இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100ஐத் தொட 45 நாட்கள் ஆனது. அடுத்த 9 நாட்களில் 500 ஆனது. பின்னர் ஐந்தே நாட்களில் 1000த்தைக் கடந்துவிட்டது. இறப்பின் எண்ணிக்கையும் அதிகரிக்க, குணமானவர்கள் பற்றிய செய்திகளும் வந்ததால் அச்சமும் நம்பிக்கையும் கலந்து மக்கள் அல்லாடுகின்றனர்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் சிகிச்சைப்பெற்றுவந்த 7 நோயாளிகள் அடுத்தடுத்து பலியானதால் பேரதிர்ச்சியில் இருக்கிறது தமிழகம். ஆனால், இவர்கள் கொரோனாவால் இறக்கவில்லை என்றும் இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழக சுகாதாரத்துறை மறுத்திருப்பது பீதியை குறைக்கும் தகவலாக இருந்தாலும் பயம் மட்டும் விலகவில்லை.
மருத்துவ வட்டாரத்தில் பேசினோம். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் ஒவ்வொருவரும் பிறவி எலும்பு நோய், சிறுநீரகநோய், நிமோனியா போன்ற காரணங்களால் இறந்ததாகவும் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றும் அறிவித்துள்ளது தமிழக சுகாதாரத்துறை. ஆனால், கொரோனா அறிகுறிகள் இருந்ததால்தானே அதற்கான ஐசோலேஷன்(தனிமை)வார்டில் வைக்கப்பட்டிருந்தார்கள்? அப்படி, இறக்கும் நோயாளிகள் கொரோனாவால் இறக்கவில்லை என்று சொன்னால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள் மருத்துவர்கள்.
மேலும், “ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா அறிகுறிகள் மற்றும் சந்தேகத்துடன் வருகிறவர்களிடம் பரிசோதனை செய்யும் டாக்டர்கள் மாவட்ட தலைமை மருத்துவமனை யின் தலைவருக்கு அனுப்புகிறார்கள். அவருக்கு மேல் இரண்டு நோடல் ஆஃபிஸர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். அந்த, இரண்டு நோடல் ஆஃபிஸர்களும் டி.எம்.எஸ். எனப்படும் மருத்துவ சேவைப்பணிகள் இயக்குனர் டாக்டர் குருநாதனுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர், செயலாளர் பீலா ஐ.ஏ.எஸ்ஸிடம் தெரிவிப்பார். பீலாவோ அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவிப்பார். அமைச்சர் விஜயபாஸ்கர்தான் நோயாளிக்கு கொரோனா நெகட்டிவா? பாஸிட்டிவா? என்று அறிவிப்பார். இப்படித்தான், தமிழகத்தின் எந்த மூலையில் உள்ளவர்களுக்கு செய்யப்படும் பரிசோதனை முடிவும் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அப்பல்லோவில் 5 பேர், குளோபல் மருத்துவமனையில் 1, எம்.ஜி.எம். மருத்துவமனையில் 2 என தனியார் மருத்துவமனைகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரசின் புள்ளிவிவரங்களில் இவையும் சேர்க்கப் பட்டுள்ளனவா’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
கன்னியாகுமரியில் அடுத்தடுத்த பலி ஏன்? என்று நாம் மேலும் விசாரித்தபோது, “இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. அங்கு, கொரோனா பாதித்தவர்கள் 202ஐ தாண்டிக் கொண்டிருக்கும் நிலையில் கொச்சியில் 69 வயதுடைய யாகூப் உசைன் என்பவரை முதல் பலி வாங்கியிருக்கிறது கொரோனா.
இந்நிலையில், கேரளாவில் கொரோன பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தினமும் நடக்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உறுதிபடுத்துகிறார் கேரள முதல்வர் பிணராய் விஜயன். கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதனால் அச்சப்படுபவர்கள் எல்லையில் இருக்கும் குமரி மாவட்ட மக்கள்தான். காரணம், தினமும் குறைந்தது ஆயிரத்துக்கு மேற்பட்ட குமரி மக்கள் கேரளா மக்களோடு வணிகத் தொடர்பு, குடும்ப உறவு என்ற நிலையில் சந்திக்கிறார்கள். ஊரடங்கு போட்ட அடுத்த இரண்டு நாட்கள்வரை கேரளா சென்று வந்தவர்களும் அதிகம் பேர் உள்ளனர். மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 4,845 பேர் என்று மாவட்ட ஆட்சியரும் உறுதி படுத்தியுள்ளார்.
இதனால், பெரும் அச்சத்தில் இருக்கும் குமரி மாவட்டத்தை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும் சுகாதாரத்துறையையும் பல்வேறு தரப்பினர் கேட்டு வந்தனர். இந்த நிலையில்தான் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ‘ஐஸோலேஷன்’ வார்டில் அனுமதிக்கபட்டிருந்த 22 பேரில் கடந்த 24-ம் தேதி நாகர்கோவிலை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் இறந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி குவைத்திலிருந்து வந்த கோடிமுனையை சேர்ந்த ஜெகன் (40) கடுமையான காய்ச்சலால் கொரோனா வார்டில் அனுமதிக்கபட்டியிருந்த நிலையில் 26-ம் தேதி இறந்தார். அதேநாள், கொரோனா வார்டில் இருந்த முட்டத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் இறந்தது. மேலும், ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த 66 வயதான முதியவர் ஒருவரின் மகன் கத்தார் நாட்டில் இருந்து வந்தார். இதையடுத்து, உடல்நிலை சரியில்லாமல் ஆசாரிப்பள்ளம் கொரோனா வார்டில் அனுமதிக்கபட்டிருந்த முதியவர் 27-ந்தேதி இறந்தார். அதேபோல், அன்று இரவு திருவட்டாரை சேர்ந்த ராஜேஷ் (24) என்ற இளைஞரும் கொரோனா வார்டில் இருந்து இறந்தார். பின்னர், 28-ம் தேதி கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவரும் 29-ம் தேதி சாமிநாதபுரத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும் என அடுத்தடுத்து 7 பேர் பலியான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் காட்டு தீ போல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐசோலேஷன்’ வார்டில் சிகிச்சைப் பெற்று இறந்ததால் கொரோனாவால்தான் இறந்திருப்பார்கள் என்று மக்களும் நம்ப தொடங்கினார்கள். இதனால், மாவட்ட நிர்வாகமும் ஆடிப்போனது. இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, இறந்துபோனவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லையென்றும் அவர்கள் இறந்ததற்கான காரணம் மற்றநோய்கதான் என்று விளக்கமளித்தார். இதற்கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் மாவட்ட ஆட்சியரையும் மருத்துவ கல்லூரி டீனையும் தொடர்பு கொண்டு ஐஸோலேஷன் வார்டில் இருந்தவர் களின் அடுத்தடுத்து மரணம் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயனாளிகள் நலச்சங்க செயலாளர் கபிலன், “ஐசோலேஷன் வார்டில் இருக்கிற நோயாளிக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யாமல் என்ன நோய் என்றும் கண்டறியாமல் எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள்? அந்த, 7 பேரும் இறந்த பிறகுதான் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய ரத்தம் சளி மாதிரிகளை நெல்லைக்கு அனுப்புகிறார்கள். அதை, ஏன் அவர்கள் முன் கூட்டியே சிகிச்சையில் இருக்கும் போதே செய்யவில்லை?
அதேபோல், அந்த வார்டில் இருப்பவர்களுக்கு மற்ற வார்டுகளுக்கு கொடுக்கிற உணவைத்தான் கொடுக் கிறார்கள். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் இருப்பவர்களுக்கு கொடுப்பதைப் போல் நோய் எதிர்ப்பு சக்தி உணவை கொடுக்க வேண்டும். அதிமுக்கியமான காலக்கட்டத்தில்கூட கொரோனா நோயை கண்டறிவதற்கான லேப் வசதிகளை இங்கு ஏற்படுத்தாமல் நெல்லைக்கு அலைய வேண்டி யுள்ளது’’ என்று அரசுக்கு கோரிக்கை வைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இளைஞர் இயக்கத்தின் தலைவரும் மக்கள் மருத்துவருமான டாக்டர் எழிலனின் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளைப் படம்பிடித்துக்காட்டுகிறது, “2 லட்சத்து 9,224 பேர் ஸ்கிரீனிங் எனப்படும் கண்காணிப்பில் இருப்பதாகவும் 13 ஆயிரத்து 323 பேர் ஐசோலேஷன் வார்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் 1,763 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 1,632 பேருக்கு கொரோனா தொற்று (நெகட்டிவ்) இல்லை என்றும் 42 பேருக்கு (பாஸிட்டிவ்) கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதில் இரண்டுபேர் குணமாகிவிட்டார்கள் என்றும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் ஒருவர்தான் என்றும் மார்ச் 29 அன்று அறிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
13 ஆயிரத்து 323 பேரில் வெறும் 1,763 பேருக்கு மட்டுமே பரிசோதித்தால் மீதமுள்ள 11,560 பேரில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்து அது இன்னும் மற்றவர்களுக்கு எளிதாக பரவாது என்பது என்ன நிச்சயம்? கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்டறியும் ஆர்.டி.- பி.சி.ஆர்.(தங்ஸ்ங்ழ்ள்ங் ற்ழ்ஹய்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய் ல்ர்ப்ஹ்ம்ங்ழ்ஹள்ங் ஸ்ரீட்ஹண்ய் ழ்ங்ஹஸ்ரீற்ண்ர்ய்)பரிசோதனையின்படி இந்தியாவில் செய்யப்பட்ட 30,000 பரிசோதனைகளில் 5,000 பரிசோதனைகள் கேரளாதான். அதனால்தான், கேரளாவில் எத்தனைப் பேருக்கு கொரோனா பரவியுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை அளிக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலோ தேவையான பரிசோதனையே செய்யாமல் குறைவாகத்தான் கொரோனா பாதிக்கிறது என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா பாசிட்டிவ்களை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் 3 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட கேரளா 6 பேரில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளது. ஆனால், கேரளாவைவிட இரண்டு மடங்கு மக்கள் தொகைக்கொண்ட தமிழகத்தில் இதுவரை, 1800 பேருக்கு கீழ்தான் பரிசோதனையே செய்துள்ளோம். உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளபடி காய்ச்சல், இருமல், சுவாசக்கோளாறு அனைவருக்குமே ஆர்.டி.- பி.சி.ஆர் பரிசோதனை செய்யவேண்டும்.
கிங் இன்ஸ்டிடியூட், தேனி, திருவாரூர், திருநெல்வேலி மற்றும் தனியாரில் சி.எம்.சி. வேலூர், அப்பல்லோ, ராயப்பேட்டை தனியார் ஆய்வகம் என மொத்தம் 6 ஸ்டேஜ்-1 ஆய்வகங்களில்தான் பரிசோதனை செய்யப் பட்டுவருகின்றன. இது போதாது. தமிழக மக்கள் தொகைக்கு சுமார் 30 பரிசோதனை மையங்களையாவது உருவாக்க வேண்டும். அனைத்து, சோதனை முடிவுகளையும் இறப்பு களையும் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். ஏப்ரல் மாதங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3,000 - 4,000 ஆகலாம் என்றும் சுவாசக்கருவிகளின் தேவைகள் ஏற்படும் உலக சுகாதார மைய வல்லுநர்கள் எச்சரித் திருக்கிறார்கள். கேரளாவில் 70,000 படுக்கைகள், 4,000 செயற்கை சுவாசக் கருவிகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், தமிழகத்திலோ மருத்துவர்களுக்கான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள்கூட கிடைக்கவில்லை'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.
தொற்றுநோய்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவது தமிழக சுகாதாரத்துறைக்கு ஒன்றும் புதிதல்ல. டெங்கு, சிக்குன் குனியா என பல்வேறு தொற்றுநோய் வந்தபோதும் மர்மக்காய்ச்சல் என்று சொல்லி எண்ணிக்கையை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறது. சமீபத்தில், சென்னை அயனாவரத்திலுள்ள கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகத் திலுள்ள மனநோயாளிகள் நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்துபோனதை நக்கீரன் ஆதாரப்பூர்வமாக வெளியிட்ட போதே அதனை மறைத்துவிட்டது சுகாதாரத்துறை. மக்கள் பீதியாகிவிடக்கூடாது என்பது நல்ல நோக்கம்தான். ஆனால், அதுவே அலட்சியமாக ஆகிவிடக்கூடாது என்கிறார்கள் டாக்டர்கள்.
-மனோசௌந்தர், மணிகண்டன்