நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மூன்று மாவட்டங்களின் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் வாக்குப்பதிவிற்குச் சில நாட்கள் முன்பு வரையிலும், தி.மு.க. கூட்டணி 14 தொகுதிகளை அள்ளும் என்கிற நிலவரம்தானிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளிலோ, எதிர்பார்க்காத தொகுதிகளைப் பறிகொடுத்து 11 தொகுதிகளில் மட்டுமே கரையேறி, 5 தொகுதிகளை இழந்திருக்கிறது தி.மு.க. கூட்டணி.

ஒருசில தொகுதிகளில் தோல்விக்கு கட்சியினரே காரணமாகி விட்டனரே என ஆதங்கப்படுகின்றனர் உ.பி.க்கள். ஆனாலும் ஆற்றாமை காரணமாக தொகுதியில் நடந்த கட்சி நிர்வாகிகளின் உள்குத்துகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அறிவாலயத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்றனர்.

dmk

கடையநல்லூர் தொகுதியில் மும்முனைப் போட்டி. இவர்களில் தி.மு.க.வில் மாநில அளவிலான பொறுப்பிருந்து அய்யாத்துரை பாண்டியன் அங்கு மக்களுக்கான கொரோனா நிவாரணப் பணிகளைச் சொந்தச் செலவில் அள்ளிவிட்டிருந்தார். ஆனால் தொகுதியோ கூட்டணி ஒப்பந்தப்படி ஐ.யு.எம்.எல்.லின் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கருக்கே தரப்பட்டது. இதனால் கடுப்பான அய்யாத்துரை பாண்டியன் தி.மு.க.விலிருந்து அ.ம.மு.க. தாவி கடையநல்லூர் வேட்பாளரானார்.

Advertisment

சிட்டிங் எம்.எல்.ஏ.வான முகம்மது அபுபக்கர் தன் பொறுப்புக் காலத்தில் இனம் பாராது தொகுதி முழுவதிலுள்ள மக்களுக்கு நல்லது செய்தவர் என்ற பெயரிருந்தது. தி.மு.க.வின் கூட்டணி வேட்பாளர், இஸ்லாமிய சமூக மக்களின் மொத்த வாக்குகளோடு பிற மக்களின் வாக்குகளும் கிடைக்க அவர் கரையேறுவார் என்பதே தேர்தலுக்கு முந்தைய நிலவரமாக இருந்தது.

மாறாக அ.ம.மு.க.வின் அய்யாத்துரை பாண்டியன் தி.மு.க.விலிருந்தபோது கட்சியின் செல்வாக்கோடு தொகுதியிலுள்ள தி.மு.க. நிர்வாகிகள் பலரை வளைத்திருந்தார். வீராணம், வி.கே.புதூர் போன்ற பகுதிகளிலுள்ள அவர் சார்ந்த சமூகத்தின் தி.மு.க.வின் நிர்வாகிகளே அவருக்குச் சாதகமாகச் செயல்பட்டதுண்டு. பரப்புரையின்போது அ.ம.மு.க. வேட்பாளர் கடையநல்லூரைக் கைப்பற்றுவார் என்ற நிலைகூட காணப்பட்டது. கடைசியில் 34,216 வாக்குகளை அவர் பிரித்துக்கொண்டு போக, "எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. கூட்டணி அங்கே வாய்ப்பை இழந்தது' என்கிறார் விஷயம் தெரிந்த ஒரு உடன்பிறப்பு.

ஆலங்குளத்திலோ நிலைமை இதைவிட சீரியஸ். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகயிருந்த தி.மு.க.வின் பூங்கோதை இந்த முறையும் நிச்சயம் வெற்றிபெறுவார் என்ற நிலைதானிருந்தது. தொகுதியில் எந்த மூலையில் என்ன பிரச்சினை என்றாலும் முன் நிற்பவர் என்ற பெயருமிருந்தது. தன் எதிர் வேட்பாளர்களைவிட தொகுதி முழுக்க வைட்டமின் சக்தியை இரண்டு மடங்காக இறக்கியுமிருந்தார்.

Advertisment

ஆனால் தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பிலிருந்தும் அந்தப் புள்ளியின் கண்ணசைவு, இந்தத் தேர்தலில் பூங்கோதைக்கு எதிரான உள்ளடிகளை வெளிப்படுத்தியது. பூங்கோதையின் சொந்த உறவுகளே அவருக்கெதிராகப் பயன்படுத்தப்பட்டார்கள். ஆலங்குளம், பேரூராட்சி கீழப்பாவூர் ஒன்றியம் போன்ற ஏரியாக்களின் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளே ஏனோதானோவென்று செயல்பட்டிருக்கின்றனர்.

அதன்காரணமாக தி.மு.க.விற்கு தேர்தல்தோறும் கிடைக்க வேண்டிய சுமார் 7,000 வரையிலான வாக்குகளை தி.மு.க. இழக்க நேரிட்டு வெற்றியையும் பறிகொடுத்தது.

dmk

நாங்குநேரியில், தொகு திக்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளருக்கு 2 கோடி அனுப்பி வைக்கப்பட்டது. அதைத், தானே கட்சியினருக்கு விநியோகித்தால் பொல்லாப்பு வந்துவிடும் என்பதற்காக நாங்குநேரி வேட்பாளர், மரியாதை நிமித்தம் அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளரிடம் கொடுத்து கட்சியினருக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்தப்புள்ளியோ உ.பி.க் களுக்கு கவனிப்பை நடத்தாமல் பதுக்கி யவர், கடைசிவரை பெட்டியைத் திறக் கவே இல்லையாம். இந்த வெறுப்பின் காரணமாக உ.பி.க்களின் நிர்வாகி கள் தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்ட... வேறு சிலரோ சைலண்ட் ஆனதோடு, சிலரோ அ.ம.மு.க.வின் வேட்பாளரின் சமூகம் சார்ந்தவர்கள் பக்கம் இணக்கமாகிப்போன கதையும் நடந்தேறியிருக்கிறது.

ஆனாலும் கை வேட்பாளர் கொரோனா காலத்தில் நடத்திய மக்கள் பணி, இடைத்தேர்தலில் செலவழித்து தோற்றவர் என்ற அனுதாபம், களக்காடு பேரூராட்சியும், ஒன்றியமும் கைகொடுக்க, வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார். பின்னர் பண விவகாரம் தெரியவர பிரச்சினையாகி பஞ்சாயத்து அறிவாலயம்வரை போயிருக்கிறதாம்.

ராதாபுரம் தொகுதியிலோ தி.மு.க. வேட்பாளர் மீதும் கட்சிக்கு எதிராக பலமுனைத் தாக்குதல்கள். வேட்பாளர் அப்பாவுவை வீழ்த்துவதற்கென்றே, இலைத் தரப்பினரே கரன்சியைப் பரத்தியிருக்கிறார்கள். ராதாபுரம் இலை வேட்பாளருக்கு ஸ்பெஷலாக "20 “சி'“ என்று இலைத் தரப்பின் தலைமை தொகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

அப்பாவுவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வின் வட மாவட்ட முக்கிய புள்ளி ஒருவரே இந்த விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தியிருக்கிறார். ஏனெனில் அந்தப் புள்ளியின் முறைகேடுகள் வெளிவரக் காரண மானவர் அப்பாவு என்பதால் தானாம்.

ராதாபுரம் இலைத்தரப் பிற்கு வந்த இத்தனை பெரிய வைட்டமின் டோஸ்களும், தொகுதியின் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை வேலை செய்யவிடாமல் முடக்கு வதற்கே பயன்படுத்தப் பட்டதாம். வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களும் களப்பணியை மேற்கொள்ளாமல் ஸ்லீப்பர் செல்லானதும் உண்டாம்.

ஆனாலும் அதிர்ஷ்டக் காற்று தி.மு.க.வின் பக்கமே வீச அப்பாவு 5,925 என்ற சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்தால் மூச்சு வாங்கக் கரையேற முடிந்திருக்கிறது.

பிரம்மாண்ட வெற்றியாக மாறியிருக்கவேண்டியது பெரும்பான்மை வெற்றியாக முடிந்துபோனது ஏன் என்பதை அறிவாலயம் ஆராய்ந்தே தீரவேண்டும்!