ஸ்ரீமதி மரணத்தில் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி உதவியாளர் சாந்தி, ரவிக்குமார் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி.யின் கஸ்டடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அதில் ஸ்ரீமதி மரணத்துக்கு என்ன காரணம்? என்பதை கிடுக்கிப்பிடி கேள்விகள் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இரவு 10:00 மணிக்கு மேல் மாணவி 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார் என்று சொல்கிறீர்கள்? அந்த மாணவி ஒரு பெரிய அலறல் சத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சாதாரணமாக ஒரு சிறிய விபத்து நடந்தாலே அடிபடுபவர்களின் அலறல் சத்தம் பலமாகக் கேட்கும். 10:00 மணிக்கு நீங்கள் தூங்கப்போனதாக சொல்கிறீர்கள். 10:30 மணிக்குள் நீங்கள் உறங்கிவிட்டீர் களா? 10:30 மணிவரை தூங்காமல் அந்த ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்த மாணவிகளுக்குக் கூட ஸ்ரீமதியின் அலறல் சத்தம் கேட்கவில்லையா? மாணவியை மருத் துவமனைக்கு கொண்டுவந்த ஸ்ட்ரெச்சரில் பெருமளவில் ரத்தம் சிந்தியிருந்தது. நீங்கள் சொல்கிறபடி மாணவி மூன்றாவது மாடியிலிருந்து விழுந் திருந்தால் தலையில் ரத்தம் சிந்தியிருக்காதா? தரையில் சிந்திய ரத்தம் எங்கே போனது?
மாணவி மரணமடைந்த வுடன்... போலீஸாருக்கு அதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? குற்றம் நடந்த இடத்தின் தடயங்களை அழித்தது யார்? என கிடுக்கிப்பிடி கேள்விகளை குற்ற வாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. கேட்டுவருகிறது.
சாந்தி மற்றும் ரவிக் குமார், ரவிக்குமாரின் இரு மகன்கள் சக்தி மற்றும் சரண், சாந்தியின் தம்பி ஆகியோரிடம் சம்பவம் நடந்த அன்று எங்கிருந்தார்கள்? என்ற கேள்வியை முக்கியமாக எழுப்புகின்றனர். சாந்தியின் தம்பிதான் தற்பொழுது பள்ளி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். சக்தி, சரண் ஆகிய இருவரும் எங்கே போனார்கள்? வெளியூரில் படித்துக்கொண்டிருந்த இருவரும் சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரம் முன்புதான் சாந்தியின் வீடு அமைந்துள்ள கனியாவூர் பள்ளி வளாகத்திற்கு வந்தனர். சம்பவம் நடந்த அன்று ரவிக்குமாருக்கு பிறந்தநாள். அன்று நள்ளிரவு வரை ஹாஸ்டல் அமைந்துள்ள பகுதியில் ஒரு பெரிய பார்ட்டி நடந்துள்ளது. அப் பொழுதுதான் ஸ்ரீமதியின் மரணமும் நடந்துள்ளது. விழுந்து கிடந்த ஸ்ரீமதியின் உடலும் கைகளும் வித்தியாசமான நிலையில் காணப்பட்டது போன்ற அறிகுறிகள் தென்படுவதாக அவரது தந்தை தெரி வித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீமதி போட்டிருந்த தங்கச் சங்கிலி அறுபட்டுள்ளது. ஒரு பெரிய போராட்டம் நடக் காமல்... இப்படி ஸ்ரீமதி அணிந்திருந்த நகைகள் அறுபட்டிருக்காது என அவரது தந்தை ராமலிங்கம் தெரிவிக்கிறார். ஸ்ரீமதியின் நகைகளை திருப்பித் தருமாறு அவரது பெற்றோர் கேட்டபோது, அவற்றை தடய அறிவியல்துறைக்கு அனுப்பியுள்ளதாக போலீஸார் தெரிவித் துள்ளனர்.
சாந்தியின் மகன்களான சக்தி, சரண் ஆகியோர் பெண்கள் விஷயத்தில் படுமோசமானவர்கள் என ஸ்ரீமதியின் அப்பா ராமலிங்கம் தெரிவிக்கிறார். ஸ்ரீமதியின் மரணத்தில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது, அதனால்தான் ஸ்ரீமதியின் மரணம் நிகழ்ந்தவுடன்... அவர்களை வெளியூருக்கு பத்திரமாக அவரது தாயார் சாந்தி அனுப்பி வைத்துள்ளார். அவர்களை பள்ளியிலிருந்து பத்திரமாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், அதே பள்ளிக்குப் பக்கத்தில் லட்சுமி கலைக் கல்லூரியை நடத்திவருபவரும், எடப்பாடிக்கு மிக நெருக்கமானவரு மான குமரகுரு தலைமையில் ஒரு டீம் அழைத்துச் சென்றுள்ளது என்கிறார்கள் அந்தப் பள்ளிக்கு மிக நெருக்கமானவர்கள்.
ஜூலை 27-ந் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கனியாமூர் பள்ளியில் விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை மத்திய, மாநில அரசுகளிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
இந்நிலையில், பள்ளியை ஆய்வுசெய்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையர் பிரியங்கு கணுங்கோ, "இந்தப் பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி செயல் பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளது. மாணவி உயிரிழப்பு தொடர்பான விசாரணையில், விசாரணை அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர். அத்துடன், மாணவியின் உடல் போஸ்ட்மார்ட்டம் முறையாக செய்யப்படவில்லை'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்... ஸ்ரீமதிக்காக சட்டப் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர் சங்கரசுப்பு தலைமையிலான டீம், ஸ்ரீமதியின் முதல் போஸ்ட்மார்ட்ட அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகளை சுதந்திரமான போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவ சட்டத்துறை வல்லுநர்களிடம் ஒப்படைத் திருக்கிறது.
அவர்கள் ஸ்ரீமதியின் மரணம் எப்படி நடந்தது? ஸ்ரீமதியின் அந்தரங்க உறுப்புகளில் காணப் பட்ட காயங்கள் எப்படி ஏற்பட்டன? என விரிவாக விசாரித்து, ஒரு மாற்று பிரதே பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்கள்.
அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நிபுணர்களால் வெளியிடப்படும் இந்த அறிக்கை ஸ்ரீமதியின் மரணத்தில்.... பெரிய விவாதத்தை ஏற்படுத்தும். அவரது மரணத்தில் உள்ள உண்மைகள் வெளியில் வரும் என்கிறார்கள் ஸ்ரீமதியின் வழக்கறிஞர்கள்.
இந்நிலையில்... அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கனியாமூர் பள்ளி நிர்வாகம், கலைமகள் சபாவுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக்குப் பக்கத்தில்தான் சில வருடங்களுக்கு முன்பு செக்ஸ் டார்ச்சர் மற்றும் கல்விச் சூழல் சரியில்லை என மூன்று மாணவிகள், கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த எஸ்.பி.ஹோமியாபதி கல்லூரி இருக்கிறது. அந்த மாணவிகள் மரணத்திற்குப் பிறகும் அந்தக் கல்லூரி தற்பொழுதுவரை மூடப்படாமல் இருக்கிறது என வருத்தத்துடன் சொல்கிறார்கள் கனியாமூர் பகுதி மக்கள்.
இதற்கிடையே திருச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைக் சேர்ந்த போலீஸார் அடங்கிய சிறப்புப் படைகள், கலவரம் செய்தது யார்? என கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
"ஸ்ரீமதியின் மரணம் ஒரு தற்கொலை. அதற்குக் காரணம் என்ன? என்பதை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்'' என போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள்.
"அது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை'' என ஸ்ரீமதியின் பெற்றோரும், வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.
இந்தப் போராட்டம் முடிவில்லாமல் நீடித்துக்கொண்டேயிருக்கிறது.
-தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: நவீன், அஜீத்