சமவேலைக்கு சமஊதியம் வழங்கக்கோரி 12 ஆண்டு களாகப் போராடிவரும் 20,000 ஆசிரியர்கள், “தற்போது தி.மு.க. அரசும் எங்களுக்குக் கைவிரித்துவிட்டது” என சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2009ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு அநீதிக்கெதிராக போராடிய ஆசிரியர்களுக்கு, அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. ஆதரவாகத் துணை நின்றதோடு, அப்போதைய அ.தி.மு.க. அரசிடம் கோரிக்கையும் முன்வைத்தார் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து அப்போதைய தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் 311-வது அறிக்கையாக தி.மு.க. அரசு வந்தவுடன் நிச்சயம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தபிறகு ஒன்றரை வருடம் காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள், அரசிடம் தங்களது கோரிக்கையை நிறைவேற்றச்சொல்லி முறையிட்டனர். அரசிடமிருந்து எந்தப் பதிலும் வராதநிலையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 நாட்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் 2023, ஜனவரி 1ஆம் தேதி "உங்களின் கோரிக்கை நியாயமானது தான். அந்தவகையில் நிச்சயம் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்காக நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கல்வி இயக்குநர் அடங்கிய 3 பேர் கொண்ட ஒரு குழுவை அமைப்போம். அந்தக்குழு ஊதிய முரண்பாட்டிற்கான விவகாரத்தை விசாரித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். அதனைத் தொடர்ந்து உங்களுக்கான நீதி கிடைக்கும்' என கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர் ஆசிரியர்கள். இந்த குழுவோ மூன்று மாதம் கடந்தும் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்காமல் காலதாமதத்தை ஏற்படுத்திவந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடர் உண்ணாவிரதத்தை 9 நாட்கள் நடத்தினர். மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து, அதே குழு மேலும் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டது. இதையடுத்து மீண்டும் போராட்டம் கைவிடப்பட்டது. 2024ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி மார்ச் வரை 19 நாட்கள் மீண்டும் போராட்டம் மேற்கொண்டனர். இப்படியே 2025 ஏப்ர-ல் ஒருநாள் வேலைநிறுத்தம், ஜூலையில் மாவட்டம்தோறும் போராட்டம் என நீடித்து, இந்த போராட்டம் தற்போது டிசம்பர் மாதம் 5ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்திய பின், டிசம்பர் 26ஆம் தேதி டி.பி.ஐ.யில் தொடங்கி, 27ஆம் தேதி எழும்பூரிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், 28ஆம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
போராடியவர்களை கைதுசெய்து மண்டபங்களில் அடைத்துள்ளனர் போலீசார். மயக்கமடைந்த சிலரை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் தரப்பில் கேட்டபோது, "மே மாதம் நியமிக்கப்பட்ட வர்களுக்கு ரூ8,370 மாத வருமானமும், ஜூன் மாதம் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ5,200 மாத வருமானம் என இருவருக்கும் 3,170 ரூபாய் வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கும் எங்களுக்கும் கல்வித் தகுதி ஒன்று, உழைப்பும் ஒன்று. ஆனால் ஊதியம் மட்டும் வேறுபாடாக எப்படி இருக்க முடியும்? இந்த 12 ஆண்டுகளாக பார்த்தால் தற்போது எங்களுக்கு 20,600, அவர்களுக்கு 29,400 இப்படி 8,800 ரூபாய் வித்தியாசம் உள்ளது. சமவேலைக்கு சமஊதியம் இல்லையா? இந்த அரசு மூன்று பேர்கொண்ட குழு அமைத்து மூன்று வருடங்களாகவா அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. அரசுதான் எங்களை வஞ்சித்தது என நினைத்து தி.மு.க.வுக்கு வாக்களித்தால், இவர்களும் இப்படி வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்?''’என்கின்றனர்.
இதுகுறித்து பேசிய இடைநிலை ஆசிரியர் இயக்கத் தலைவர் ரிக்ஸ் ஆனந்தகுமார் “"தமிழகம் கல்வியில் முதலிடம் என சொல்கிறார் முதல்வர். அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக் கான மாத ஊதியத்திலே மற்ற மாநிலத்தைக் காட்டிலும் இறுதியாக உள்ளது தமிழகம். ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இரு வேறு ஊதியம் என்பது எவ்வளவு மனஅழுத்தத்தை உண்டாக்குகிறது, உடனடியாக முதல்வர் தலையிட்டு இதற்கு தீர்வு காணாவிட்டால், போலீஸ் அடக்குமுறைகளைத் தாண்டியும் போராட்டம் தொடரும்''’என தெரிவித்தார்.
மாநகராட்சி பணியாளராக பணி நியமனம் செய்யச்சொல்லி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் செய்துவரும் சூழ்நிலையில்... ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கச் சொல்லியும், நியமனமான ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்கச் சொல்லி யும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் அரசு ஊழியர்கள் போராடிவருகிறார்கள்.
என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
-சே
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/strike-2025-12-29-16-33-30.jpg)