ஜெ. இருந்த போது கட்சிக்காரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் சசிகலா. ஜெ. மறைவையடுத்து சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், நிலைமை படிப்படியாக மாறத் தொடங்கியது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்புக்கு வந்து தினகரனுடன் மோதல்கள் அதிகரித்த நிலையில்... அ.தி.மு.க.வில் மெல்ல, மெல்ல சசிகலாவுக்கு எதிரான குரல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
தர்மயுத்தம் தொடங்கி தனக்கான முக்கியத் துவத்துக்காக குரல்கொடுத்த ஓ.பி.எஸ்., எடப்பாடி தன்னை கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் அங்கீகரித்த நிலையில்... "சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினர்கூட கிடை யாது'” எனச் சொல்லத் தொடங்கினார். ஆனால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வில் நாட்கள் செல்லச் செல்ல, தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்பதை உணரத்தொடங்கினார் ஓ.பி.எஸ்.
ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. எதிர்க்கட்சியான நிலையில்... எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் எடப்பாடி வசமானது. சசிகலா பெங்க ளூரு அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகித் திரும்பியபோது... ஆட்சியதிகாரம் கையிலிருந்த நிலையில் கட்சியினரோ, பொறுப்பாளர்களோ அவர்பக்கம் திரும்பிவிடாதபடி தடை போட்டார் எடப்பாடி.
அதனை மனதில் வைத்திருந்த சசி, கட்சியின் பொன்விழா ஆண்டின் போது, "அ.தி.மு.க. இயக்கம்தான் என்னுடைய சொத்து. அதை யாரும் என்னிடமிருந்து பிரித்து விட முடியாது''’என்று தனது ஆதரவாளர்கள் நடுவே பேசினார். தமிழகம் முழுவதும் சுற்றுலா செல்லும் தனது திட்டத்தையும் விவரித்து வியூகங்களைச் செயல்படுத்தத் தொடங்கினார்.
திட்டமிட்டபடி தொண்டர்கள் புடைசூழ அக்டோபர் 15-ஆம் தேதி ஜெ. சமாதிக்கு சசிகலா சென்றுவந்த நிலையில், அதுகுறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “"அ.தி. மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லை. அவர் கட்சியைக் கைப்பற்ற நினைப்பது பகல் கனவு. சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்' என புல்டோசர் வண்டியால் கட்டிடத்தை இடிப்பதுபோல முரட்டு விமர்சனங்களை மேற்கொண்டார்.
எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் கொடி யேற்றியபோது, கொடிக்கம்பத்தின் கீழிருந்த கல்வெட்டில், கழக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா என குறிப்பிடப்பட்டிருந்ததும் சர்ச்சைக்குள்ளானது. மாம்பலம் காவல்நிலை யத்தில், "கட்சியின் செயல்பாட்டைச் சீர்குலைக்க முயல்கிறார்' என ஜெயக்குமார் புகார் கொடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் அளவுக்குச் சென்றது.
இந்நிலையில்தான் அக்டோபர் 26-ஆம் தேதி மதுரையில் ஓ.பி.எஸ்.ஸிடம் பத்திரிகை யாளர்கள், “"சசிகலா அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப் படுவாரா?'’ என கேட்டபோது, “"தலைமை நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பர்'' என்றார். இதுவரை இல்லாத வகையில் ஓ.பி.எஸ்.ஸின் தொனி முரண்பட்டிருப்பது எடப்பாடிக்கு அதிர்ச்சியளித்தது. ஓ.பி.எஸ். கருத்துக்கு ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக செல்லூர் ராஜு, "பன்னீர்செல்வம் கூறியதில் எந்தத் தவறும் இல்லை''’என்றார். மதுரை, தேனி வட்டாரத்திலும் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்கள் என ஓரளவு நிம்மதியடைந்த எடப் பாடிக்கு கட்சியின் அமைப்புச் செயலர் பொறுப்பிலிருக்கும் ஜே.சி.டி. பிரபாகரன், “"தலைவர்கள் தடுமாறலாம். தொண்டர்கள் நிலையாக உள்ளனர். அ.தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்''’என ஓ.பி.எஸ். ஆதரவு நிலைப்பாடு எடுத்தது அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
"எடப்பாடியால் கட்சியைக் காப்பாற்ற முடியவில்லை, கட்சியைக் காப்பாற்ற சசிகலாவுக்கு இடம் கொடுக்கலாம்' என்கிற ஓ.பி.எஸ் பாணியிலேயே ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், தஞ்சாவூர், பூண்டியில் நடந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் ஓ.பி.எஸ்.ஸின் தம்பி ஓ.ராஜா கலந்துகொண்டது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அதற்கேற்ற வகையில் தினகரனும், “"பன்னீர்செல்வம் கூறி யிருப்பது சரியானதுதான். அவர் எப்போதும் நியாயமாகத்தான் பேசுவார்''’என குரல் கொடுத்திருக்கிறார்.
தினகரனை, சசிகலா ஒதுக்கி வைத்திருக்கிறார் என பரவலாக செய்திகள் வெளியான நிலையில்... அவரது உறவுகள் தரப்போ, “"சின்னம்மா ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொருவரை முன்னிறுத்துவார். ஆனால், யாரையும் ஒதுக்கிவிடமாட்டார். ஜெ சமாதிக்கு அவர் போனப்ப, தினகரன் இல்லை என்பது பெரிய பேச்சாக இருந்தது. ஆனால், தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ்தான் அங்கே ஆல் இன் ஆலாக, பக்கத்திலேயே நின்றார். சசிகலா, தினகரன், வெங்கடேஷ் எல்லாரும் ஒரே கோணத்தில்தான் செயல்படுகிறார்கள். அவர்கள் பக்கம் வந்திருக்கிறார் தர்ம யுத்த நாயகன் ஓ.பி.எஸ்.'” என்கிறார்கள் அர்த்தம் நிறைந்த புன்னகையுடன்.
இந்நிலையில், கொங்கு மண்டல அ.தி.மு.க. நிர்வாகிகளின் வலுவான ஆதரவையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தன்வசம் வைத்திருக்கும் எடப்பாடி, கட்சியின் மீதான பிடியை அத்தனை எளிதில் விட்டுக்கொடுத்துவிடத் தயாராக இல்லை. .
அ.தி.மு.க. தொண்டர்களோ, “"புரட்சித்தலை வரும் அம்மாவும் பாடுபட்டு வளர்த்த கட்சியை அதிகாரச் சண்டையில் அழித்துக்கொண்டிருக் கிறார்கள். இவர்களுக்கு கட்சியின் வளர்ச்சியை விட, யார் பெரியவர் என்ற ஆணவம்தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் தன்னை வளர்த்துக்கொள்ள அ.தி.மு.க.வை பலிகொடுக்கும் பா.ஜ.க. யுக்திக்கு தலைவர்கள் பலியாகிவிடக் கூடாது'’என்கிறார்கள் பரிதாபமாக.
-சூர்யன்