கடந்த இதழில் "சைகோ இன்ஸ்பெக்டர்! சேடிஸ்ட் எஸ்.ஐ.கள்!' -சாத்தான்குளம் காவல்நிலைய ஹிஸ்டரி என்ற தலைப்பினில் செய்தியினை வெளியிட்டிருந்தோம்.
அதில், ஜெயராஜ், பென்னிக்ஸை ஸ்டேஷனிற்கு வரவழைத்து காவல்துறையினரும், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸும் அடித்துக் கொடுமைப்படுத்தி ரத்தக்களறியாட்டம் போடும் போது, அங்கேயிருக்கும் பெண் காவலர் ஒருவர் அவர்களை அணுகி, ""7 மணி இருக்கும் சார்.! அப்பத்தான் அந்த பையனும், அவங்க அப்பாவும் வந்தாங்க.. வந்தவுடனே அங்க பிரச்சனை ஆரம்பிச்சுடுச்சு. இன்ஸ்பெக்டர்தான் அனைவரையும் தூண்டிவிட்டுக்கிட்டே இருந்தார். ஒருக்கட்டத்தில் அடிச்சவங்க சோர்வாகவும், அடிவாங்கினவங்களும் அரை மயக்கத்துல இருக்க, அங்கே நிசப்தம் நிலவியது. அந்த நேரத்துல நான்தான் ஜெயராஜை நோக்கி, ""உங்களுக்கு ஏதும் வேண்டுமா அப்பா?''ன்னு கேட்டேன். இரண்டு பேரும் காபி வேண்டுமென்பது போல் சைகை காண்பிக்க காபி வாங்கி வரப்பட்டது. அடிச்சவங்க குடிக்கும் நேரத்துல அவங்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதை எங்கிருந்து பார்த்தான் தெரியவில்லை அந்த சைக்கோ இன்ஸ் பெக்டர். வெறுகு பூனை மாதிரி வேகமாக வந்து காபியை தட்டிவிட்டான். அவம் பக்கா சைக்கோ சார்'' என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த பெண் காவலர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை வழக்கில் நீதிமன்ற விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணையில் பலரும் இடம்பெற்றிருந்த நிலையில், ""சார் என்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கூறுகின்றேன். ஆனால் எனக்கும், என்னுடைய பணிக்கும் உத்திரவாதம் அளிக்கு முடியுமா?'' எனக் கேள்வியெழுப்பி நீதிபதியையே திக்குமுக்காட வைத்து வாக்குமூலம் அளித்துள்ளார், மேற்கண்ட கடந்த இதழ் நக்கீரன் செய்தியில் பெயர் சொல்வதைத் தவிர்த்த, தலைமைக் காவலர் ரேவதி.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள புளியநகரில் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் பிறந்த கடைக்குட்டியான ரேவதிதான் இன்று, தேசியளவில் மனித உரிமை சர்ச்சையாகியுள்ள இரட்டைக்கொலையின் நேரடி சாட்சியம். 2005ம் ஆண்டு திருச்சியில் பயிற்சி முடித்து காவலராக பயணத்தைத் தொடர்ந்த ரேவதி, மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய பிறகு, தற்பொழுது சாத்தான்குளத்தில் பணியாற்றி, அருகில் அரிவான் மொழி கிராமத்தில் வசித்து வருகின்றார்.
""ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் ஓணான் பல்லிக்கே பரிதாபம் பார்ப்பாங்க. கண்ணுக்கு எதிரே இந்த விஷயத்தில் கோபம் வராமலா போகும்..?'' என்கின்றனர் ஊர்க்காரர்களும் காவல்துறையினரும்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சாத்தான்குளத்தில் காவல்துறை நடத்திய இரட்டைக் கொலையினை விசாரித்துவரும் கோவில்படி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜராகி மூடிய அறையில் முழுமையாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியே வந்த தலைமைக் காவலர் ரேவதி, கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறினார். அவரது சாட்சியம், நாடு முழுக்க ட்ரெண்ட் ஆனது.
மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் வாக்குமூலத்திலே ""எனக்கு இரண்டு பொட்டபுள்ளைக. எனக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக பேசுறேன். சமபவத்தன்னைக்கு நான்தான் நைட் பாரா.! இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், முருகன், முத்துராஜ், குமார் உள்ளிட்ட பல போலீஸ்காரங்க இருந்தாங்க. ஈவு இரக்கமேயில்லாமல் அங்கிருந்த அத்தனை பேரும் அடிச்சாங்க. முதலில் அடிக்க ஆரம்பிச்சது எஸ்.ஐ.பாலகிருஷ்ணன்தான். இரண்டாவது மற்றைய போலீஸ்காரங்க. இடையிடையில் வந்து அடிச்சது இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ .ரகுகணேஷுமே.
தரையில் உட்கார வைச்சு கையில் கிடச்ச லத்தியினை வைச்சு அடிக்க ஆரம்பிச்சவங்க ஷூ காலால் பிறப்புறப்பு உள்பட கண்ட இடத்திலும் மிதிக்கவும் ஆரம்பிச்சாங்க. வலி வேதனை பொறுக்க முடியாமல் அவங்க கத்தவே, நான்தான் அவங்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளிட்ட வைகளை கொடுத்தேன்.
இடையில் முருகனை வைச்சு அவங்களுக்கு சாரம் மாற்ற வைச்சாங்க. சரியாக 9 மணிக்கு மேல இருக்கும். திரும்ப வந்தாரு எஸ்.ஐ.ரகு கணேஷ். வந்த வேகத்திலேயே கீழே உட்கார வைக்கப்பட்ட பென்னிக்ஸை டேபிள் மேல் குப்புற படுக்க வைத்து ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் துணைக் கொண்டு கையையும் காலையும் தனித்தனி கயிற்றால கட்டி அவரோட அப்பாவிற்கு முன்னாடியே லாடம் கட்ட ஆரம்பிச்சாங்க..
வலியில் கத்திக்கதறி கூப்பாடுப் போட்டும் அவனுகளுக்கு விடமனசில்லை. எனக்கும் மனசு கேட்காததால் அங்கிருந்து வெளியே வந்துட்டேன். ஆனால் அப்போதைக்கு மட்டும் அடிச்சது எஸ்.ஐ.யையும் சேர்த்து ஆறு பேர். இதில் 5 பேரு ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பசங்க. இரண்டாவது கட்டமாக அடிக்கப் பயன்படுத்தியது லத்தி இல்லை. இரும்புக்குழாயே'' என தெரிவித்திருப்பது புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் நடத்திய இரட்டைப் படுகொலைக்கு தலைமைக் காவலரின் வாக்குமூலம் வலுவான சாட்சியமாகியிருக்கிறது. ரேவதிக்கான பாதுகாப்பை அரசு பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
-நாகேந்திரன்