"நன்றாகப் படித்தால் பாஸாகலாம் என்பார்கள். ஆனால் இந்தப் பேராசிரியரோ தன்னுடன் படுத்தால்தான் பாஸாகலாம் என செக்ஸ் டார்ச்சர் கொடுக்கின்றார். ஓரிரு மாணவிகள் பயந்து அவருக்கு இணங்கி விட்டார்கள். அதையும் வீடியோவாக பதிவு செய்து எங்களிடம் காண்பிக்கின்றார். தயவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுங்கள்'' என தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மீது குற்றஞ்சாட்டி மருத்துவக் கல்லூரி மாணவிகள் எழுதிய முகவரியில்லாத மொட்டைக் கடிதம் ஒன்று மாவட்ட நிர்வாகத்தினை நெருக்கடிக்குள்ளாக்க நாமும் களத்திலிறங்கினோம்.
தூத்துக்குடி மூன்றாம் மைல் காமராஜ் நகரில் இருக்கின்றது தமிழக அரசால் 16.08.2000 அன்று துவக்கப்பட்ட அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி. எம்.பி.பி.எஸ். படிப்பில் முதல் பேட்ச் 2001-ல் துவக்கப்பட்ட இக்கல்லூரியில் வருடந்தோறும் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை சுமார் 150. பொதுவாக எம்.பி.பி.எஸ். பயிலும் மாணாக்கர்கள் முதல் நான்கு வருடம் கழிந்த பிறகு ஐந்தாம் வருடத்தில், மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியரின் கீழ், அவரது வழிகாட்டுதலின் பேரில் பொதுப்படையான அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், ஈ.என்.டி., குழந்தை நலம், தோல்நோய், மார்பு மருத்துவம், மனநலம், மகப்பேறியல், எலும்பு மூட்டு மருத்துவம், கதிரியக்க சிகிச்சை, பல் மருத்துவம், நரம்பியல், இரைப்பை குடல் இயல் என அத்தனை துறைகளிலும் கட்டாயமாக பணியாற்ற வேண்டும். இதனை CRRI (Compulsory Rotatory Residential Internship) என்பார்கள். பேராசிரியர் "நன்றாக கல்வி பயின்றார் கள்' எனும் ஒற்றைச் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே மாணாக்கர்கள் எம்.பி.பி.எஸ். பட்டம் பெறலாம் என்பது அடிப்படை விதி. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரோ, ""இந்த வருடம் CRRI பண்றவங்க மொத்தம் 126 பேர். ஏறக்குறைய பாதிக்குப் பாதியாக மாணவர்களோடு நாங்களும் இருக்கின்றோம். எங்களுக்கு தலைமையாக இருப்பவர் எலும்பு மூட்டு மருத்துவத்துறையில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர் கந்தசாமி. இந்த ஒருவருடம் முழுவதும் அவர் பேச்சைத்தான் கேட்டாக வேண்டும். அதையே சாக்காக வைத்து தொடுவது, கிள்ளுவது இரட்டை அர்த்தத் தில் பேசுவது என அவருடைய இஷ்டப்படி எங்களிடம் நடந்துகொள்கிறார். ஆபரேஷன் தியேட்டர் போனால் அந்த இடத்தையே பெட்ரூமாக மாற்றி வைத்தது போல் பேசி, தொடக் கூடாத இடத்தில் தொட்டு தடவுவது, படிக்கட்டுக்களில் இறங்கி வரும்பொழுது எங்களை உரசி இடித்துக்கொண்டே இறங்குவது, இரவானால் செக்ஸ் வீடியோ அனுப்புவது என டார்ச்சர் கொடுக்கின்றார். இதனை வெளியில் சொல்ல முடியாத நிலைமை எங்களுக்கு. இப்பொழுது அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கு நடக்கும் கொடுமை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி னோம்'' என்கிறார் அவர்.
""இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் டூவிபுரம் ஜெயராஜ் ரோட்டிலுள்ள அவரது கே.கே. கிளினிக்கிற்கும் வரக்கூறி, அங்கேயே வைத்து எங்களை மேய்ந்துவிடுவார். முரண்டு பிடித்தால், "இதோ பாரு... பெரிசா நடிக்கிறே... இது போனவருஷம், இது முந்தின வருஷத்து ஸ்டூடண்ட்ஸ் பார்த் தியா..?' என முன்னாள் மாணவிகளிடம் இவர் நெருக்கமாக இருந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டுவாரு. பாவம் அந்த மாணவிகள்... இப்பவும் இவர் கூப்பிடுற நேரத்துக்கு வந்துட்டுப் போறாங்க. இப்ப எங்களில் சிலரையும் வீடியோ புகைப்படம் எடுத்து வைச்சிருக்காரு. படுத்துதான் பாஸாகணுமா? தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்'' என கண்ணீர்மல்கப் பதறுகிறார் அதே மருத்துவக் கல்லூரியின் இன்னொரு மாணவி.
குற்றஞ்சாட்டப்பட்ட உதவிப் பேராசிரியர் கந்தசாமியின் சொந்தஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. எம்.பி.பி.எஸ். படிப்பை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியிலும், எம்.எஸ்.ஆர்த்தோ படிப்பை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜிலும் படித்தவர். 2015 மே 28-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு மூட்டு மருத்துவத்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த மூன்று பேட்சாக CRRI மாணாக்கர்களுக்கு பொறுப்பாளராக வும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது CRRI மாணவிகள் புகார் கொடுத்ததுபோல், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக கவிதா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் இதே பேராசிரியர் மீது பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் கொடுத்ததும் அது அப்பொழுது மூடிமறைக்கப் பட்டதும் இப்பொழுது வெளியாகியுள்ளது.
மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்பிரமணியத்திடம் பேசினோம், ""மொட்டைக் கடிதாசி என்றாலும் அதற்கு மதிப் பளித்து மருத்துவக் கல்லூரியின் மூன்று பெண் பேராசிரியர்களைக் கொண்டு விசாரணை கமிட்டி அமைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரென்று தெரியாததால் CRRI மாணவிகள் அனைவரிடமும் ஒட்டுமொத்த மாணாக்கர்களிடமும் விசா ரணையை துவக்கியுள்ளோம். சம்பந்தப்பட்ட உதவிப்பேராசிரியர் கந்தசாமியிடமும் விசாரணை செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் எங்களுக்கு கிடைத்த முடிவுகளை இப்பொழுது தான் சென்னை மருத்துவ இயக்குநரகத்திற்கு அனுப்பியுள்ளோம். அங்கு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே நடவடிக்கைகளும், அடுத்தகட்ட விசாரணைகளும்'' என தெரிவித்தார்.
இதேவேளையில் அவசர அவசரமாக தன்னுடைய சொந்த கிளினிக்கை பூட்டிக்கொண்டு எடப்பாடிக்கே எஸ்கேப்பாகியுள்ளார் உதவிப்பேராசிரியர் கந்தசாமி. நாம் அவரை தொடர்பு கொண்டபோது, ""சார்! நான் டிரைவிங்கில் இருக்கிறேன், இப்ப பேச முடியாது... அப்புறம் பேசலாம்'' என்றவர், அதன்பின்னான நம்முடைய அடுத்தகட்ட அழைப்புகளுக்குப் பதில் கூறவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன? அவரின் செல்போனில் இருக்கும் வீடியோக்களின் நிலை என்ன? என பல தகவல்களுடன் பதட்டமாக இயங்கிவருகின்றது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி.
-நாகேந்திரன்