""என் பேரு வேலுச்சாமி. முத்துக்கண்ணனை எனக்கு நல்லாத்தெரியும். இங்கேதான் குண்டாயிருப்பு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்துல செயலாளரா இருந்தாரு. என்னோட 7 ஏக்கர் நிலத்தை அடமானம் வச்சு, ரூ.10 லட்சத்தை அவருக்கு கொடுத்தேன். யாரோ ஒரு லேடிகிட்ட ரூ.70 லட்சம் வரைக்கும் கொடுத்து ஏமாந்துட்டாரு. அதனால, முத்துக்கண்ணனை அவங்க சம்சாரம் வீட்ட விட்டே விரட்டிட்டாங்க. தெருவுக்கு வந்துட்டாரு. பணம் போச்சுன்னு புலம்பியே, பைத்தியம் பிடிக்கிற ஸ்டேஜுல இருக்காரு. சாகப்போறேன்னு சொல்லிக்கிட்டு திரியறாரு. நான் கொடுத்த ரூ.10 லட்சம் எனக்குத் திரும்பக் கிடைக்கணும்கிற கவலையைவிட, முத்துக்கண்ணன் செத்துப்போயிருவாரோங்கிற பயம்தான் வாட்டி வதைக்குது'' என்று முத்துக்கண்ணனை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார் வேல்சாமி.
முத்துக்கண்ணன் நம்மிடம் ""10 லட்சம் கொடு; பத்தே நாள்ல 3 கோடி வாங்கிக்கோன்னு என்கிட்ட சொன்னது அட்ரஸ் இல்லாத ஆளு இல்ல... அ.தி.மு.க. முன்னாள் வெம்பக்கோட்டை யூனியன் சேர்மன் ரேவதி காசிப்பாண்டியன். நானும் அங்கிட்டு இங்கிட்டு வட்டிக்கு வாங்கி ரூ.70 லட்சம் கொடுத்தேன். சொன்னபடி பணம் தரல. போலீஸ்ல புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கல. ஆனா, இப்ப மிரட்டலுக்கு மேல மிரட்டல். "நான் ஓ.பி.எஸ்.ஸுக்கு சொந்தக்காரி. எந்த ஸ்டேஷன்ல வேணும்னாலும் கம்ப்ளைன்ட் கொடு. என்னைய ஒண்ணும் பண்ண முடியாது. உன்னைப் பத்தி ஓ.பி.எஸ். தம்பிகிட்ட சொன்னேன்னு வச்சிக்க. நீ உசுரோடவே இருக்கமாட்ட'ன்னு மிரட்டுறாங்க. நான் மட்டுமல்ல. ரேவதிகிட்ட நிறையப் பேர் ஏமாந்திருக்காங்க''’என்றார் பரிதாபமாக.
பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக ரேவதி கையொப்பமிட்ட பிராமிஸரி நோட்டுகளைக் காண்பித்தார். செல்போனில், தான் ரேவதியுடன் பேசிய ஆடியோ பதிவுகளையும் சி.டி.யாகத் தந்தார்.
அந்தப் பதிவில், “""அது ஒரு காஸ்ட்லியான லிக்யுட். பக்கா ஒரிஜினல். கேரளாவுல பதுக்கி வச்சிருக்காங்க. பல ஆயிரம் கோடிக்கு விற்கப் போறாங்க. வெளில யாருக்கும் தெரியாது. ஜி.ஆர்.டி.கிட்ட பேசியாச்சு. மலேசியாவுல இருந்து ஆள் வரணும். குறிப்பிட்ட தேதிக்குள்ள டீல் முடிக்கணும். இதுல ஒரு பங்கு மோடிக்கும் கொடுக்கணும். மூணு நாளைக்கு முன்னால ஏதோ "சிப்'னு சொல்லிக்கிட்டிருந்தான். 19,000 கோடிக்கு வித்திருக்கான். மலேசியாக்காரன் வர்றப்ப நம்ம கைக்கு 5 கோடி கிடைச்சிரும். லைஃப்ல செட்டில் ஆயிடலாம்.
கோயம்புத்தூர் லாவண்யா ரொம்ப கெட்டிக்காரி. டிரஸ்ட்ல நான், லாவண்யா, அவ வீட்டுக்காரர் மூணு பேர் மட்டும்தான். இந்தோனேசியாவுல இருந்து கேரளாக்காரன் வந்திருக்கான். டிரஸ்ட் ரெனியூ பண்ணணும். பெரிய சொத்து. எங்கேயோ போயிடலாம். டிரஸ்ட்டுக்கு தினமும் வருமானம் வருது. 75 லட்சம் கொடுத்தால் போதும். இந்தோனேசியா, கேரளான்னு ரெண்டு இடத்துல ஃபண்ட் ரெடி பண்ணிருக்கேன். மெஷின்கூட ரெடியா இருக்கு. ரூ.20 கோடி டாகுமெண்ட் திருப்பூர்ல இருக்கு. அங்கே அ.தி.மு.க. மகளிரணி பானு இருக்கா. பணத்தை ரெடி பண்ணிட்டு ஆளைக் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னா. அதுக்குள்ள நம்ம பையன் ஒருத்தன் பானுவுக்கு தப்புத் தப்பா மெசேஜ் அனுப்பிருக்கான். லாவண்யாவுக்கு 80%, எனக்கு 20%. கார்டு வச்சு பணம் எடுக்கணும். ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க்ல.. அப்புறம் ஸ்டேட் பேங்க்ல. மெஷின் 25,000 தான் இருக்கும். 50 லட்சம் கொடுத்தால், ஒரு கோடி வாங்கிக்கலாம். தேவைக்கு வாங்கிக்கலாம். நாமதான் மெயின் பார்ட்னர். ஆடிட்டர் ஒருத்தர் இருக்காரு. ஐ.டி. பிரச்சனை வராம பார்த்துக்குவாரு. தினமும் 5 கோடி, 6 கோடின்னு டிரஸ்ட்டுக்கு வந்து விழும். நமக்கு 3 பெர்சன்ட் கமிஷன்னா, ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் தாராளமா கிடைக்கும். இது போதாதா?'' என்று ஏதேதோ பேசியிருக்கிறார் ரேவதி.
அ.தி.மு.க. பிரமுகர் காசிப்பாண்டியனோடு வாழ்க்கை நடத்திவரும் ரேவதி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆசியோடு யூனியன் சேர்மன் ஆனார். அ.ம.மு.க. மா.செ.வும் சாத்தூர் எம்.எல்.ஏ.வுமான எதிர்கோட்டை சுப்பிரமணியனை, செல்லமாக "மாமா' என்றழைப்பார். இந்த வரலாறை முத்துக்கண்ணன் எடுத்துச் சொல்ல, நாம் ரேவதியை தொடர்புகொண்டோம்.
""முத்துக்கண்ணன் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் பார்த்ததுகூட இல்லை.''’என்று முதலில் சொல்லிவிட்டு, “""அந்தக் கோயம்புத்தூர் லாவண்யா ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சிருக்கிறதா சொன்னா. டாகுமெண்ட்ட வச்சி பணம் ஏற்பாடு பண்ணணும்னு வந்தா. இந்த முத்துக்கண்ணனும் லாவண்யாவும் ஒருநாள் எங்க வீட்ல டீ குடிச்சாங்க. இந்த ஆளால நான்தான் 6 லட்ச ரூபாய் நகையை இழந்திருக்கேன். என் வீட்டுக்காரருக்கு எதுவுமே தெரியாது. டிரஸ்ட் ஆரம்பிச்சு, நல்ல நிலைக்கு வருவோம்னு நினைச்சேன்... அவ்வளவுதான். மத்தபடி, என்னைப் பத்தி யாரும் தப்பா சொன்னா நம்பாதீங்க. நான் வாழ்ந்துக்கிட்டிருக்கிறது ஒரு தெய்வ வாழ்க்கை'' என்றார்.
தற்போது அணி மாறியிருக்கும் திருப்பூர் மாவட்ட அ.ம.மு.க. மகளிரணியைச் சேர்ந்த பானுவை தொடர்புகொண்டோம். “""நான் பணத்துக்கு ஆசைப்படாதவ. அம்மா இருக்கிறப்பவே சம்பாதிக்கல. இந்த மாதிரி டீலிங் பேசுறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. கட்சியில் என் வளர்ச்சி பிடிக்காமல் யாரோ என்னைப்பத்தி கிளப்பிவிடறாங்க''’என்று மறுத்தார்.
""பெரிய விவகாரம்போலத் தெரிகிறது''’என்றோம் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜனிடம். அவர் தலையிட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் ரேவதி காசிப்பாண்டியனுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நேரில் ஆஜராவதைத் தவிர்த்து வருகிறார் ரேவதி.
-சி.என்.இராமகிருஷ்ணன்