"இதுவரை இல்லாத அளவிற்கு பதிவுத் துறையில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது' என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் முகவரி இல்லாத மொட்டைக்கடிதத்தை குடியரசுத் தலைவர் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனுப்பி வைரலாக்கியுள்ளனர் பதிவுத்துறை பணியாளர்கள் சிலர்.
1864ல் துவக்கப்பட்ட பதிவுத்துறையில் தற்பொழுது அரசு ஆவணங்களை பதிவு செய்தல், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், நிறுவனங்கள், சீட்டு நிதி நிறுவனங்கள், பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் உள்ளிட்டவை முக்கிய பணிகளாகும். தமிழ்நாடு பதிவுத்துறையில் மண்டல அலுவலகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டல அலுவலகங்கள் 11ம், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் 47ம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்கள் 571ஆக இயங்கி வருகின்றன.
"தமிழக பதிவுத்துறை வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருக்கெடுத்துள்ளது. தமிழகத்தில் பணியில் இருக்கும் ஒவ்வொரு சார்பதிவாளரிடமும் குறைந்தது 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் வாங்கப்படுகிறது. பதிவுத்துறையை சீரமைப்பதாகக் கூறிக்கொண்டு தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களை ஆவணப்பதிவின் எண்ணிக்கை மற்றும் வருவாயின் அடிப்படையில் முதல் 100 அலுவலகங்களை "அ' வகை எனவும், 101 முதல் 301 வரையிலான அலுவலகங்களை "ஆ' வகை என்றும், 301 முதல் 575 வரையிலான அலுவலகங்களை "இ' வகை எனவும் மூன்று வகையாகவும் பிரித்து மக்களுக்கு சிறந்த சேவையளிக்கும் பொருட்டு அனைத்து சார்பதிவாளர் களும் மேற்கண்ட மூன்று வகை சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சுழற்சி முறையில் பணிபுரியும் வண்ணம் அரசாணை வெளியிடுவதாக அறிவிக்கப் பட்டது.
அந்த அரசாணையின்படி ஒரு சார்பதிவாளர் "அ' வகை அலுவலகத்தில் ஓர் ஆண்டும், "ஆ' வகை சார்பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு ஆண்டுகளும், "இ' வகை சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளும் சுழற்சிமுறையில் பணிபுரியும்வண்ணம் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அரசாணையின்படி எந்த ஒரு சார்பதிவாளருக்கும் பணியிட மாறுதல் எதுவும் வழங்கப்படவே இல்லை. மாறாக "அ' வகை சார்பதிவாளர் அலுவல கங்கள் ரூ.50 லட்சம், "ஆ' வகை அலுவல கங்கள் ரூ.40 லட்சம் மற்றும் "இ' வகை அலுவலகங்கள் ரூ.30 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது. இவ்வாறு அந்தப் பணியிடங் களை ஏலம் விடுவதற்காகவே சார்பதிவாளர் அலுவலகங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் உள்ள பெரும் பாலான சார்பதிவாளர் அலுவலகங்கள் "அ' வகைப்பாட்டில் வரக்கூடியது. லஞ்சம் கொடுக்க விரும்பாத காரணத்தினால் கடந்த ஆண்டில் சென்னை மண்டலத்தில் பணிபுரிந்த அனைத்து சார்பதிவாளர்களும் ஒரேநாளில் சென்னை மண்டலத்தை விட்டு தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களிலும் இருந்த சார்பதி வாளர்கள் சென்னைக்கு மாற்றப்பட்டனர். அவ்வாறு சென்னைக்கு மாற்றப்பட்ட சார்பதிவாளர்கள் அனைவரிடமும் சென்னை யில் நீங்கள் ஓராண்டுக்கு மேல் பணிபுரிந்து வருவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்கப்படுகிறது. மேலும் சென்னை மண்டலத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார்பதிவாளர்களுக்கு மீண்டும் சென்னைக்கு பணி மாறுதல் வேண்டுமென் றால் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்கப்படுகிறது. அவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத சார்பதிவாளர்கள் நிர்வாகப் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பணிபுரிந்த அலுவலகத்தில் சிறப்பு தணிக்கை என்ற பெயரில் அவர்களைப் பழிவாங்கும் நடவடிக் கையும் துவங்கியுள்ளது.
லஞ்சம் தர மறுத்ததால் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த சார்பதிவாளர்கள் அனைவரும் அந்தந்த மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர்களின் ஆணை மூலமாக பதிவு இல்லாத பணிக்கு மாற்றப்பட்டு தொலைதூரத்தில் நிர்வாகப் பணியில் பணியமர்த்தப்பட்டு பழி வாங்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள பல்வேறு முக்கியமான சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் நிலை சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களே சார்பதிவாளர் பொறுப்பில் உள்ளனர். இந்த லஞ்ச வசூல் வேட்டை "சாமி'யை சேர்த்துக்கொண்ட ஒருவரின் மூலமாக வசூலிக்கப்பட்டுவருகிறது'' என்கிறது அந்தக் கடிதம்.
கடிதத்தின் தொடர்ச்சியாக, "அதுபோக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்பதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பதிவுத் துறையில் உள்ள மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர் மேற்படி புகார்களின் உண்மைத்தன்மை குறித்து அறிய விரும்பினால் அதற்குப் பெரியதாக புலனாய்வு எதுவும் தேவையில்லை. தமிழகத்தில் பதிவுத்துறையில் மேலோட்ட மாக விசாரித்தாலே மேற்கூறிய அனைத்தும் உண்மை எனத் தெரியவரும். இவ்வாறு லஞ்சம் வசூலிக்கப்படுவதன் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கத் துளியும் வாய்ப்பில்லை. எனவே மத்திய அரசு அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலமாக பதிவுத்துறையின் நடவடிக்கைகளை கண்காணித்து, தவறு செய்த அனைவரின் மீதும் பட்ங் டழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ர்ச் ஙர்ய்ங்ஹ் கஹன்ய்க்ங்ழ்ண்ய்ஞ் ஆஸ்ரீற், 2002 (டஙகஆ) சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இதன்மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்றும் குறிப்பிடுகின்றது அந்தக் கடிதம்.
இது இப்படியிருக்க, கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவுத்துறையில் மட்டும் மொத்தம் 179 லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்கின்றது புள்ளிவிபரம். "2021ஆம் ஆண்டு 37 வழக்குகள், 2022ஆம் ஆண்டு 26 வழக்குகள், 2023ஆம் ஆண்டு 26 வழக்குகள், 2024ஆம் ஆண்டு 63 வழக்குகள் மற்றும் தற்போதைய 2025 ஆகஸ்ட் மாதம் வரை 27 வழக்குகளும் லஞ்ச ஒழிப்புத்துறை யால் பதிவு செய்யப்பட்டுள்ளது. எது நடந்தாலும் பரவாயில்லை, மாதத்திற்கு இவ்வளவு லஞ்சப்பணம் வேண்டுமென நெருக்கடி கொடுக்கின்றார்கள். வேறு என்ன செய்வது..? சிக்கிக்கொள்கின்றோம்... எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்'' என்கிறார் வழக்கில் கைதான ஒரு சார்பதிவாளர்.
எதிர்க்கட்சிகள் கையில் அவலாகக் கிடைத்திருக்கிறது பதிவுத்துறையின் ஊழல்! என்ன செய்யப்போகின்றார் துறை அமைச்சர்..?
-வேகா