லங்கையின் செம்மணிப் பகுதியில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி மீண்டும் ஒருமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணம்- செம்மணி- சித்துபாத்தி பகுதியில் மே மாதம் முதல் தோண்டப்பட்டு வரும் மனிதப் புதைகுழியிலிருந்து 38 நபர்களின் எலும்புக்கூடுகள் அகழ்ந் தெடுக்கப்பட்டுள்ளது பலரையும் உறையச்செய்துள்ளது. ஏற்கெனவே இக்குழியில் நடத்தப்பட்ட அகழாய்வில் 33 உடல்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலை ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட அகழாய்வில் மேலும் 5 பேருடைய எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. 

இவற்றில் பெரும்பாலானவை வயதில் சிறிய குழந்தை களின் எலும்புக்கூடுகள் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதிக்கு முன்பாக நீலநிற புத்தகப் பையுடன் முழுமையாக அகழ்ந்தெடுக்கப் பட்ட சிறுவனின் எலும்புக்கூடு கிடைத்த அதிர்ச்சி மாறுமுன்பு மேலும் எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பது அதிர்வை அதிகரித் துள்ளது. இந்தப் பணியை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞான ராஜா, இதே குழியில் குழந்தைகளின் பாத அணிகலன் ஒன்றும், விளை யாட்டுப் பொம்மையொன்றும் கிடைத்ததாகச் சொல்கிறார். கடைசியாக எடுக்கப்பட்ட ஐந்து எலும்புக்கூடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருந்ததால், அந்த எண்ணிக்கையை உறுதிசெய்ய முடியவில்லை. பின்னிக்கொண்டு குழப்பமான முறையில் காணப்பட்டதால், ஒன்றாக புதைகுழிக்குள் தள்ளப்பட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Advertisment

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் கவனத்துக்கு வந்திருப்பது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே 22 இடங்களில் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிக்குமான போர் நடக்கும்போதும், முடிந்தநிலையிலும் நிறைய பேர் காணாமல் போயினர். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டோர், அவர்களுக்கு ஆதரவானவர்களென சந்தேகிக்கப் பட்டோர் என பலரும் காணாமல் போயிருந்தனர். 

srilanka1

அவர்கள் போரில் இறந்தனரா… அல்லது போருக்குப்பின் இலங்கை ராணுவத்தால் ரகசிய மாக விசாரணைக்குக் கொண்டுசெல்லப்பட்டு காணாமல் போனார்களா என்பது எதுவும் தெளிவாகாமலே இருந்தது. இப்படிக் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, வெவ்வேறு அமைப்புகளால் 20,000 முதல் 1,00,000 வரை வெவ்வேறு எண்ணிக்கையில் சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசிடம் காணாமல் போனதாக வந்த புகார்கள் மட்டுமே 15,000. இதில் பெரும்பான்மையான புகார்கள் தமிழ்க் குடும்பங்களால் அளிக்கப்பட்டவைதான்.

Advertisment

இத்தகைய நிலையில் போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆங்காங்கே தட்டுப்படும் மனிதப் புதைகுழிகள், இலங்கை ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இந்த 22 இடங்களில் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணையில் எந்த முன் னேற்றமும் இல்லையென்றும், அதில் ஏமாற்றமே எஞ்சுவதாகவும் நபர்களைத் தொலைத்த குடும்பங் களைச் சேர்ந்தோரும் அவர்களது உறவினர்களும் தெரிவிக்கின்றனர்.  இலங்கை அரசால் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டால், அதில் எந்த நியாயமான விஷயங்களும் வெளிப்படாது. சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் விசாரணை யும் ஆய்வும் செய்யப்பட்டால் மட்டுமே ஏதாவது உண்மைகள் வெளிவரும் என அவர்கள் குமுறுகின்றனர். இலங்கையின் வடக்கில் தமிழர்கள் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக் கப்பட்ட மனிதப் புதைகுழிப் பகுதியை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் பார்வையிட்டார். இது சிறிது நம்பிக்கையை அளித்தாலும், புதைகுழி ஆய்வுகள், விசாரணையில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பு குறித்து அவர் ஏதாவது தெரிவித்தால் மட்டுமே முழுமையான நம்பிக்கை ஏற்படுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சரி, செம்மணி மனிதப் புதைகுழிகள் குறித்த விவகாரம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது?

இலங்கையைச் சேர்ந்த பள்ளி மாணவி கிருஷாந்தி குமாரசாமி. இவர் 1996-ல்  திடீரெனக் காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் மகளைக் காணவில்லையென புகாரளித்தனர். இந்நிலையில் அந்த மாணவி அலங்கோலமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நீண்ட அலைச்ச லுக்குப் பின், வழக்குப் பதிவுசெய்யப்பட்டதில், அப்பகுதியிலிருந்த ராணுவ போஸ்டில் பணியிலிருந்த இலங்கை ராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச என்பவரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று சோமரத்ன கைதுசெய்யப் பட்டார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத் தப்பட்டபோது, அரசாங்கம் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது, இந்த வன்புணர்ச்சி வழக்கில் தன் பக்கம் துணைநிற்க வேண்டுமென்பதற்காக ஒரு உண்மையைப் போட்டுடைத்தார். 1995-96களில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணம் ராணு வத்தால் கைப்பற்றப்பட்டபோது, பலர் கொன்று புதைக்கப்பட்டனர். அப்படி கொன்று புதைக்கப் பட்ட 400 பேரின் உடல்கள் எங்கு புதைக்கப்பட் டன எனத் தனக்குத் தெரியுமெனச் சொன்னார்.

srilanka2

தொடக்கத்தில் அவரது வார்த்தைகள் அலட்சியப்படுத்தப் பட்டன. ஆனால் அவரது கூற்று சர்வதேச கவனம் பெற்று அழுத் தம் உண்டாகியபோது, இலங்கை அவர் சொல்லுமிடத்தில் தோண்டிப்பார்க்க உடன்பட்டது . 1999-ல் சர்வதேசப் பார்வை யாளர்கள் உடனிருக்க, தோண்டப்பட்ட குழியில் 15 மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. அவர்கள் 1996-ல் காணாமல் போன வர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இந்தக் கொலைகளுக்கு 20 ராணுவ அதிகாரிகள் பொறுப்பு என்றார் சோமரத்ன. அதில் 7 பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டனர். 

சோமரத்ன ராஜபக்சேவும் மற்ற குற்றவாளிகளும், இதுபோன்ற நிறைய மனிதப் புதைகுழிகளும், அதனுள் இறந்தவர்களின் எச்சங்களும் இருப்ப தாகக் குற்றம்சாட்டினர். ஆனால் இலங்கை அரசும், வெளிநாட்டு நிபுணர்களும் அப்படி எதுவும் புதை குழிகள் இல்லையென ஒருமனதாக முடிவுசெய்திருப்பதாக அறிவித்தனர். அது அரசே பல விஷயங்களை மறைப் பதை அப்பட்டமாக வெளிக்காட்டியது. அதன்பின்பு இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் இது போன்ற மனிதப் புதைகுழிகளும், அதனுள் எலும்புக் கூடுகளும் கிடைத்து வருகின்றன. 2014-ஆம் ஆண்டு மன்னாரில் குடிநீர்க் குழாய்களுக்காகத் தோண்டப்பட்ட இடத்தில் வரிசையாக எலும்புக்கூடுகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 400 சதுர அடிப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

அதேபோல 2013-ல் மன்னார் நகரில் கட்டுமானப் பணிக்கு குழிதோண்டியபோது 11 எலும்புக்கூடுகள் கிடைத்தன என்றால் இலங்கை ராணுவம் நடத்திய நரவேட்டையையும், உடல்களை அவர்கள் அலட்சிய மாகப் புதைத்ததையும் நாம் புரிந்துகொள்ளலாம். 2018-ஆம் ஆண்டு மன்னாரின் சேகர்டு ஹார்ட் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுதான் இருப்பதிலேயே துயரம் நிறைந்தது. அதில் 346 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் 29 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையவை.

இந்த வழக்குகள் தொடக்கத்தில் பரபரப்பாக ஆயின. பின் மெல்லமெல்ல மக்களின் மறதிக்கு ஆளானது. இந்த நிலையில்தான் இப்போது 2025, மே மாதம் செம்மணியின் சித்துபாத்தி பகுதியில் மனிதப் புதைகுழி குறித்த விவரம் தெரியவர, விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள் ளது. இந்த அகழாய்வுப் பணிக்கு 1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட் டாலும், தற்போது அதில் சிறு பகுதி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதில் கிடைத்த எலும்புகள், அரசாங்கத்தின் ரசாயன ஆய்வாளருக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் எத்தனை மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு என்ன? எத்தனை ஆதாரங் கள் கிடைத்தென்ன…? ஒவ்வொரு நாடும் தங்கள் ஆதரவு நாடுகள் பிரச்சனையில் சிக்கிவிடக் கூடாதென நினைக்கின்றன. அப்படி சிக்கினால், நீதியைப் புதைத்தாவது தங்கள் நட்பு நாட்டைப் பாதுகாத்திட நினைக்கின்றன. அதற்கு நல்ல உதாரணம் இஸ்ரேல், தற்போது இலங்கை.

இத்தனை வெளிப்படையான ஆதாரங் களும் சர்வதேச நாடுகளின் மனசாட்சியைத் தட்டியெழுப்பவில்லையென்றால், இன்னும் ஆயிரம் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப் பட்டால் மட்டும் நிலைமை மாறிவிடப் போகிறதா என்ன?

srilanka3