தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் - தமிழ் செல்வி தம்பதியினரின் வீடு, குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்குமளவிற்கு நிசப்தமாக இருக்கிறது. இத்தம்பதிக்கு ரமேஷ் பாலகுரு, சிவராமன் ஆகிய இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் ரமேஷ் பாலகுரு, பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சிங்கப்பூரில் கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு இரண்டாண்டுகள் பணிபுரிந்த நிலையில் சிங்கப்பூரிலுள்ள ஈஷா மையத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஹிப்னாடிசம் செய்யப்பட்டதன் காரணமாக வேலையை ரிசைன் செய்துவிட்டு 2010ஆம் ஆண்டில் கோவையிலுள்ள ஈஷா மையத்தில் அடைக்கலமாகியுள்ளார்.
"ஈஷா மையத்தில் நுழைந்த நாள் முதல் என்னுடைய மகன் தன்னிலை மறந்து அங்கேயே இருக்கிறான். நாங்கள் வீட்டிற்கு அழைத்தால்கூட வரமாட்டேன் என்கிறான். நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அவன் பதிலே பேசமாட்டேன்கிறான். நாங்கள் கஷ்டப்பட்டு அவனை படிக்கவைத்து ஒரு நல்ல இடத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டோம். இப்போது எங்களுக்கு வயதாகி விட்டது. என் கணவருக்கும் எனக்கும் முதுமை காரண மாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. நானும், எனது கணவரும் கோவை ஈஷா மையத்துக்கு சென்று என் மகனைப் பார்க்கப் போனோம். ஆனால் அவன் தலையை குனிந்துகொண்டு எங்கள் முகத்தைப் பார்க்கக்கூட மாட்டேன்கிறான். அவனைச் சுற்றி நிறைய பேர் நிற்பதால் அவன் எங்களிடம் பேச முடியாமல் தவிக்கிறான். நாங்கள் வணங்காத தெய்வமில்லை. எங்களின் கடைசிக் காலத்தில் எங்களை கவனித்துக்கொள்ள எங்கள் மகன் எங்களுக்கு தேவை. தயவுசெய்து எங்கள் பிள்ளைகளை வெளியே விடுங்கள். ஏழு வருஷத்துக்கு முன்பே காவல்துறையிலும், கலெக்டர் ஆபீசிலும் புகார் மனு அளித்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
எங்களை அம்மா, அப்பா என்று அழைப்பதில்லை. ஒரு போன் கூட செய்வதில்லை. அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்து வைத்துள்ளார்கள். உங்கள் மகன் வந்தால் கூட்டிட்டு செல்லுங்கள் என்று ஈஷா மையத்தில் சொல்கிறார்கள். ஹிப்னாடிசம் செய்துவைத்த பிறகு எப்படி அவன் வருவான்? நாங்கள் போன் செய்தால் மட்டும்தான் எடுத்துப் பேசுகிறான். அதுவும் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு கட் செய்து விடுகிறான். ஒரு நல்ல இடத்தில் வேலை செய்துவிட்டு இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வந்து இப்படி ஆகிவிட்டான். ஈஷா மையத்தில் அநியாயம் செய்கிறார்கள். நாங்கள் அந்த ஈஷா மையத்துக்கு சென்று எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டோம். எங்களால் முடியவில்லை. இப்போது வயது முதுமை காரணமாக ஈஷா மையத்துக்கு போய் எங்கள் மகனைக்கூட பார்க்க முடியவில்லை. எங்கள் மகன், எங்களை வந்து பார்க்கவேண்டிய நிலைமை மாறி, இந்த முதுமையில் நாங்கள் போய் எங்கள் மகனைப் பார்க்க வேண்டிய நிலை. இப்போது கோயம்புத்தூருக்கும், பெங்களூருக்கும் ஈஷா மையத்துக்கு மாறிமாறி சென்று அவர்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறான்.
பையனைப் பார்த்தாலே அழுகை அழுகையாக வருகிறது. மொட்டைத் தலையோடும், காவி உடுப்போடும், மகனைப் பார்த்துத் தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லை. எங்கள் மகனை நல்ல தோற்றத்தில் பார்த்துவிட்டு இந்த கோலத்தில் பார்ப்பதற்கு எங்களுக்கு தைரியமில்லை. வீட்டில் அழுகையும் கண்ணீருமாகத்தான் இருக்கிறோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கணவர் மனதுக்குள் அழுகிறார். நான் வெளியே சொல்லி அழுகிறேன்.
எங்கள் மகன் எங்களுடன் இருக்கும்வரை நண்பர்களுடனும், குடும்பத்தினருடன் பாசமாக இருப்பான். யாரையும் தள்ளி நில்லுங்கள் என்றுகூட சொல்ல மாட் டான். என்னைக்கு ஈஷா மையத்துக்குள் சென்றானோ, அன்றைக்கே அவன் ஒன்னு மில்லாமல் போய்விட்டான். நல்ல படிப்பு, அறிவாற்றல் என அனைத்திலும் அவன் கெட்டிக்காரன். அம்மா, அப்பாவை கடைசிவரை பார்த்துக்கொள்வேன் என்று சொன்ன பையன், இப்போது நாங்கள் போன் செய்தாலே ஒரு நிமிடம் தான் பேசுகிறான். முக்கால்வாசி நேரம் அவன் போன் சுவிட்ச்-ஆப் என வருகிறது. ஈஷா மையத்தினர் பேச விடாமல் தடுப்பதும், மூளைச்சலவை செய்திருப்பதும் தான் காரணம். அம்மா, அப்பாவைவிட ஈஷா மையத்தில் மகனுக்கு என்ன பிடித்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆன்மிகம், அது இதுன்னு சொல்லி என் மகனையும், அங்கிருக்கக்கூடிய பிள்ளை களையும் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறார்கள். என் மகனை மீட்டுத்தரக்கோரி புகாரளித்துவிட்டு வந்த அடுத்த நாளே என் மகனை உருட்டி மிரட்டி "எனக்கு இங்கே இருக்க பிடித்துள்ளது. என் விருப்பப்படி தான் இங்கு இருக்கிறேன்' என பேட்டி கொடுக்கச் செய்கிறார்கள். என் மகன் மிகவும் பயத்துடன் அங்கே இருக்கிறான். அங்கே என்ன நடக்குது என்று அவனுக்கு தெரியாமலா இருக்கும்?.
முதல் தடவை நாங்கள் பார்க்கப்போன சமயத்தில் அவனை அழைத்து வரவேயில்லை. நாங்கள் ஆட்கொணர்வு மனு கொடுப்போம் என்று சொன்ன பிறகு ஒரு அரை மணி நேரம் கழிச்சு என் மகனை கூட்டிக் கொண்டுவந்து விடு கிறார்கள். அப்போதும் என் மகனை பேச விடாமல் அவனைச் சுற்றி ஏழெட்டு பேர் நிற்கிறார்கள். பிறகு எப்படி அவன் பேசு வான்? அதன்பிறகு இரண்டு முறை நான் தனியாக என் மகனை சந்திக்கச் சென்றேன். அப் போது அவனை வீட்டுக்கு அழைத் தேன். அவன் எங்களை "இங்கு வராதீர்கள், நீங்கள் போய் விடுங்கள். போய்விடுங்கள். நான் வருகிறேன்' என்று தான் சொன்னானே தவிர... வேறெந்த பதிலும் இல்லை. இப்போது எங்களுக்கு வயது அதிகமாகிவிட்டதால் கோயம்புத்தூருக்கு செல்ல முடியாத நிலையில் தவிக்கிறோம். உங்கள் குழந்தைகளைப் போய் பாருங்கள் என்று நீதிமன்றம் சொல்கிறது. முதுமையில் இன்னல்படக்கூடிய பெற்றோர்கள் எப்படி போய் ஈஷா மையத்தில் தங்கள் குழந்தைகளைப் பார்க்க முடியும்? எங்கள் குழந்தைகளை ஈஷா மையத்தில் அடைத்து வைத்துக்கொண்டு பெற்றோர்களைப் போய் பார்க்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்?
எங்கள் மகனைப் போல நிறைய பிள்ளைகள் அங்கே இருக்கிறார்கள். பெற்றோர்கள் எல்லாம் முதுமையில் இருக்கிறோம். எனவே ஒரு நேர்மையான அதிகாரியை நிய மித்து, ஈஷா மையத் தில் அடைக்கப் பட்டுள்ள பிள்ளை களை விடுவித்துக் கொண்டுவர நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசாங்கத்தை கைகூப்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நல்ல முடிவு வருமென்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார் ரமேஷ் பால குருவின் தாய் தமிழ்செல்வி.
முன்னதாக, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அத்துமீறல் களைக் கண்டித்தும், ஈஷா மையம் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், மாதர் சங்கம் சார்பில் வியாழனன்று போராட்டம் நடத்தப்போவ தாக அறிவித்தது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். போராட்டத்திற்கான இடமாக ஈஷா மையத்தையே கேட்க, எதுக்கு வம்பு என ஆலாந்துறை காவல்துறை அந்த இடத்தைத் தவிர்த்து பேரூரில் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி என்றது.
எங்களுக்கு ஈஷா மைய வாசலே வேண்டுமென விடாப்பிடியாக போராடிப் பார்த்தும் அதற்கான அனுமதியை மறுத்தது ஆலாந்துறை. காவல்துறை. தடுத்தாலும் பரவாயில்லை, பேரூர் வேண்டாம்., இருட்டுப்பள்ளத்தில் போராட்டத்தினை நடத்துவோம் என அறிவித்து, கூறியது போலவே சுபஸ்ரீ காணாமல் போன பேக்கரி முன்பே போராட்டத்தினை நடத்தினர். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்க, ஈஷா யோகா மையத்தை கண்டித்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
மாநில பொதுச்செயலாளர் ராதிகா, "ஈஷா மையம் மீதான புகார்களை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு எந்த விசாரணையும் நடத்தாமலிருப்பது சரியல்ல! யானை வழித்தடம் அழிப்பு, மர்மமான முறையில் ஈஷாவில் இருப் பவர்கள் காணாமல் போனது, காலாவதியான மருந்து கொடுத்தது என ஏராளமான புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோவை மாவட்ட காவல்துறை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவே பார்க்கிறோம். ஈஷா யோகா மீதும், ஜக்கி வாசுதேவ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதுமிருந்து பெண்களைத் திரட்டிவந்து ஈஷா யோகா மையம் முன்பு மீண்டும் போராட்டம் நடத்துவோம்'' எனத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், போராளிகளைக் கடந்து ஈஷா மையத்திற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
இது இப்படியிருக்க, பவர்ஹவுஸ் எனுமிடத்தில், மர்ம தேசமாக விளங்கும் ஈஷா யோகா மையம் மீது நீதிமன்ற கண்காணிப் பில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்திட வும், ஆசிரமத்தின் மீதான புகார்களை கேட்டுப்பெற்று விசாரணை செய்திட வேண்டியும், அதிலும் திரும்பப் பெற்ற வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்திடவும், விசாரணைக் காலத்தில் ஜக்கி வாசுதேவை கண்காணிப்பு வளையத்தில் தனிமைப்படுத்திட வேண்டியும் ஆர்ப்பாட்டத்தை துவக்கியது இந்திய தேசிய மாதர் சம்மேளனம். ஈஷாவில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதை குறிக்கும்விதமாக உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு முன்பாக, ச.எ.ஒ.ர.உடைய ஈஷாவுக்கு எதிரான இன்றைய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வெற்றிபெற புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு.
படங்கள்: மூர்த்தி, விவேக்