ட்சிமன்றக்குழு உறுப்பினர்களான மொத்தமுள்ள 17 நபர்களில் லெட்சுமிபதி, தீனதயாளன், ராமகிருஷ்ணன், லில்லிஸ் திவாகர், சகீலா, பாரி பரமேஸ்வரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை அவசரம், அவசரமாக கடந்த 26-06-2019 அன்று வரவழைத்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், ""2014-15-ம் கல்வியாண்டில் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் 5,048 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் "500/-க்கும் மேலான மாணாக்கர்கள் சுயவிவரக் குறிப்பைத் தெரிவிக்காமலேயே தங்களுடைய பெயர், புகைப்படத்தினைக் கொண்டு பட்டப்படிப்பு சான்றிதழைப் பெற்றுள்ளனர். அதுபோல் பல கல்வியாண்டில் நடைபெற்றுள்ளது. இதனை செய்வது இவர்களே' என ஆதாரங்களையும் குறிப்பிட்டுள்ள ஊழல் தடுப்பு போலீசார் இதுபற்றி விசாரிக்க அனுமதியும் கோரியுள்ளனர். ""இப்பொழுது நாம் என்ன செய்வது?'' என கேள்வியெழுப்பியதோடு மட்டுமில்லாமல், ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸ் அனுப்பிய கடிதத்தினையும் அவர்களுக்குக் காட்ட, அந்த இடத்தில் சப்தமே எழவில்லையாம்.

kk

பின்னர் ஒருவாறாக மீண்டு, "ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸிற்கு என்ன பதில் சொல்வது?' என சிண்டிகேட் சர்க்குலேஷன் அஜெண்டாவினை தயார் செய்துள்ளது அந்தக் கலந்தாய்வு கூட்டம் என்கிறது பல்கலைக்கழக வட்டாரம்.

23 இளங்கலைப் பட்டப்படிப்புகள், 21 முதுகலை, 44 முதுகலை டிப்ளமோ, 21 டிப்ளமோ மற்றும் 10 சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககம் இதற்கென தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களில் 133 மையங்களை நிறுவியுள்ளது. வருடந்தோறும் இதனுடைய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 லட்சத்து 20 ஆயிரம் என்கின்றது புள்ளிவிவரம். இந்த மாணாக்கர்களின் பட்டப்படிப்புகளில்தான் தங்களுடைய மோசடியைக் காண்பித்துள்ளனர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் சிலர் என்கின்றது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸின் அறிக்கையுடன் கூடிய அனுமதிக் கடிதம்.

Advertisment

"கான்பிடன்ஷியல்' என முகப்பிலேயே எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், ""கல்லூரிகளில் முழு நேரம், பகுதி நேரம், தொலைநிலைக்கல்வி இயக்ககம் என எந்த வகுப்பில் சேர்ந்தாலும், மாணாக்கர்கள் தங்களுடைய சுயவிபரக்குறிப்பினை கட்டாயமாக பதிவு செய்திருத்தல் வேண்டும். ஆனால், தங்களது காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் அது போல் பல மாணாக்கர்களுக்கு சுயவிபரக் குறிப்பு சேர்க்கப்படவில்லை. ஆனால் மாணாக்கர்களின் புகைப்படமும் பெயரும் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைக் கொண்டே அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் டெக்னிக்கலாக குறிப்பிட்ட ஒரு படிப்பிற்கு அப்ளை செய்வதற்கான இறுதி நாளில்தான் அந்த மாணாக்கர்களை இங்கு சேர்க்கின்றனர்.

dd

உதாரணமாக, 2014 கல்வியாண்டில் பி.காம். படிப்பில் மற்றைய மாநில மாணவர்கள் சேர்வதற்கான இறுதி நாள் 31-12-2013. அந்த கல்வியாண்டிற்காக பெறப்பட்ட மொத்த அப்ளிகேஷன்களான 824-ல் அந்த தேதிக்கு முந்தையதினம் வரை வந்த அப்ளிகேஷன் எண்ணிக்கை 321. அன்றைய நாளில் மட்டும் வந்த அப்ளிகேஷன் எண்ணிக்கை 503-ல், சுயவிவரக் குறிப்பு இல்லாமல் புகைப்படம் மற்றும் பெயர் மட்டுமே இருந்த அப்ளிகேஷனின் எண்ணிக்கை 253. அதுபோல் 2014 காலண்டர் வருடத்தில் மொத்தமுள்ள 2505 அப்ளிகேஷன் எண்ணிக்கையில் இறுதிநாளுக்கு முந்தையநாள் வரை 315. இறுதி நாளான 30-06-2014 அன்று மட்டும் வந்த அப்ளிகேஷனின் எண்ணிக்கை 2190. அப்ளிகேஷன்களில் சுயவிவரக் குறிப்பு இல்லாமல் பெயர், புகைப்படத்துடன் வந்தவைகளின் எண்ணிக்கை மட்டும் 1759.

Advertisment

அதுபோல் 2015 கல்வியாண்டில் பெயர் புகைப்படத்துடன் மொட்டையாக 719, 2015 காலண்டர் வருடத்தில் 2327. இது பி.காம். படிப்பில் மட்டுமே. மற்றைய படிப்புகளில் தலை சுற்ற வைக்கும். மாணாக்கர்களிடம் தலா ரூ.1 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு பட்டப்படிப்பை விற்றவர்களாக நாங்கள் சந்தேகப்படுவது காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான ராஜராஜன், கணினிப் பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கார்த்திகைசெல்வன், கேரளா கருங்கப்பள்ளி நிஜி, மலப்புரத்தை சேர்ந்த அப்துல்அஜீஸ், சுரேஷ் மற்றும் திருச்சூரை சேர்ந்த ஜெயப்பிரகாசம் ஆகியோரையே. இதில் கேரளாவைச் சேர்ந்த நால்வரும் மாணாக்கர்களிடம் பணத்தை பெற்று மேற்கண்ட மூவருக்கும் கொடுத்துள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதுபோக, மாணாக்கர்களின் கல்விக் கட்டணத்தையும் செலுத்தாமல் சான்றிதழ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக அந்த அலுவலர்களை விசாரிக்க அனுமதி வேண்டும்'' என்கின்றது அக்கடிதம்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் செயலாளரான பேராசிரியர் முரளியோ, ""பல்கலைக்கழகத்தில் கடந்த 2014 முதல் 2017 வரை நடந்துள்ள முறைகேடு வெளியே வந்துள்ளது. 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் மதிப்பெண் பட்டியல்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மாணவர்கள் பட்டப்படிப்பில் சேராமலேயே அவர்கள் படித்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எல்லாத் தகவல்களும் திருத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடைய முகவரிகள், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை அவர்களுடைய விண்ணப்பங்களில் இல்லை. மேலும் மாணவர்கள் யாரும் பதிவுக் கட்டணம் செலுத்தவில்லை என்று வங்கிகளும் தெரிவித்துள்ளன.

dd

கேரளத்தில் உள்ள சில பல்கலைக்கழக மையங்கள் மூலமாக இந்த ஊழல் நடத்தப்பட்டு இருந்தாலும், இவை அனைத்திற்கும் மூல காரணமாக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு தேர்வாணையரை லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிடுகிறது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கவிருக்கிறது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் அரசியல் பின்புலத்தால் பதவிகளில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பல வேலைகளை செய்து வருகின்றனர். எனவே முறைகேட்டில் ஈடுபட்ட 3 பேர் மீதும் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் படிக்காமலேயே சான்றிதழ் பெற்ற அனைவரது சான்றிதழையும் ரத்து செய்ய வேண்டும். அரசுப்பணிகளில் இருந்தாலும் அதனையும் ரத்து செய்திடல் வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.

இது இப்படியிருக்க, சிறப்பு ஆட்சிமன்றக்குழு கூட்டத்தினைக் கூட்டி சிண்டிகேட் சர்க்குலேஷன் அஜெண்டாவினை அனைவருக்கும் அனுப்பிய துணைவேந்தர் கிருஷ்ணனோ, ""ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸ் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட ரகசிய கடிதத்தின் அடிப்படையில், உரிய விசாரணை நடத்த ஆட்சிமன்றக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அப்போது, பொறுப்பில் இருந்தவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவு செய்தனர் என்பது எங்களுக்கு தெரியாது''’என்றவர், உலக தமிழ் மாநாட்டிற்காக சிகாகோ பறந்துவிட்டார். அதே வேளையில், கடந்த வாரத்தினில் பல்கலைக்கழகம் வந்த துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜா குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக தொலைநிலைக்கல்வி இயக்கக ஆணையர் ரவியிடம் மல்லுக்கட்டியதாக தகவல் வருகிறது.

குற்றச்சாட்டிற்குள்ளான கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு தேர்வாணையரான ராஜராஜனோ, ""இந்த குற்றச்சாட்டில் நான் இருக்கின்றேன் என்பதில் துளி உண்மையும் கிடையாது. அது போக எனக்கு எவ்வித அரசியல் பின்புலமும் கிடையாது. சிண்டிகேட் சர்க்குலேஷனில் என்ன முடிவு செய்தார்கள் என்பது பற்றி இனிமேல்தான் தெரியும். அதுபோக, குற்றம் நடந்ததாக கூறப்படும் ஆண்டுகளில் நான் இங்கு பணியாற்றவே இல்லை. நான் இங்கு 26-10-2017 அன்று தான் பணியில் சேர்ந்தேன். என்னை குறிவைத்து சிலரால் இது இயக்கப்படுகின்றது. அது நாளடைவில் தெரியவரும்'' என்றார் அவர்.

ரூ. 1 லட்சத்தை வாங்கிக்கொண்டு முறைகேடாக சர்டிபிகேட் கொடுத்தது நிஜம் என்கின்றது ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸின் ஆதாரங்களும், கள நிலவரமும்.

என்ன செய்யப் போகின்றது அரசு?

-நாகேந்திரன்