அப்பல்லோவில் ஜெ. சிகிச்சை பெற்றபோது ஆப்பிள் சாப்பிட்டார், ஆங்கிலத்தில் பேசினார் என மருத்துவமனைக்கு வெளியே வந்து கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். அதேபோல் அப்பல்லோவில் ஜெ. மரணம் அடைந்ததை பற்றி ஆறுமுகசாமி கமிஷனிலும் சாட்சியம் அளித்துவிட்டு வருபவர்கள் ஆளுக்கொரு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டவுடன் அதில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க வேண்டும் என நீதிபதியிடம் மனு கொடுத்தார்கள். சுப்ரீம் கோர்ட்டில் கூட பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற வாதத்துடன் வந்தவர்களை "அது வேறு இது வேறு. ஜெ.வின் மரணம் பரம ரகசியம்' என்று அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெறும்போது சி.சி.டி.வி.க்களை அணைத்தது போல மறுத்தார் நீதிபதி ஆறுமுகசாமி. ஆனாலும் சாட்சியமளித்தவர்கள் வெளியே வந்து கூறும் தகவல்களில் பொய்யும் முரண்பாடுகளும் மூட்டை மூட்டையாக இருக்கின்றன.
* ஜெ. மறைந்த பிறகு அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் "ஜெ. மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சுயநினைவில்லாமல் இருந்தார்' என்கிறது. ஆனால் விசாரணைக் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட சசிகலாவின் பிரமாண பத்திரத்தில் "ஆம்புலன்ஸ் வேனில் போகும்போதே ஜெ.வுக்கு சுயநினைவு வந்தது' என குறிப்பிட்டுள்ளார்.
* ஜெ.வின் சிகிச்சை நாட்களைப் பற்றி புத்தகம் எழுதிய தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் ""ஜெ. சிகிச்சை பெறும்போது நான் பார்த்தேன். அவர் என்னை நோக்கி தம்ப்ஸ் அப் பாஷையில் கட்டை விரலை உயர்த்தினார்'' என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மே 2-ந்தேதி விசாரணைக் கமிஷனில் ஆஜரான ஜெ.வின் பர்சனல் டாக்டர் சிவக்குமார், ""கவர்னர் ஜெ.வை பார்க்கும் போது ஜெ.வுக்கு பந்துகளை கேட்ச் பிடிக்கும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெ.வை கவர்னர் பார்த்தாரே தவிர, கவர்னரை ஜெ. பார்க்கவில்லை'' என சொல்லியுள்ளார். புத்தகத்தில் உள்ளதுபோல் "தம்ஸ் அப்' காட்டவில்லை என்பது இதன் அர்த்தம்.
* முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவும் சசிகலாவும் அளித்த வாக்குமூலங்களில் ஜெ.வுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்க கொண்டு சென்றபோது, அத்தனை அமைச்சர்களையும் வரிசையாக நிற்க வைத்து பார்த்தார். அதேபோல் ஜெ.வுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதும் எக்மோ எனப்படும் கருவி பொருத்தப்படும்போது அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது என சொன்னதாக செய்திகள் வந்தன. அதை ராமமோகனராவ் மறுத்தார். அமைச்சர்களும் மறுத்தார்கள். ""ராமமோகனராவ் ஒரு அதிகாரி மாதிரி பேசவில்லை, அரசியல் செய்கிறார்'' என அமைச்சர் ஜெயக்குமார் மறுத்தார். இப்படி அவர்களுக்குள்ளாகவே முரண்பட்டார்கள். டாக்டர் சிவக்குமாரோ எக்மோ கருவி பொருத்திவிட்டு எய்ம்ஸ் டாக்டர்கள் அட்வைஸ்படி எடுத்துவிட்டதாகக் கூறுகிறார்.
* ஜெ. 4-ம் தேதி இறந்தார் என்ற திவாகரனை சம்மன் செய்து அழைத்துள்ளது கமிஷன். அவரோ "அப்பல்லோவில் ஜெ.வை பார்க்கவில்லை' என்றும், "டிசம்பர் 4-ந் தேதியே ஜெ. இறந்துவிட்டதாக தகவல் வந்தது' என்று கூறியுள்ளார் திவாகரன். அதன்பிறகு "மருத்துவ ரீதியாக எக்மோ சிகிச்சைக்குட்படுத்தினார்கள்' என்றார். டிசம்பர் 5-ல்தான் ஜெ.வின் மரணம் அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.
"ஜெ.வுக்கு சிகிச்சையளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், அப்போதைய முதல்வர் பன்னீர் ஆகியோரை அழைக்காதது ஏன்?' என கேள்வி கேட்கிறார், சசிகலாவின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன். அவர்களையும் விசாரித்தால் இன்னும் எத்தனை பொய்கள் வெளிப்படுமோ?