கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே இருந்த உற்சாகம் -பரபரப்பு ஏதுமின்றி, எடப்பாடி, சசிகலா ஆகியோர் நடத்திய இரண்டு விழாக்கள் மூலம் தனது 50-ஆவது வயதைக் கொண்டாடியிருக்கிறது அ.தி.மு.க.
"50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆளும் கட்சி என்கிற வெற்றி வரலாறு அ.தி.மு.க.வுக்கு உண்டு. ஆனால் அந்தக் கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் பெயரை கட்சியின் தலைமைக் கழகத்திற்கு வைப்பதற்கே ஒரு பெரிய விவாதம் அ.தி.மு.க.வில் நடந்து முடிந்திருக்கிறது' என வருத்தத்துடன் பதிவு செய்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க.வின் முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜானகி ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட இடம் தலைமைக் கழகம். அவர்களால் கட்சிக்கு சென்னை நகரின் மையப்பகுதியில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சொத்து இது. அதை எந்த அணி வைத்திருக்கிறதோ அவர்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். “
ஜா, ஜெ. என அ.தி.மு.க. பிரிந்தபோது ஜானகி வசமிருந்த அந்தக் கட்டிடத்திற்குள் நுழைய ஜெ. பெருமுயற்சி செய்தார். இரு அணிகளும் இணைந்த பிறகே அந்தக் கட்டிடத்திற்குள் ஜெ.வால் நுழைய முடிந்தது. "அண்ணா அறிவாலயம்' என தி.மு.க.வின் தலைமை அலுவலகம் அமைக்கப் பட்டது. ஆனால் அண்ணா, எம்.ஜி.ஆர். என எந்த தலைவர்களின் பெயரும் வைக்கப்படா மல் மொட்டையாக நின் றது அ.தி.மு.க.வின் தலை மைக் கழகம். எம்.ஜி. ஆரின் தனிப்பட்ட உழைப்பால் உருவான அந்தக் கட்டிடத்திற்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக் கையை ஜெ. கண்டு கொள்ளவில்லை. "பொன் விழா ஆண்டில் எம்.ஜி. ஆர்., ஜெ. நினைவிடத் திற்கு சசிகலா செல்கிறார்' என்கிற தகவல் தெரிந்த பிறகே அ.தி.மு.க. தலை மைக் கழகத்திற்கு "எம்.ஜி.ஆர். மாளிகை' என பெயர் வைத்தார்கள்.
"எம்.ஜி.ஆரின் பெயரையும் படத்தையும் வெறும் ஸ்டாம்ப் சைஸிற்கு மாற்றியதில் ஜெ.வுக் கும், சசிக்கும் பெரிய பங்கு உண்டு. இன்று அதே சசிகலாவும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வும், எம்.ஜி.ஆரின் பெயரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள். அதனால்தான் தலைமைக் கழகத்திற்கு "எம்.ஜி. ஆர். மாளிகை' என கழகம் தொடங்கி 50-ஆவது ஆண்டில் பெயர் வைக்கிறார்கள்' என வருத் தத்துடன் பதிவு செய்கிறார்கள் அ.தி. மு.க.வின் சீனியர் தலைவர்கள்.
பொன்விழா கொண்டாட் டங்கள் தொடர்பாக விவாதிக்கப் பட்ட அ.தி.மு.க. கூட்டத்தில், எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம்பெற்ற பொன்னையன் எழுந்து, "அ.தி.மு.க. ஊழலுக்கு எதிராகப் பிறந்த கட்சி. இன்று அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வருகிறது. அதை தி.மு.க. பயன்படுத்திக் கொள்கிறது' என பேசினார். உடனே, "போதும்... நீங்கள் பேச வேண்டாம், உட்காருங்கள்' என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இணைந்து பொன்னையனை பேச விடாமல் உட்கார வைத்தார்கள்.
"உள்ளாட்சித் துறையில் 50 ஆண்டுகள் செய்ய வேண்டிய பணிகளை 5 ஆண்டுகளில் செய் தோம்' என பத்திரிகைகளில் தனிப்பட்ட முறையில் விளம்பர மாக வெளியிட்டார் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி. இன்று உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமான தோல்வியை அ.தி.மு.க. சந்தித் துள்ளது. "எடப்பாடியின் சொந்த தொகுதியிலேயே ஓட்டுக்கு நாலாயிரம் ரூபாய் என செலவு செய்தும் பெரிய வெற்றியை அ.தி.மு.க.வினரால் பெற முடியவில்லை. இதுபற்றிய விவாதம் எதுவும் வெளிப்படையாக அ.தி.மு.க.வில் நடக்கவில்லை. அவர்கள் கவனம் முழுவதும் சசிகலா, அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில்தான் இருக்கிறது' என வருத்தப்படுகிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர்கள்.
சசிகலா கடந்த 16-ஆம் தேதி ஜெ.வின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருகிறார் என்கிற செய்தி வெளியான பிறகே அ.தி.மு.க.வின் பொன்விழாவை பெரிய விழாவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடு கள் அ.தி.மு.க.வில் தீவிரமாகியது. பொன்விழா மலர், விழாவிற்கு ஆட்களைத் திரட்டுவது, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ. சமாதிகளில் அஞ்சலி என ஏற்பாடுகள் நடந்தது. 16-ஆம் தேதி ஜெ.வின் சமாதிக்கு வந்த சசிகலா, அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வந்துவிடக் கூடாது என அ.தி.மு.க. நிர்வாகிகள் அலுவலக வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குத் துணையாக வி.ஐ.பி. விழாக்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்படும் கட்டுமஸ்தான உடலமைப்புடைய பவுன்சர்களையும் எடப்பாடி ஏற்பாடு செய்து அனுப்பி அலுவலகத்தில் நிற்க வைத்திருந்தார்.
ஜெ. உபயோகித்த காரில் அ.தி.மு.க. கொடியை கட்டிக் கொண்டு ஜெ.வின் சமாதிக்கு வந்த சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் வரவில்லை. அவருடன் செந்தமிழன், ஆனந்தன் போன்ற குட்டித் தலைவர்கள்தான் இருந்தனர். சசிகலாவின் காரின் முன்பு தென்பட்ட அ.ம.மு.க.வினரின் கொடிகளை அப்புறப்படுத்த சசிகலாவே உத்தரவிட்டார். ஒன்றிரண்டு அ.தி.மு.க. கொடிகளோடு ஜெ. சமாதிக்கு வந்த சசிகலா, கண்கலங்கினார். "5 ஆண்டுகளாக எனது மனதில் இருந்த பாரத்தையெல்லாம் ஜெ.விடம் இறக்கி வைத்து விட்டேன். எம்.ஜி.ஆரும் ஜெ.வும் இனி கட்சியைப் பார்த்துக்கொள் வார்கள்' என பொத்தாம் பொதுவாக கூறிய சசிகலாவின் பேச்சில் எடப்பாடிக்கு எதிராக எதுவும் இல்லை. இது அ.தி.மு.க. தொண் டர்களை உற்சாகப்படுத்தும் பேச்சாக இல்லை என்பது எடப்பாடி தரப்பை உற்சாகப்படுத்தியது.
"சசிகலா ஒரு கொசு. சசிகலாவின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது தரலாம்' என ஜெயக்குமார் மூலம் சசிகலாவை எடப் பாடி சீண்டியிருந்தார். ஆனால், சசிகலா அதை கண்டுகொள் ளாமல் கடந்து போனது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மறுநாள் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற் குச் சென்று அ.தி.மு.க. கொடியை ஏற்றியவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா என்ற கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதன்பிறகு ராமாவரம் தோட்டத்திற்குச் சென்ற சசிகலா, அங்கே மைக்கைப் பிடித்துப் பேசினார். காரசாரமாக பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, ஜெ.வின் பாணியில் எழுதி வைத்துப் பேசினார். "நீரடித்து நீர் விலகாது, கண் போன போக்கிலே கால் போகலாமா? நாம் ஒன்றாக வேண்டும்... கழகம் வென்றாக வேண்டும்'' என தத்துவமாக சசிகலா பேசினார். ஆனால் எடப்பாடி தரப்பில் எந்தப் பேச்சும் இல்லை. அவர்கள் தரப்பாக பேசிய ஜெயக்குமார், "அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் என சசிகலா அறிவித்தது தவறு' என்பது மட்டும் செய்தியாக வந்தது.
சசிகலா, எடப்பாடி மோதலே அ.தி.மு.க.வின் பொன் விழா செய்திகளாக மாறிய நிலையில்... இந்த மோதல் எப்படியிருக்கிறது என சசிகலா வட்டாரத்தில் கேட்டோம். "சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொண்டால் கொடநாடு விவகாரத்தை வைத்தே சசிகலா, எடப்பாடியை வீழ்த்திவிடுவார் என எடப்பாடி பயப்படுகிறார். அதே நேரத்தில்... சசிகலாவுடன் வர அ.தி.மு.க.வினர் தயங்கு கிறார்கள். சசிகலா சிறைக்குச் செல்லும்போது நூற்றுக் கணக்கில் அ.தி.மு.க. தலைவர்கள் சசிகலாவை ஆதரித்தார் கள். அவர்கள், இப்பொழுதும் சசிகலாவை ஆதரிக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் தினகரனுடன் சேர்ந்து எடப்பாடியை எதிர்த்து எதிர் காலத்தை இழந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களின் கதி அவர்களைப் பயமுறுத்துகிறது. எடப்பாடியை அவர்கள் தலைவராக ஏற்கவில்லை. பொன்விழா ஆண்டில் அ.தி.மு..க.விற்கு எடப்பாடி, ஓ.பி.எஸ். என இரட்டைத் தலைமை பொருத்தமற்றது என அவர்கள் நினைக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல், அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவுத் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க. கணிசமாக வெற்றிபெறும். அத்துடன் அமைச்சர்கள் மீது பாயும் ஊழல் வழக்கு கள் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தும். மின்துறை அமைச்சராக இருந்த தங்க மணி, இப்பொழுது அ.தி.மு.க. விழாக் களில் தென்படுவதில்லை. இப்படி... பல வீனமாகிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை மீட்க வலுவான தலைமையாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் இரட்டைத் தலைமை இருக்காது என அ.தி.மு.க.வினர் நம்புகிறார்கள். அதனால்தான் அ.தி. மு.க.வின் பொன்விழா சென்னை, விழுப்புரம் தவிர வேறெங்கும் கொண் டாடப்படவில்லை.
வலுவான தலைமை சசிகலாவா, எடப்பாடியா? என்பதில் அ.தி.மு.க.வில் குழப்பம் இருக்கிறது. அதனால்தான் சசிகலா, நாம் ஒன்றாக வேண்டும் கழகம் வென்றாக வேண்டும் என்கிறார். இன்று டி.டி.வி. தினகரனை சசிகலா தவிர்த் திருக்கிறார். நாளை தினகரன் உட்பட சசிகலா சொந்தங்கள் அவரைச் சுற்றி வர மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தர வாதம் என அ.தி.மு.வினர் சசிகலாவை சந் தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள்'' என அ.தி.மு.க.வின் நிலையை விளக்கு கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள்.
தற்போதுள்ள 75 எம்.எல்.ஏ.க்களில் 15 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவிடம், தொடர்பில் இருக்கிறார்கள் என சசி தரப்பு எடப்பாடியை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.