மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு விவேகமான அமைச்சர் தான் மா.சுப்பிரமணியம். அதுபோல் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனின் செயல் பாடுகள் திருப்தியாக இருந்தாலும், இத்துறையின் செயல்பாடுகளால், இறுதிப் பயனாளிகளான பொதுமக்களுக்கு முழுப்பயனும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
குறிப்பாக, ஏழை எளிய மக்களின் உடல்நலத்தைப் பேணக்கூடிய அரசு மருத்துவ மனைகளில், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளார்களா என ஒரு பட்டியல் எடுத்தால், சிலரைத்தான் அடையாளம் காண முடியும். அரசு, மாதச் சம்பளமாக லட்சக்கணக்கில் கொடுத்தாலும், பெரும்பாலானவர்கள் சுய நலத்துடன் பணியாற்றுவதையே காண முடிகிறது. அரசு மருத்துவமனைப் பணியில் ஏதோவொரு கட்டாயத்தின் பேரில் ஓரிரு மணி நேரத்தில் சில நோயாளிகளை மட்டும் பார்த்துவிட்டு வெகுவிரைவாக அவர்களின் சொந்த மருத்துவமனைக்குப் பறந்து விடுகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது, செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும்தான். ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனையே இதற்கு சரியான எடுத்துக்காட்டு.
ஈரோடு, அரசு தலைமை மருத்துவ மனையில் தேவைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மையே. அதேவேளை, பணியில் இருக்கும் மருத்துவர்கள் பலரும் வேலை நேரத்தில் இருப்பதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. நாள்தோறும் மாவட்டம் முழுதுமிருந்தும் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். அதேபோல் ஈரோடு மாவட்டத்தைச் சுற்றி, நாமக்கல் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இங்கு வரும் நோயாளிகள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படு வதாக பல புகார்கள் வருகின்றன.
உதாரணத்திற்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தச்சுத் தொழி லாளி, 54 வயது பாலசுப்பிரமணி. இவர் உடல் நலம் பாதிக்கப் பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்று, பரிசோதனைக்காக பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கூலித் தொழிலாளியின் குடும்பம் அவ்வளவு பணத்திற்கு எங்கே போகும்? இதனால் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்ற 20ஆம் தேதி வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவரைப் பார்த்தபோது ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்தார். காப்பீட்டுத் திட்டத்தில் ஸ்கேன் எடுப்பதற்காக அங்குள்ள ஸ்கேன் பிரிவிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு உடனடியாக ஸ்கேன் எடுக்க முடியாது எனத் தெரிவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்கள் அவரின் பெயரை மட்டும் பதிவு செய்துகொண்டு செல்போன் எண்ணிற்கு மெசேஜ் வரும்போது மீண்டும் வருமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
அதன்பின் மூன்று நாட்கள் கழித்து இருபத்தி மூன்றாம் தேதி அவர்களுக்கு மெசேஜ் வந்துள்ளது. அதனையடுத்து 23-ஆம் தேதி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்த பாலசுப்பிரமணி, ஸ்கேன் பிரிவுற்குச் சென்று ஸ்கேன் எடுத்துள்ளார். பரிசோதனையின் முடிவு அடுத்த நாள் பிற்பகலுக் குப் பிறகு கிடைக்கும் என்றும், அதன்பிறகு வந்து பெற்றுச் செல்லு மாறு கூறியிருக்கிறார்கள். முடிவுகளைப் பெற்ற பிறகு அதற்கும் அடுத்த நாள் மருத்துவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் 24ஆம் தேதி மருத்துவர் இல்லை. மீண்டும் அடுத்த நாள் சென்று மருத்துவரை பார்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவர் அனுப்பிய பரிசோதனைக் காக அவர் ஒரு வார காலமாக அலைந்து வருகின்றார். வயிற்று வலிக்கான காரணத்தைத் தெரியவே ஒரு வாரம் ஆகும் என்றால் அதுவரை அந்த நோயாளி வலியுடன் கதற வேண்டியதுதானா?
இதேபோல் சங்ககிரியைச் சேர்ந்த பெண் ஒருவரும் சிகிச்சைக்காக பல நாட்களாக மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக புகார் கூறினார். இந்த மருத்துவமனையில் டூட்டி பார்க்க வரும் மருத்துவர்கள், சில மணி நேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்துவிட்டு, அதன்பின் தங்கள் சொந்த மருத்துவமனைக்குச் சென்றுவிடுவதாக அங்கு நோயாளிகளாக வரும் மக்கள் வெளிப்படை யாகவே கூறுகிறார்கள். மேலும், மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்ப்பதில்லை எனவும், நோயாளிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இஷ்டத்துக்கு அலைக்கழிக்கிறார்கள் என்றும் பொதுமக்கள் வேதனையோடு கூறுகிறார்கள்.
நாம் விசாரித்த வகையில் மூத்த மருத்துவர் சசிரேகா போன்ற சிலர் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். பல மருத்துவர்கள் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை. பெரும்பாலும் பயிற்சி மருத்துவ மாணவ, மாணவிகளே டூட்டி டாக்டர்களாகச் செயல்படுகிறார்கள். இந்த லட்சணத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சிறப்பான சேவை(?)யில் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளதாம்! அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பைச் சரிசெய்வதோடு, அரசு மருத் துவர்களை மனசாட்சியுடன் பணிபுரியுங்கள் என மருத்துவத்துறை அமைச்சர் வகுப்பெடுக்க வேண்டும், இல்லையேல்... மக்களை அவதியுற வைக்கும் மருத்துவர்களால் அரசுக்குத் தான் கெட்ட பெயர் ஏற்படும்.