சாத்தான்குள போலீஸாரால் மிகக்கொடூரமாகத் தாக்கப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட வந்த ஜெயராஜையும் பென்னிக்ஸையும் முறையாக பரிசோதித்து சிறைக்கு அனுப்பாமல் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்திருந்தால் உயிரையாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால், நார்மலாக இருக்கிறார்கள் என்று சான்றிதழ் கொடுத்ததை வைத்துதான் சிறையில் அடைத்தது போலீஸ். இப்படி, காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டு கொண்டு வரும் கைதிகளை (நோயாளிகளை) சென்னை தலைநகரத்திலுள்ள அரசு மருத்துவர்களே முறையாக பரிசோதிப்பதில்லை என்று ஷாக் குற்றச்சாட்டை வீசுகிறார் சிறைத்துறை அதிகாரி ஒருவர்.

vv

இதுகுறித்து, அவரிடம் நாம் பேசியபோது, ""யாரைக் கைது செய்தாலும் சிறையில் அடைப்பதற்கு முன், அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அரசு மருத்துவமனையில் பரிசோதித்துதான், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார்கள். சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கே.எம்.சி., ராயப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு பெரும்பாலும் இரவுநேரங்களில் போலீஸாரால் கொண்டு செல்லப்படும் நோயாளிகளை சி.எம்.ஓக்கள் எனப்படும் சீஃப் மெடிக்கல் ஆஃபிசர்கள் பரிசோதிப்பதே இல்லை. மேலும், காவல்துறையிடம் சில சி.எம்.ஓக்கள் அண்டர்ஸ்டேண்டிங்கில் இருந்துகொண்டு அவர்களுக்கேற்றாற் போல் காயங்களை மறைத்து எழுதிக் கொடுத்து விடுகிறார்கள்.

ஏற்கனவே, சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கான்விக்ட் வார்டு என்பது சென்னை கே.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்குக்கீழ் வரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்ததால் கே.எம்.சி. மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள் கைதிகளை சரியாக பரிசோதித்து ரிப்போர்ட் கொடுத்து வந்தனர். ஆனால், ஸ்டான்லி மற்றும் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை முறை மிகவும் மோசம்.

Advertisment

ராயப்பேட்டையிலிருந்து ஸ்டான்லிக்கு கன்விக்ட் வார்டு மாற்றப்பட்டு இரண்டு வருடங்களுக்குமேல் ஆனாலும்கூட கைதிகளின் உரிமைகள், உயிரைப்பற்றி ஸ்டான்லி டாக்டர்கள் கவலைப்படுவதே இல்லை. இப்படி, பல உயிர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் பறிபோயிருக்கின்றன’ என்று அதிர்ச்சியூட்டுகிறவர், காவல்துறையால் அடித்து சித்திரவதை செய்து இழுத்து வரப்பட்ட கைதியின் கைகளில் உள்ள காயங்களை ஸ்டான்லி டாக்டர்கள் பரிசோதித்து பதிவு செய்யாததை ஆதாரப்பூர்வமாக நம்மிடம் காண்பிக்கிறார்.

அதில், கடந்த 2020 பிப்வரி- 2 ந்தேதி (கொரோனா தமிழகத்துக்கு வருவதற்குமுன்பு) 32 வயது விசாரணைக் கைதியை நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு முன் ஸ்டான்லி அரசுமருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றிருக்கிறது சி-2 யானைகவுனி காவல்நிலைய போலீஸ். அப்போது, பரிசோதித்த ஸ்டான்லி மருத்துவர்கள் ‘நோ கம்ப்ளைண்ட் ‘ என்று எழுதி அனுப்பியிருக்கிறார்கள். இதைவைத்து, நீதிபதியிடம் ஆஜர்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், சிறைவார்டர்களும் சிறைமருத்துவர்களும் பரிசோதித்த போது லத்தியால் மிகக்கொடூரமாக தாக்கப்பட்டு அவரது கைகள் வீங்கி காயங்கள் ஏற்பட்டிருந்தது குறித்துக் கேட்ட போது, ‘ஸ்டான்லி டாக்டர்கள் சரியா டெஸ்ட் பண்ணா ததற்கு நாங்க என்ன செய்யமுடியும்? அவங்களே, ஓ.கேன்னு சொல்லிட்டாங்க. நீதிபதியும் சிறையில் அடைக்க உத்தரவிட்டுட்டார். நீங்க மட்டும் ஏன் சிறையில் அடைக்க மாட்டேங்குறீங்க?’என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது போலீஸ்.

v

Advertisment

சிறைத்துறை உயரதிகாரிகளும் போலீஸாக இருப்பதால் அவர்களுக்குத்தான் சப்போர்ட் செய்வார்கள். அதனால், வரும்போதே காயங்களுடன் இருந்தார் என்று எழுதிக் கொடுத்து விட்டுப் போங்கள் என்று போலீஸிடம் எழுதி வாங்கித்தான் சிறையில் அடைக்கப்பட்டார் விசாரணை கைதி. ஆனால், இதேபோல் சாத்தான்குள போலீஸார் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் கொண்டுவரும் போது சிறை வார்டர்கள் எழுதி வாங்கியிருந்தால் இப்படியொரு கொடூரம் தடுக்கப்பட்டிருக்கும்’’என்றவர், சென்னை கைதி விவகாரத்தில் யானைகவுனி போலீஸ் எழுதிக்கொடுத்த கடிதத்தையும் நம்மிடம் ஆதாரமாக கொடுத்தார். இப்படி, பல புகார்கள் வரும்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. ரமேஷிடம் சொன்னால், ""நாங்க சரியாத்தான் பரிசோதித்து அனுப்புறோம். எங்களுக்கு நீங்க பாடம் எடுக்க வேணாம்'' என்று அலட்சியமாக சொல்கிறார் என்று குற்றஞ்சாட்ட,… ஆர்.எம்.ஓ. ரமேஷை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""இதுகுறித்து விசாரிக்கிறேன். மேலும், போலீஸாரால் கொண்டுவரப்படும் கைதிகளை கம்ப்ளீட்டாக பரிசோதனைச் செய்யச் சொல்லி டாக்டர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன்'' என்றார்.

bb

ஏற்கனவே, காவல்துறையினரால் கை-கால் உடைக்கப்பட்டு வரும் கைதிகளுக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற விருப்பமில்லை என்று போலீஸாரால் மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு மாவுக்கட்டு’ போட்டு அனுப்பும் இடமாக செயல்பட்டு வருகிறது ஸ்டான்லி அரசு மருத்துவமனை. தற்போது, புதிய சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது. சிறைக் கைதிகளுக்காகவே இருக்கக்கூடிய கன்விக்ட் வார்டு உள்ள ஸ்டான்லி மருத்துவமனையே காவல்துறையிடம் கூட்டு சேர்ந்து கொண்டு மனித உரிமை மீறலில் ஈடுபட்டால் சாத்தான்குள கொடூரங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்?

-மனோசௌந்தர்