பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்ததுபோல... இப்போது கோவையில் ப்ளஸ் டூ மாணவி, ஆசிரியர் ஒருவனால் தூக்கிட்டுக் கொண்ட நிகழ்வு தமிழகம் முழுக்க உள்ள மக்களை உலுக்கி எடுத்திருக்கிறது .
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தாள். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருப்பவன் மிதுன் சக்கரவர்த்தி.
மாணவியின் அப்பா... "அய்யா, எனக்கு ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணுதான் இவ. நல்லா படிப்பா. நான் பலகார மாஸ்டராக இருந்தாலும், என் மகளை அவ்வளவு செலவுபண்ணி சின்மயா ஸ்கூல்ல படிக்க வச்சேன். இந்த கொரோனோ காலத்துல மாத தவணைக்கு, ஆன்லைன் கிளாஸ் படிக்க செல்போன் வாங்கிக் கொடுத் தேன். அந்த போனில்தான், இந்த மிதுன் என் புள்ளையிடம் கிளாஸ் எடுப்பதைப் போல எடுத்துவிட்டு ஆபாசமாக பேசி யிருக்கிறான். ஆனால் இதையெல்லாம் எங்க ளிடம் மறைத்துவிட் டாள் எனது மகள்.
அதற்குப் பிறகு பள்ளிகள் திறந்ததும் மிதுன், "லைப்ரரில ஒரு புத்தகத்தை எடுத்துட்டு வா' எனச் சொல்ல, அவள் லைப்ரரிக்குள் போயிருக்கிறாள். அங்கே வைத்து என் மகளிடம் தப்பாய் நடந் திருக்கிறான். அதிர்ந்துபோனவள், பள்ளி மேலாளரிடம் முறையிட்டிருக்கிறாள். "இதை யெல்லாம் பெரிய விசயமா ஆக்காதே. பேருந்தில் செல்லும்போது இடிப்பார்களே... அது மாதிரி எடுத்துக் கொள்' என சொல்லியிருக்கறாங்க. என் மகள் இதையெல்லாம் மறைச்சுட்டு அவ ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அழுதிருக்கா. தொடர்ந்து மிதுன், செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால மனசொடிஞ்சு போயிட்டா.
நல்லா படிச்சுட்டு இருந்த பொண்ணு, திடீர்னு, "தனக்கு படிப்பே ஏறலை... இனி நான் அந்த ஸ்கூலுக்கு போகமாட்டேன்'னு அடம் புடிச்சா. அதுனால ஆர்.எஸ்.புரத்துல உள்ள ஒரு கவர்மெண்டு ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன். அங்கேயும் வந்து டார்ச்சர் பண்ணியிருக்கான் மிதுன். அதனாலதான் சாயந்தரம் ஸ்கூல் முடிஞ்சு வந்தவ... ஃபேன்ல தூக்கு மாட்டி தொங்கிட்டா. ஒரு அழகு புள்ளையப் பெத்து... அந்தரத்துல தொங்கவிட்டுட்டானே படுபாவி...'' என்கிறார் கண்ணீருடன்.
மாணவியின் அம்மா கதறியது நெஞ்சைப் பிளக்கிறது. "ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மாணவி எழுதிய கடிதமொன்றை கண்டெடுத்திருக்கிறார்கள். அந்த கடிதத்தில்... "யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்துவோட தாத்தா, எலீசா சாருவோட அப்பா, இந்த சார் தே... யாரையும் சும்மா விடக் கூடாது...' என எழுதியிருக்கிறாள்.
இந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் ரீத்துவோட தாத்தா, பக்கத்து வீட்டில் உள்ளவராம். எலீசா சாரு பள்ளியில் படிக்கும் தோழி. அவளுடைய அப்பாவையும் மாணவி குறிப்பிட்டிருக்கிறார்.
மாணவியின் ஸ்கூல் நண்பரான வைஷ்ணவோ "மிதுன் சக்கர வர்த்தி தன்னிடம் தவறாக நடப்பதாய் அவள் என்னிடம் கூறினாள்' என போலீசில் சாட்சியம் அளித்திருக்கிறான். சின்மயா ஸ்கூலில் படிக்கும் பிற மாணவ, மாணவியரிடம் விசாரித்தபோது..., "அந்த வைஷ்ணவையும் மேலும் விசாரித்தால் உண்மையான உண்மையும் வெளிப்படும்' என்றிருக்கிறார்கள்.
இப்போது மாணவியின் கடிதத்தில் ஒளிந்திருக்கும் இரண்டுபேரை தூக்கி வந்து விசாரிக்கத் தயாராயிருக்கும் மகளிர் போலீ ஸார், வைஷ்ணவ் மீதும் சந்தேக ரேகையை படரவிட்டிருக்கிறது. இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடுமலைபேட்டை கிளைச் சிறையில் அவனை அடைத்தது ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீஸ்.
மேலும் மிதுன் சக்கரவர்த்தி, இதுபோல் பல மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோகால் பேசியது பற்றி ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், மிதுனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க தீவிரமாகியுள்ளது போலீஸ்.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும் உறவினரும் போராட்டம் நடத்திய நிலையில்... இந்திய மாணவர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டக் களத்தில் இறங்கின. தாசில்தார் கோகிலவாணியும் போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். த.பெ.தி.க உறுப்பினர் பிரியா மனோகரன், சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். முதற்கட்ட விசாரணைக்காக பள்ளியின் தலைமை ஆசிரியை மீராவும் கைது செய்யப்பட்ட நிலையில்... மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
"மாணவி மீது பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, குற்றவாளிகள் விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கப்படவேண்டும்' என்கிறார்கள் பொதுமக்கள்.
__________________
ஆடியோ ஆதாரம்!
மிதுன் சக்கரவர்த்தி: சாரி... அம்மா வந்துட்டாங்க.
மாணவி: எனக்கு தூக்கமே வரலை. நீ அந்தப் பொண்ணுகிட்டயும், இன்னொரு பொண்ணுகிட்டயும் என்கிட்ட நடந்துக்கிட்ட மாதிரிதான் நடந்துகிட்டயா.? அழுதபடியே பேசுகிறாள்.
மிதுன்: யேய்... லூசா நீ. உன்கூட பேசிட்டு இருக்கறேன்னு சொன்னா அவுங்க ரெண்டு பேரும் கோபம்ஆவாங்கன்னு நான் உன்கிட்ட சொன்னதேயில்லையா? உன்னோட சீனியர் யாராவது என்மேல புகார் சொல்லியிருக்காங்களா?
மாணவி: என்னால தூங்கவே முடியலை. நடந்ததை மேனேஜ்மெண்ட்ல சொல்லப் போறேன்.
மிதுன்: அன்னைக்கு நைட்டோட நடந்தது நடந்தாச்சு. அதுக்கப்புறம் உன்னைய டிஸ்டர்ப் பண்ணினேனா? நடந்ததை நெனச்சு வருத்தப்படறேன். நான் நிம்மதியா தூங்கிட்டிருக்கேன்னு நெனச்சியா? அந்த நைட்டோட உன் நம்பரையே அழிச்சுட்டேன். இப்பக்கூட நீ எந்த நம்பர்ல இருந்து பேசறேன்னு தெரியலை. நீதான் பேசுறியான்னுகூட தெரியல. நான் உன்கிட்டதான் விழுந்துட்டேன். கற்புங்கறது பொம்பளைகளுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும்தான் இருக்கு... என்று மாட்டிக்கொள்ளக் கூடாதென்ற எச்சரிக்கையோடு உத்தமன் போல பேசியிருக்கிறான் அந்தக் கயவன்.