சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி, தமிழக அரசாங்கத்தால் தனியார் ஸ்டார் ஓட்டலான ஹயாத் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த சுந்தரவேல், மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவரது மரணத்தில் பல்வேறு கேள்விகள் எழுவதாக ஏற்கனவே நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். நக்கீரன் ஆசிரியர் இதுகுறித்து நக்கீரன் வலைத்தளத்தில் பேசியது மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நக்கீரனிடம் மீண்டும் சந்திரா தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்.

cc

""எனது மனக்குமுறலை, எனக்கு ஏற்பட்ட இழப்பை, என் உடன்பிறந்தவர்கள் எப்படித் துடிப்பார்களோ, அந்த நிலையிலிருந்து உணர்ந்து நக்கீரன் ஆசிரியர் உருக்கமான வீடியோ வெளியிட்டது எனக்கு தெம்பைக் கொடுத்திருக்கிறது. கோடானு கோடி நன்றி'' என்றவர், பேசத் தொடங்கினார்.

""தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே யுள்ள தென்னம்புதூர்தான் எனது சொந்த ஊர். பல ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தை மறைந்துவிட்டார். எனக்கு ஒரு சகோதரி. குடும்பச்சூழல் காரணமாக சிங்கப்பூரில் வீட்டுவேலைக்குச் சென்றிருந்தேன். அங்குதான் என் கணவர் சுந்தரவடிவேல் அறிமுகமானார்.

Advertisment

இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி, காதலிக்கத் தொடங்கினோம். பெற்றோர் சம்மதத்துடன் 2015ல் எங்கள் திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் சிவரட்சன் என்ற ஆண் குழந்தை இருக்கிறான். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே என் கணவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

eps

வடிகர்போர்டு இன்ஜினியரிங் கம்பெனியில் ஜே.சி.பி. ஆபரேட்டராக இருந்தார். கொரோனா காரணமாக அங்கு வேலையில்லாமல் இருந்த நிலையில்தான், நிலைமை சரியானதும் ஊருக்கு வந்துவிடுங்கள் என்று நான்தான் வற்புறுத்தி வரவைத்தேன். எங்களைக் காணும் மகிழ்ச்சியுடன் வந்தவரை, கொரோனா தொற்று இல்லையெனினும் 14 நாட்கள் தனிமைப்படுத்து தல் என்ற பெயரில், உயிரைப் பறித்துவிட்டார்கள்.

Advertisment

ஹோட்டலில் தனியறையில் இருந்த என் கணவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தும் சுகாதாரக்குழுவினர் யாருமே அவரைக் கண்டுகொள்ளாததால், இப்படி நடந்ததா என்று தெரியவில்லை. அவர் கொண்டுவந்த பெட்டியில், ரகசிய அறையில் தங்கநகை வாங்கியதற்கான இரண்டு பிரைஸ் டேக்குகள் இருந்துள்ளன. பெட்டியிலிருந்த நகை, பணத்தை எடுத்தவர்கள் இதை கவனிக்க வில்லை. ஒருவேளை, கவனித்திருந்தால் அழித்திருப்பார்கள். இப்போது அந்த நகைகள் வாங்கிய ப்ரைஸ் டேக்குகள் மட்டும் இருப்பதால் கொள்ளையும் நடந்திருப்பது தெரிகிறது.

இவ்வளவு சந்தேகத்திற்கும் காரணம், என் கணவரின் உடலை எங்களிடம் ஒப்படைக்கும் போது, அவர் வைத்திருந்த பெட்டி, பேக் எல்லாம் உடைத்து திறக்கப்பட்டிருந்தது. அது போக, போலீசார் ஒப்படைத்த பேக், மணிப்பர் சில் இந்திய ரூபாயில் 700-ம், சிங்கப்பூர் வெள்ளி 120 மட்டுமே இருந்ததாக தெரிவித்தனர். சிங்கப்பூரில் இருந்து ஊருக்குக் கிளம்பும்போது கணக்கு வழக்கை எல்லாம் முடித்துவிட்டு, 3,000 சிங்கப்பூர் வெள்ளிப்பணத்தை ஊருக்கு எடுத்துப் போவதற்காக வைத்திருந்ததாக, அவருடன் இருந்த எங்களது உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

நாடு திரும்பியதும், ஏர்போர்ட்டில் வைத்து சிங்கப்பூர் வெள்ளியை இந்திய ரூபாயாக மாற்றி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர் கொண்டுவந்த நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை ஏதாவது செய்திருக்க லாம் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. எனது கணவர் இறந்ததில் பல மர்மங்கள் இருக்கின்றன. அவர் கொண்டுவந்த உடைமைகள் களவுபோனதை காவல்துறையும், ஹோட்டல் நிர்வாகமும் மறைக்கிறார்கள். என் கணவர் இறந்த தகவலை யும் எங்களுக்கு தெரிவிக்க வில்லை.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததுமே முகவரி, எனது செல்போன் நம்பர் உள்ளிட்ட அனைத்தையும் ஏர்ப்போர்ட்டிலும், ஹோட்டல் நிர்வாகத்திலும் பதிவு செய்துள்ளனர். தனிமைப் படுத்துதல் காரணமாக தமிழக அரசு அதிகாரிகளும் தகவல்களை வாங்கியுள்ளனர். சிங்கப்பூரில் பயன்படுத்திய சிம் கார்டு, நம் மூரில் வேலை செய்யாது. இது தெரிந்தும், என் கணவர் தங்க வைக்கப்பட்ட 25ந்தேதி முதல் 29ந்தேதி வரை எங்களைத் தொடர்பு கொள்வதற்கு ஹோட்டல் நிர்வாகமோ, அரசுத் தரப்போ ஏன் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை.

cc

இரண்டு நாட்களாக ஏன் சாப்பாடு எடுத்துக் கொள்ள வில்லை என்று, என் கணவரின் அறையில் இருக்கும் இண்டெர்காமில் அழைத்துக் கேட்கவில்லை. என் கணவரின் அறைக்கு வெளியில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் அவரது அறைக்கு முன் ஆள் நடமாட்டம் இருந்திருந்தால் பதிவாகியிருக்கும். இதுபற்றி ஏன் ஆய்வு செய்யவில்லை என்று தேனாம்பேட்டை போலீசாரிடம் கேட்டால், உன் கணவரின் ரூமுக்குள் ளோ, வெளியிலோ அப்படியேதும் நடமாட்டம் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஹோட்டலுக்குப் போனதும் என்னை செல்போனில் அழைப்பதாக சொன்ன கணவரிடமிருந்து அழைப்பு வரவில்லை. பதறிப்போய் ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷனில் இதுதொடர்பாக புகார் கொடுத்தேன். அங்கு என்னிடம் விவரம் கேட்டவர்கள், உங்க கணவர் தங்கியிருக்கும் ஹோட்டல் பிரபலமானது. அங்கு எந்த அசம்பா விதமும் நடக்காது எனக்கூறி அனுப்பிவிட்டார்கள். இருந்தாலும், மனது கேட்காமல் ஹோட்டலுக்கு போனில் அழைத்தபடியே இருந்தேன்.

முதலில் என் கணவர் ஹோட்டலில் இருந்து ஓடிவிட்டதாக சொன்னார்கள். பிறகு அறையில் சேரில் அமர்ந்தநிலையில் இறந்து கிடந்ததாக சொன்னார்கள். இதன்பிறகு, பலமுறை அழைத்தும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒருவர் எடுத்துப்பேசினார். இவ்வளவு பெரிய ஹோட்டலில் போனை எடுக்கக்கூட ஆள் இல்லையா? என்று கேட்டதற்கு, மேல்மாடியில் ஒருவர் இறந்துவிட்டார். அது சம்மந்தமான பணிகளில் இருந்தோம். அதனால் உங்கள் போனை எடுக்க முடியவில்லை என்று அலட்சியமாகப் பேசினார்.

என் கணவர் இறந்த தகவலை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ, ஹோட்டல் நிர்வாகமோ கூட எங்களுக்கு சொல்லவில்லை. நாங்களே முயற்சி செய்துதான் அவர் இறந்த தகவலைக் கேட்டு பதறியடித்துக்கொண்டு ஹோட் டலுக்கு ஓடினோம். அங்கிருந்து தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு போகச் சொன்னார்கள். அங்குபோனால், சரியான பதிலில்லை. அவர்கள் மீண்டும் ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்றனர். மெயின் வழியில் அழைத்துச் சென்றால், நாங்கள் அழுது புலம்புவதை மற்றவர்கள் பார்த்து, சாவு நடந்திருப்பது வெளியே தெரிந்து, அதனால் ஹோட்டல் பெயர் கெட்டுப்போகும் என்பதால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கூட்டிச்சென்ற னர். அங்கு என் கணவர் தங்கியிருந்த அறையை, மாஸ்டர் கீ போட்டுத் திறந்து காட்டிவிட்டு, மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிவந்தனர். ஹோட்டல் நிர்வாகம் கூறிய முரண்பாடான பதில்களுக்கு இன்றுவரை விடை தெரியவில்லை.

தேனாம்பேட்டை போலீசாரும் எனது கணவர் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து ஒப்படைத்து, எங்களை அனுப்பி வைப்பதிலேயே குறியாக இருந்தார்கள். அவர்கள் எனது கணவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவு செய்யவில்லை. இதுபற்றி கேட்பதற்காக பலமுறை அழைத்தும், அவர்கள் போனை எடுப்ப தில்லை. இப்போதிருக்கும் சூழலால், சென்னைக்கு நேரில் சென்று போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டை வாங்கமுடியாத நிலையில் இருக்கிறோம்.

சென்னையிலிருந்து என் கணவரின் உடலை எடுத்துச்செல்ல சிரமம் ஏற்பட்ட போது, உடன்பிறந்த சகோதரியாக ஓடிவந்து உதவிய மக்கள் பாதை இயக்கத்தின் கீதாம்மா, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவர சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்று கூறினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவரிடம் கூறியிருக்கிறேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த கணவரும் போய்விட்டார். இனி என் குழந்தையின் எதிர்காலம் என்னவாகுமோ. இனி எப்படி எங்கள் வாழ்க்கை இருக்குமோ''’என்று சொல்லி முடிக்கையில் விக்கித்துப் போயிருந்தார் சந்திரா.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கியவர், ""நக்கீரன் ஆசிரியரும், நக்கீரன் பத்திரிகையும் எங்களுக்காக மேற்கொண்ட செய்திப் பணிகள் ஆறுதலையும், நம்பிக்கையையும் தந்திருக்கின்றன. மேலும், என் நிலைமையைப் பற்றித் தெரிந்துகொண்ட தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் சகோதரர் உதயநிதி, போன் மூலம் ஆறுதல் கூறியதோடு உதவிகள் செய்வதாகவும் நம்பிக்கை அளித்திருக்கிறார். அதேபோல், விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர், புலம்பெயர்ந் தோர் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பலர் ஆறுதல் கூறு கிறார்கள்.

திட்டக்குடி எம்.எல்.ஏ. கணேசன் அண்ணன் நேரடியாக வீட்டுக்கே வந்து ஆறுதல் சொன்னார். இத்தனைக்குப் பிறகும் அரசுத் தரப்பிலிருந்து அதிகாரிகளோ, காவல்துறையோ, அரசு சார்ந்த பிரநிதிகளோ யாரும் இதுவரை என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. என் கணவரின் இழப்பை இந்தத் தமிழக அரசு ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. என் கணவருக்கு நீதிகேட்டு சட்டப்போராட்டம் நடத்த இருக்கிறேன்'' என்றார் உறுதியுடன்.

கொரோனாவின் பெயரால் அரசே நடத்திய இந்தப் பச்சைப் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?

-எஸ்.பி.சேகர்

______________

3 லட்சம் கொள்ளை!

cc

சந்திராவின் உறவினர் ஆன வீரமணி சுந்தரவேலுவுடன் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தவர். அவர், “""எல்லா ccலேபர்களுக்கும் தன் தாய்நாடு செல்ல ஹார்போடு இன்ஜினியரிங் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தான் விமான டிக்கெட் எடுத்து கொடுப்பார்கள். அதேபோல, இந்தமுறையும் அவர்கள்தான் விமான டிக்கெட் போட்டுக் கொடுத்தார்கள்’என்று அந்த டிக்கெட்டை நமக்கு அனுப்பினார். அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் சீன தினம் கொண்டாட்டம் காரணமாக ஆண்டுதோறும், போனஸ் போடுவார்கள் அந்த பணமே தனியாக ஒரு லட்சம் மேல் இருக்கும் அதிலும் அவர் சீனியர் ஆபரேட்டர், கடைசியாக எப்படி பார்த்தாலும் மூன்றுலட்சம் வரை அவரிடம் பணம் இருந்திருக்கும். ஏர்போர்ட் போகும் முன் நான் தரவேண்டிய 150 வெள்ளியும், என் உறவினர் 200 வெள்ளியும் கொடுத்தார்கள், அது இல்லாமல் இந்திய பணம் பத்தாயிரம் மாற்றி கொடுத்தோம். அவர் வேறு இடத்தில் மாற்றிய பணமும் அவரிடம் இருந்தது அவர் ஆபரேட்டர் என்பதால் திடமான உடல் கொண்டவர். அவர் இறந்ததில் பல மர்மங்கள் உள்ளது என்றார்.

-அரவிந்த்