வாக்கு எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா -முடியாதா என்ற கேள்வி கடந்த இருபது வருடங்களாக இந்தியாவில் எழுந்துகொண்டே இருக்கிறது. தேர்தல் கமிஷன் முடியாது என நிச்சயமாகச் சொல்ல, அவ்வப்போதைய நிலைமைக்கேற்ப தேசிய, மாநில கட்சிகள் மாறி மாறி வாக்கு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்த முடியுமென கச்சை கட்டிநிற்கின்றனர்.

1999-ல் இந்தியாவில் மிகச் சில தொகுதிகளில் சோதனைமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வாக்கு எந்திரம், 2004-ல் பாராளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

evm

ஒரு வாக்கு எந்திரத்தில் அதிகபட்சமாக 2000 வாக்குகளைப் பதிவுசெய்யமுடியும். பதினாறு வேட்பாளர்களின், வெவ்வேறு சின்னங்களை இணைக்கமுடியும். அதிகபட்சமாக நான்கு வாக்கு எந்திரங்களை இணைத்து 64 வேட்பாளர்களின் வெவ்வேறு சின்னங்களைப் இடம்பெறச் செய்யலாம். 64 வேட்பாளர்களுக்குமேல் போனால் அந்தத் தொகுதியில் பழைய நடைமுறையிலான வாக்குச்சீட்டு ஓட்டு முறையைத்தான் பயன்படுத்த முடியும்.

Advertisment

என்னதான் அறிவியலின் கனி என்றாலும் இன்னும் ஏராளமான நாடுகள் மதில்மேல் பூனையாக இ.வி.எம். என்னும் வாக்கு எந்திரத்தைப் பயன்படுத்துவதில் தடுமாற்றத்திலேயே இருக்கின் றன. ஆனால் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா வாக்கு எந்திரத்தில்தான் வாக்குப்பதிவு நடத்துகின்றது. பெல்ஜியம், எஸ்தோனியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து போன்றவையும் வாக்கு எந்திரத்தைப் பயன்படுத்துகின்றன.

evm

இன்னும் சில நாடுகள் சிறிய அளவிலான தேர்தலுக்குப் பயன்படுத்துகின்றன. நாடு முழுமைக்குமான தேர்தலுக்குப் பயன்படுத்தவில்லை. சில நாடுகள் இ.வி.எம். முறையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு கைவிட்டுவிட்டன. நெதர்லாந்து, ஜெர்மனி, ரோமானியா, கஜகஸ்தான், அமெரிக்கா என வாக்கு எந்திரத்தை நம்பாத நாடுகளின் வரிசை நீளமாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் நாடு முழுமைக்குமான தேர்தலுக்கு வாக்கு எந்திரத்தை நம்பும் நாடுகள் நான்கே நான்குதான். அவற்றில் ஒன்று இந்தியா.

Advertisment

ஏன், வாக்கு எந்திரத்தைப் பயன்படுத்து வதற்கு அவர்களுக்கு என்ன தயக்கம்? வாக்கு எந்திரத்தை ஹேக் செய்துவிடவோ, ஏதோ ஒரு வகையில் புறக்காரணிகள் செல்வாக்கு செய்துவிடவோ முடியுமென்ற சந்தேகம்தான்.

இந்தியாவில் மீண்டும் ஒருமுறை வாக்கு எந்திரத்தில் செல்வாக்கு செலுத்தமுடியும் என்ற சந்தேகத்தை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பியிருக்கிறார். அவரது சந்தேகமும் எளிதில் புறக்கணிக்கக்கூடியதல்ல.

அதிகாரத்திலிருப்பவர் தங்களுக்கு ஆதரவாக இ.வி.எம். எந்திரத்தில் ஏதாவது செய்துவிடலாம் என்ற அச்சம்காரணமாக 2013-ல் "வி.வி.பேட்' எந்திரம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என ஒரு வாக்காளர் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். தேவையெனில் வி.வி. பேட் சீட்டைச் சேகரித்து, பழைய வாக்குச்சீட்டைப் போல எண்ணியும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இப்போது கோபிநாதன் இந்த வி.வி.பேட். எந்திரத்தை வைத்தேதான் தனது சந்தேகத்தைக் கிளப்புகிறார். இ.வி.எம். எந்திரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதில் இந்த வி.வி.பேட் சந்தேகத்தையும், இ.வி.எம்.மில் கோல்மால் செய்வது சாத்தியமே என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைத்தளம், “""எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் தனியாகப் பயன்படுத்தக்கூடிய எந்திரம், தொலைவிலிருந்தோ அல்லது எந்த ஒரு நெட்வொர்க்குடன் இணைத்தோ, எந்த ஒரு புற சாதனத்துடன் சேர்த்தோ பயன்படுத்த முடியாது'' எனக் கூறுகிறது. அதனால் எந்த ஒரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்குச் சாதகமாக இந்த எந்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்பது ஆணையத்தின் உறுதிப்பாடு.

ஆனால் ""வி.வி.பேட்டை செயல் படுத்த மடிக்கணினி அல்லது கணினி இணைத்தாகவேண்டும் அல்லது சிம்பல் லோடிங் யூனிட் வேண்டும். வி.வி.பேட் காலத்துக்கு முன்பு இ.வி.எம். உண்மையிலேயே ஸ்டாண்ட் அலோன் எனும் தனித்த எந்திரமாக இருந்தது, தற்போது அப்படியல்ல. பேலட் யூனிட்டிலுள்ள நீலநிற பட்டனை அழுத்தியதும், வி.வி.பேட் அந்த வேட்பாளரின் பெயரையும் சின்னத்தையும் ப்ரிண்ட் செய்கிறது. ஆக... இப்போது அந்த எந்திரத்துக்கு எந்தப் பொத்தான் எந்த வேட்பாளருக்கு, அவருக் கான சின்னம் எதுவென்பது தெரியும். வி.வி.பேட் தான் கண்ட்ரோல் யூனிட்டில் வாக்கைப் பதிகிறது.

வி.வி.பேட்டில் ஒரு ப்ராஸசரும், நினைவக மும், ப்ரிண்ட் யூனிட்டையும் கொண்டிருப்பதால், வாக்குப்பதிவு நடக்கும்முன் வேட்பாளர், அவரது பெயர், அவரது சின்னம் ஆகியவற்றை வி.வி.பேட்டில் ஏற்றவேண்டும். ப்ராஸசரும் நினைவகமும் கொண்டிருக்கும் எந்திரத்தில் செல்வாக்குச் செலுத்த, சில்மிஷங்கள் செய்ய வாய்ப்புள்ளது. எனவே இப்போதிருக்கும் நடைமுறை, தவறு நடக்கவே வாய்ப்பில்லாத நடைமுறை கிடையாது''’என்பது அவர் தரப்பு.

அவரது சந்தேகம் குறித்து தேர்தல் ஆணையத்திடமிருந்து முறையான விளக்கம் வராத நிலையில், அந்த சந்தேகம் தீர்க்கப்படாததாகவே கருதவேண்டும். பேரழிவு பயக்கும் அணு உலைகளை நிறுவக்கூட தயங்காத வல்லரசு நாடுகள், சாதாரண இ.வி.எம். விஷயத்தில் தயங்கு கிறதென்றால் அந்த சந்தேகத்திலும் பொருளிருக்கத்தானே செய்கிறது என்பது இ.வி.எம். எதிர்ப்பாளர்களின் வாதம்!

இந்தியாவில் வாக்கு எந்திர முறையைப் பயன்படுத்தலாமா,… வேண்டாமா… என ஒரு தேர்தல் நடத்தி யாகவேண்டும் போலிருக்கிறது.