்ததில் இரண்டு புட்டங்களிலும் பரவலாக சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. அதில் வலதுபக்க புட்டத்தில் காயத்தின் அளவு 2*3 செ.மீ. அளவு இருந்தது. அவர் அணிந்திருந்த வேஷ்டியில் ரத்தக்கறை இருந்தது. தனக்கு புட்டத்தில் மட்டும் காயங்கள் இருந்தது எனக் கூறியதால் முழுவதுமாக சட்டையை அவிழ்த்துப் பரிசோதிக்கவில்லை. சுத்தம் செய்யவோ, அதன்மேல் வைத்து கட்டுப்போடவோ பரிந்துரைக்கவில்லை. அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக அவரே கூற அதனை மருத்துவப் பதிவேட்டில் பதிவுசெய்தேன். புட்டத்தில் இருந்த காயங்கள் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், செப்டிக் ஆகாமல் இருக்கவும் சில மருந்துகளை பரிந்துரைத்தேன். அதன்பின் அவரை ஒரு மணி நேரம் ஓய்வெடுக்க வைத்து ரத்தக் கொதிப்பை பரிசோதனை செய்ததில் 160/80 என கணிசமான அளவுக்கு குறைந்தது.
பென்னிக்ஸ் குறித்து:
அவரது தந்தை ஜெயராஜ் கூறியதைப் போல் தன்னையும் போலீஸ் துரத்தியதாலே இந்த காயம் ஏற்பட்டதாகக் கூறினார் பென்னிக்ஸ். அவரது வலது பக்க ஆட்காட்டி விரலில் 0.2 ல 0.1 செ.மீ அளவிலான சிராய்ப்புக் காயம் காணப்பட்டது. அதுபோல் அவரது இடது உள்ளங்காலில் பாதங்களின் முன்பகுதியில் வீக்கக் காயம் ஏற்பட்டது. அவர் பின்புட்டத்தைக் காண்பித்தபோது சிராய்ப்புக் காயமும் காணப்பட்டது. ஜெயராஜிற்கு இருந்ததைவிட பெரிதாக குறைந்தது 4 செ.மீ அளவில் காயம் காணப்பட்டது. அதன் மேற்தோல் பிய்ந்து லேசான சிவப்பு நிறத்துடன் காணப்பட்ட அந்த காயத்தை விபத்து பதிவேட்டில் நான் பதிவிடவில்லை என்பதே உண்மை. அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதால் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் எனக் கூறியதால் அதனை மட்டுமே பதிவுசெய்தேன்.
FIT FOR REMAND-க்கு பரிந்துரைத்தது ஏன்..?
மருத்துவமனைக்கு வரும்பொழுது எவ்வித சிரமுமின்றி நன்றாகத்தான் எனது அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்திருந் தார்கள். அவர்களுக்கு ரத்தக் கொதிப்பு குறைவதற்காக வெளியில் இருந்த இரும்பு நாற்காலியிலேயே அமர வைக்கப்பட்டார்கள். ஒரு நபருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானதாக இருந்தது என்பதாலேயே அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை என்று கூறி விடமுடியாது. ஆனால் ஒரு நபருக்கு ரத்தக்கொதிப்புடன் கூடிய தலைசுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சுவலி மற்றும் கண்மங்கலான அறிகுறியாக இருந்தால் ஆபத்தான நிலை எனக் கருதி உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கலாம். இறந்து போன இருவ ருக்கும் அவ்வாறான அறிகுறிகள் இல்லாததால் FIT FOR REMAND-க்கு பரிந்துரைத்தேன்."" என்கின்றது.
குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன்:
""20/06/2020 அன்று காலை சுமார் 10.45 மணியளவில் மாவட்ட நீதிமன்றம் செய்திருந்த காணொளி கலாந்தாய்விற்காக எனது குடியிருப்புப் பகுதியில் இருந்து நீதிமன்றத்திற்கு வரும்போதே இருசக்கர வாகன நிறுத்தத்தில் இரண்டு நபர்கள் மற்றும் காவலர் செல்லத்துரை, முத்துராஜ், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 4 போலீசார் நின்று கொண்டிருப்பதை முதன்முறையாக பார்த்தேன். அவர்கள் வணக்கம் வைத்தார்கள். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்துவிட்டு நீதிமன்ற பின்பக்க வாயில் வழியாக மூன்றாம் தளத்திற்கு கலந்தாய்விற்காக சென்றுவிட்டேன். அன்றைய தினம் கலந்தாய்வு 12.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட எனது அறைக்குத் திரும்பினேன். பின்னர் நீதிமன்ற ஊழியர்கள் காவல் அடைப் பிற்காக இருவரை அழைத்து வந்துள்ளதாகக் கூற, நீதிபதிகள் செல்லும் பாதையில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றினருகே ஜெய ராஜ், பென்னிக்ஸ் இருவரையும், போலீசாரையும் வரக் கூறிவிட்டு என்னுடைய உதவியாளர் சின்னத்துரை மற்றும் நீதிமன்ற தட்டச்சர் சுதாகர் ஆகியோருடன் நீதிபதிகள் பயன்படுத்தும் வாசல் அருகேயுள்ள வேப்பமரத்தடியில் நின்றோம். கயிற்றின் மறு பக்கம் அவர்கள் அனைவரும் நின்ற நிலையில், ஜெயராஜ்-பென் னிக்ஸை நேராக நிற்கும்படி கூறினேன். அப்போது மணி 11.30.
15 அடி தூரத்திலேயே அவர்களிருவரும் நிற்க வைக்கப் பட்டிருக்க, வழக்கு கோப்பினை தராமல் நீதிமன்ற அடைப்புக் காவல் விண்ணப்பத்தினை மட்டுமே போலீசார் கொடுத்தார்கள் எனினும் அவர்கள் மீது சுமத்தப் பெற்றிருக்கும் குற்ற வழக்குக் குறித்து விவரமாக எடுத்துக் கூறினேன். அவர்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. மருத்துவச்சீட்டில் குறிப்பிட்ட காயங்களின்படி வெளிப்படையான காயங்கள் எதனையும் பார்க்கவில்லை. அவர்களை தனியாக அழைத்து எதுவும் கேட்கவில்லை. மாறாக காயங்கள் இருக்கின்றதா? என்று கேட்டேன். இல்லை என்றார்கள். போலீசார் அடித்தார்களா..? ஏதேனும் புகார் உண்டா..? என்று கேட்டதற்கும் இல்லை என்றார்கள். ஆனால் அவர்களை தனியாக அழைத்துக் கேட்கவில்லை என்பதே உண்மை.
மற்றபடி ஒரு நபருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமானதாக இருந்தது என்பதாலோ அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலை என்று கூறிவிடமுடியாது. ஆனால் ஒரு நபருக்கு ரத்தக்கொதிப்புடன் கூடிய தலைசுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சுவலி மற்றும் கண்மங்கலான அறிகுறியாக இருந்தால் ஆபத்தான நிலை எனக் கருதி உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கலாம். இறந்துபோன இருவருக்கும் அவ்வாறான அறிகுறிகள் இல்லாததால் எஒப எஞத தஊஙஆசஉ-க்கு பரிந்துரைத்தேன்"" என்கின்றது அவரின் வாக்குமூலம்.
போலீஸ் காவலில் அழைத்து வரப்படுபவர்கள் எப்படி ட்ரீட் செய்யப்படுகிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு வாக்குமூலங்களும் ஆவண சாட்சியங்களாகியுள்ளன. சாத்தான்குளம் காவல்நிலையக் கொடூரத்தின் இன்னும் பல பக்கங்கள் மெல்ல மெல்ல வெளிவரும்.
-நாகேந்திரன்
படங்கள்: விவேக்