"பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே'’என்ற புறநானூற்றுப் பாடலில் காட்டப்பட்டது போல மிகத்தொன்மை வாய்ந்ததும், எழில் கொஞ்சும் இயற்கையும் திரும்பிய பக்கமெல்லாம் பல்லுயிர்களை கொண்டதும் யுனெஸ்கோவில் பாதுக்காக்கப்பட்ட உயிர்க்கோள வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதுமான பொதிகை மலையை, "இந்தப் பகுதி உனக்கு... இந்தப் பகுதி உனக்கு...' என ஒவ்வொரு பகுதியையும் தமிழக அரசின் துணையுடன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து வருகின்றது மோடி தலைமையிலான மத்திய அரசு.
""1988-ல்தான் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் துவக்கப்பட்டது. சுமார் 800 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது இக்காப்பகம். புலிகள் மட்டுமின்றி 500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணக்கூடிய பல அரிய வகை உயிர்களை காக்கும் பல்லுயிர்ப்பெருக்க பகுதியாக திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்த காணி மக்களை பிரிட்டிஷார் காலத்தில் பாபநாசம் அணைக்கு அருகில் இறக்கி கொண்டு வந்துள்ளனர் அதிகாரிகள். தற்பொழுதுவரை மொத்தமாக 165 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் இஞ்சிகுழி பகுதியில் 7 குடும்பங்கள், அகத்தீஸ்வரம் குடியிருப்பில் 51 குடும்பங்கள், மைலாறு குடியிருப்பில் 67 குடும்பங்கள் மற்றும் சேர்வலாறு அணைப்பகுதி யில் 29 குடும்பங்கள் என 4 இடங்களிலும் தற்போது வாழ்ந்து வருகின்றனர். ஆதிகாடு தோன்றிய காலத் தில் இருந்தே காட்டிற்குள் வாழ்வதாக சொல்லும் இவர்களுக்கு கேரள மகராஜா மார்த்தாண்ட வர்மா ஆண்ட காலத்தில் இந்த மேற்குத்தொடர்ச்சி மலையில் பெரும்பகுதியை வழங்கியதாக கூறுவோரும் உண்டு'' என்கின்றது புள்ளி விபரம்.
சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கூடிய "மாவட்ட வன உரிமை பாதுகாப்புக் குழு' ஆய்வுக்கூட்டத்தில், ""பாபநாசம் மலைக்காட்டிலுள்ள "களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்' உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்றாக இருக்கிறது என்றும், விரைவில் ஈழ்ண்ற்ண்ஸ்ரீஹப் பண்ஞ்ங்ழ் தங்ள்ங்ழ்ஸ்ங் பகுதியாக மாற அதிகம் வாய்ப்பு இருப்பதால் காணிகள் அங்கு வசிக்க உரிமை இல்லை'' எனவும் வெளிப்படையாகவே அறிவித்தனர். இதனால், காரையாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு பொதுமக்கள் எவரும் அந்தப் பக்கம் செல்லக்கூடாது என்று அறிவித்து, பாதைகளை மூடி பலத்த காவல் போட்ட வனத்துறை அதிகாரிகள் "இங்கு உங்களுக்கு வசதியிருக்காது; கீழே இறங்கிச் செல்லுங்கள்' என அங்கு வசிக்கும் காணிகளை அவசரம் அவசரமாக வெளியேற்ற முயற்சி மேற் கொண்டு வருவதும் பலத்த சர்ச்சையை உண்டாக்கி யுள்ளது.
இது ஒருபுறமிருக்க, "பொதுமக்கள் செல்லக் கூடாது' என தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான ரிலையன்ஸ், வேதாந்தா குழுமம் மற்றும் மஹிந்திரா ரிசார்ட் நிறுவனங்களின் அதிகாரி களும் அவ்வப்போது வந்துசென்ற நிலையில்... இரவுநேரத்தில் அதி நவீன கருவிகளுடன் வரும் வாகனங்களுக்கு வழிவிடுகின்றனர் வனத்துறை யினர். வரும் ஆட்களோ, அங்குள்ள பாறைகளை ஆழமாக வட்டவடிவமாக துளையிட்டு, பாறைகளை எடுத்துச் செல்கின்றனர். "யார் பாறையை துளையிட்டது? எந்த நோக்கத்திற்காக துளையிடப்பட்டது..? எதற்காக பாறையை எடுத்து சென்றுள்ளனர்?' இப்படி பாறைகள் துளை யிடப்பட்டதற்கு இன்றுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும்.
பெயர் குறிப்பிட விரும்பாத காணி இனத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரோ, ""வனப்பாதுகாப்பு சட்டம் 2006-ன்படி "காடு களைத் திருத்தி சாலை அமைப்பதோ, அணைகள் கட்டுவதோ எதுவாயினும் கிராம சபையின் அனுமதியின்றி செய்யக்கூடாது' என்பது அதில் முக்கியமான ஒன்றாகும். ஆனால் புதிய வனச்சட்டம்-2019, பழங்குடிகளின் மரபுவழி கிராம சபைகள் அதிகாரமற்றதாகவும், வனத்தை நம்பி வாழ்கின்ற ஆதிவாசிகளை அப்புறப்படுத்து கிற ஷரத்துகளைக் கொண்டதாகவும் அமைந்துள் ளது. வனங்களைப் பாதுகாப்பதற்கென்றே காப்புக் காடுகள், கிராமக் காடுகள், சரணாலயங்கள் எனப் பல இருக்கின்றன. ஆனால் தற்போது உற்பத்திக் காடுகள் என்று புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி யுள்ளனர். இக்காடுகளை நீண்ட கால குத்தகைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுவதற்கான வசதியே இப்புதிய ஷரத்து. சுரங்கங்கள், சாலை கள், குவாரிகள் என எதனையும் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இதன் நோக்கம். தண்ணீரைத் தனியார்மயமாக்கியதைப் போன்றே தற்போது காடுகள், மலைகளையும் தனியார்மய மாக்க இந்த புதிய வனச்சட்டம் மூலம் முனைப்பு காட்டுகின்றனர். இதனைச் செயல்படுத்துவதற்காக மாவட்ட வன அதிகாரிக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷார் காலத்தில்கூட இவ்வாறு சட்டமிருந்தது கிடையாது'' என்கிறார்.
காரையாறு பாணத் தீர்த்தத்தில், காரை யாறு அணைக்கட்டை சுற்றிக் காண்பித்து சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்க 24 படகுகள் இயங்கி வந்தன. படகு சவாரிக்காக வரும் சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான தேன், தினை மாவு, பலாப்பழம், மிளகு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உணவு வழங்கி தங்களது பொருளாதார நிலையை உயர்த்தி வந்தனர் அங்குள்ள காணி மக்கள். சுற்றுச்சூழல் காரணத்தைக் காட்டி படகுகளை இயங்கவிடாமல் 5 வருடத்திற்கு முன்பு தடைசெய்து வைத்திருந்தது வனத்துறை. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளான காணி மக்கள் படகுகளை இயக்க நீதிமன்றத்தினை நாடினர். நீதிமன்றம் வழிவிட்டாலும் வனத்துறையும் ஆளும் அரசியல் வாதிகளும் வழிவிடவில்லை.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் சீனிவாசனோ, ""மஹிந்திரா ரிசார்ட்காரன்தான் படகைக் கேட்கிறானே..? அவனிடம் கொடுங்கள். ஒரு படகிற்கு ரூ. 50 லட்சம் வாங்கித் தருகின்றேன்'' என பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கின்றார். உலகெங்கும் விடுமுறைக் கொண்டாட்டத்தினை இயக்கிவரும் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனமான மஹிந்திரா ரிசார்ட், காரையாறு அணையில் படகு சவாரி நடத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
""இப்பதாங்க சாப்பாட்டில் அரிசியை சேர்க் கின்றோம். அதுவும் எப்போதாவது..! இங்கு கிடைக்கின்ற பொருட்களைத்தான் சாப்பிடுறோம். காட்டை ஒரு நாளும் அழிச்ச தில்லை. அழிச்சா நாங்க வாழமுடியுமா..? புலி களைக் கண்காணிக் கின்றோம் என ஆங் காங்கே கேமராவைப் பொருத்தி வேவு பார்க்கிறாங்க. நாங்க காட்டைவிட்டுப் போக மாட்டோம். இங்க தான் இருப்போம். அதற்கு எத்தகைய விலை கொடுக்கவும் நாங்க தயார்'' என்கின்றனர் வசந்தாவும், பாண்டி யம்மாவும்.
சங்கரும், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப் பின் பொறுப்பாளர் ஆறு முகம் காணியும், ""இந்த சட்டத்தால் எங்களுக்கு எதிர்காலம் குறித்த கேள்வி வந்துவிட்டது. உடலாலும், உணர்வாலும் தலைமுறைகள் தாண்டி வாழும் எங்கள் மக்களை காட்டிலிருந்து வெளியேற்றினால் எங்களின் நிலை மிகவும் மோசமாகிவிடும். மேலும் வெளியுலக மக்களுடன் எங்கள் மக்கள் கலந்து பழகுவது மொழியாலும், பழக்க வழக்கங்களாலும் அதிகம் வேறுபடும். எங்கள் மக்களின் ஒற்றுமை, கலாச்சாரம் எல்லாம் கேள்விக்குறியாகி "இனமே' அழியும் அச்சம் எங்களுக்கு இருக்கிறது. எனவே அரசும் அதிகாரிகளும் பழங்குடியினரின் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்'' என கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளையில், இதையெல்லாம் செவிமடுக்காது வனத்துறை அதிகாரிகளின் துணையுடன் ஆங்காங்கே துளையிட்டு வருகின்றனர் ஆய்வுக்குழுவினர். காட்டை தனியார்மயமாக்கினால் என்ன நடக்கும்? என்பது அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும் இக்கணம். இல்லையெனில் நாம் வாழ்வதும் கேள்விக்குறியாகி விடும்.
-நாகேந்திரன்