ஸ்டெர்லைட்டிற்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் கொண்டு 13 நபர்களை பலி வாங்கிய சம்பவம் நடந்து நூறு நாட்கள் கடந்துவிட்டன. இவ்வேளையில், தமிழக மற்றும் மத்திய அரசின் ஆதரவோடு எப்படியாவது ஆலையை திறப்பதற்கான வேலைகள் தீவிரமாகியுள்ளன.
40 பி.ஆர்.ஓ.க்கள்:
தமிழக அரசாணையின் அடிப்படையிலான கொள்கை முடிவு என, கடந்த மே 28 அன்று ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பின் இருதரப்பும் பசுமைத் தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தங்களது வாதங்களை முன்வைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு அதிகாரி மற்றும் மாநில அரசு அதிகாரி என மூவருமாக விரைந்து விசாரணையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆணையிட்டனர். இந்நிலையில், விசாரணைகள் துவங்காத நிலையில், இன்னும் 2 மாதத்திற்குள் ஆலையில் பணி துவங்க வேண்டுமெனவும் அப்பொழுது தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் ஆலைக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டுமெனவும், 4 பி.ஆர்.ஓ.க்கள் தலைமையில் 40 பி.ஆர்.ஓ.க்களை களமிறக்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.
இசக்கியப்பன், ஸ்ரீதர், சிநேகா மற்றும் ஜிஜோ உள்ளிட்ட 4 பி.ஆர்.ஓ.க்களே தூத்துக்குடியின் முக்கிய செயல்பாடுகளை கண்காணிக்க வேதாந்தா வின் கோவா தலைமை அலுவலர்களால் நியமிக்கப் பட்டவர்கள். இவர்களுடன் ஸ்டெர்லைட்டின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மேற்பார்வை செய்ய "செயல் பாட்டு கண்காணிப் பாளர்கள்' என 40 பேர் தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் பணியாற்றிவருகின்றனர். பெண்கள், குழந்தைகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் பயன்பாடு என பல பணிகளை தனித்தனியாக 40 நபர் களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளது நால்வர் குழு. இதுபோன்ற பல பணிகளை செய்யும் துணை பி.ஆர்.ஓ.க்களின் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலை மூலம் வழங்கப்படும் சம்பளம் ரூ.85,000 முதல் ரூ 93,000 வரை ஆகும். மேலும் இவ்வாறு பணியில் உள்ள பி.ஆர்.ஓ.க்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தவோ, தன்னை சுயவிளம்பரப்படுத்திக் கொள்ளவோ கூடாது என ஸ்டெர்லைட் நிர் வாகம் தடை விதித்துள்ளது. தற்போது இவர்களும் களத்தில் இறங்கி, ""இவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்துள்ளது. இதற்கு காரணம் நீங்களே..? உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என ரைஸ்குக்கர், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறைப் பாத்திரங்களை மக்களிடையே கொடுக்க ஆரம்பித்து வருகின்றனர்.
பாதுகாப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் ஐ.பி.எஸ் (ஓய்வு):
""இனிவரும் காலங்களில் ஆலைக்கு எவ்வித பாதிப்பும், ஆலை ரகசியங்கள் எங்கும் செல்லா வண்ணமும் சில கொள்கை ரீதியான முடிவு களையும், உள்ளூர் போலீசாரையும் தன் கையில் வைத்துக்கொள்ள ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், மதுரை கமிஷனராகவும் இருந்த பாலசுப்பிரமணியனை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றும் இவரின் மாதச் சம்பளமே பல லட்சங்கள். இவருக்கு கீழ் பாதுகாப்பு அதிகாரிகளாக கோவை யை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.பி. ஒருவரையும், இரண்டு இன்ஸ்பெக்டர் ரேங்க் அதிகாரிகளையும் நியமித்திருக்கின்றனர். இவர்களின் ஆலோசனை தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆலையைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப அறிவுறுத்தியது. இது குறித்துக் கேட்டதற்காகத்தான், ஆலைக் கெதிராக செயல்படுகின்றேன் என புதுக்கோட்டை காவல் நிலையப் போலீஸார் என்னை அதிகாலையிலேயே விசாரணைக்கு அழைத்து சென்று, ஸ்டேஷனில் வெகுநேரம் காக்கவைத்து, "இனிமேல் போராடக் கூடாது' என எழுதி வைத்ததைக் காட்டி கையெழுத்துக்கேட்டு மிரட்டி, பிறகு அனுப்பி வைத்தனர்'' என்றார் ஸ்டெர்லைட்டிற்கு எதிராகப் போராடிவரும் அக்ரி பரமசிவன்.
ஆலோசகர் எம்.கே.நாராயணன்:
துப்பாக்கிச்சூடு படுகொலை வழக்கில் ஆஜ ரான வழக்கறிஞர் பாஸ்கர் மதுரமோ, "மத்திய அரசும், மாநில அர சும் எப்பாடுபட் டாவது இந்த ஆலையை கொண்டுவர வேண்டுமென பகீரத பிர யத்தனம் செய்து வருகின் றார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் அத்தனை முயற்சிகளுக்கும் பின்நிற் பது ஈழத்தில் தமிழினத்தை அழிக்க மன்மோகன்சிங் அரசுமூலம் இலங்கை அரசுக்கு மந்திராலோ சனை கூறிய எம்.கே.நாரா யணனே. இவரையே தலைமையாகக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலை நல்லதையே செய்கின்றது போன்ற பட்டிமன்ற விவாதங்களை முன் வைக் கின்றார்கள். பல பத்திரிகைகளில், ஆன்லைனில் விளம்பரம் வருவதற்கு எம்.கே.நாராயணனே காரணம். 13 நபர்களின் படுகொலைகளை மறைத்து ஆலையை திறக்க வைப்பதில் இவர்தான் சூத்ரதாரி. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க துணைநின்றது போல், இங்கு தூத்துக்குடி மாவட்ட மக்களையும் அழிக்க தயாராகிவிட்டார் அவர். மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.
துப்பாக்கிச்சூட்டின் 100-வது நாளான கடந்த புதனன்று, ""வீட்டிற்கு ஒருவர் வந்து களத்தில் நின்று தமிழ் மண்ணை பாதுகாப்போம். எத்தனை அடக்குமுறைகள் எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் போராடுவோம்'' என உறுதி மொழி எடுத்துள்ளனர் தூத்துக்குடி மாநகர மக்கள்.
-நாகேந்திரன்