மூன்றாவது நீதிபதியிடம் வந்திருக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை ஜூலை 4-ந் தேதி தொடங்குவதற்கு முன்பே அரசியல் வட்டாரம் பரபரப்பாகிவிட்டது. நீதிபதி சத்யநாராயணா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ’"எங்கள் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் டெல்லியில் இருப்பதால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும்'‘என ஆட்சியாளர்கள் தரப்பிலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலும் சொல்லப்பட்டது. அதனை ஏற்று வழக்கினை ஒத்தி வைத்த நீதிபதி, "23-முதல் 27-ந்தேதி வரை தினமும் விசாரணை நடக்கும்' என உத்தரவிட்டிருக்கிறார். விசாரணை விரைவாக வந்திருப்பது ஆட்சியாளர்களுக்கு கிலியைத் தந்திருக்கிறது என்கிறார்கள்.

Advertisment

eps-rule

அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடம் நாம் பேசியபோது, ""விசாரணை 5 நாட்கள் நடக்கும் என நீதிபதி முடிவு செய்திருப்பதைப் பார்க்கும்போது, தீர்ப்பும் விரைந்து தரப்படும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதிகபட்சம் சுதந்திரத் தினத்துக்கு (ஆகஸ்ட் 15) முன்பாக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை எங்களுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு உடனடி ஆபத்தில்லை. ஆனால், கோட்டையில் கொடி ஏத்துற சூழலில், பாதகமான தீர்ப்பு வந்தால் முதல்வருக்கு திக்..…திக்தானே''’என்கிறார்கள்.

விசாரணை துவங்கியதில் தினகரன் தரப்பில் ஏக உற்சாகம் தென்படுகிறது. . தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான வெற்றிவேலிடம் நாம் விவாதித்தபோது, ""எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வருவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், கட்சித்தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில்தான் எங்களை தகுதி நீக்கம் செய்திருக்கிறார் சபாநாயகர் தனபால். எங்களுடைய நடவடிக்கை அந்த சட்டத்திற்கு உட்பட்டதல்ல. தகுதி நீக்கம் என்பதே எங்களுக்குப் பொருந்தாது. அதனால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்குப் பதிலாக வேறு ஒரு புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, நீதிபதி விமலாவை மாற்றியது உச்சநீதிமன்றம். அதில் எங்களுக்கு நியாயம் கிடைத்த மாதிரி, தகுதி நீக்க வழக்கிலும் நியாயம் கிடைக்கும். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்கு செல்வோம். இதனை எதிர்த்து ஆட்சியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிற பட்சத்தில், இறுதி தீர்ப்பு வரும்வரையில் எங்களை எம்.எல்.ஏ.க்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சட்டரீதியாக வெற்றி பெறுவோம்''’என்கிறார் அழுத்தமாக.

Advertisment

vetrivelஇதுதொடர்பாக மேலும் நாம் விசாரித்தபோது... ""எங்களைவிட எடப்பாடி தரப்பில்தான் தகுதி நீக்கம் வழக்கு குறித்த டென்சன் அதிகமிருக்கிறது. மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு (தினகரன் தரப்பு) பாதகமாக வந்தாலும் நாங்கள் மேல்முறையீடு செய்யமாட்டோம். இடைத்தேர்தலை எதிர்கொள்வோம். அதே சமயம் சாதகமாக வந்தால் அந்த தீர்ப்பு ஒரு பரபரப்பை உருவாக்குமே தவிர, ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. எங்களுக்கு சாதகமான தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள். அப்படி செய்கிறபோது, வழக்கின் இறுதி தீர்ப்பு டிசம்பருக்குள் வந்துவிடும். அதற்கேற்பத்தான் காய்களை டெல்லி நகர்த்தி வைத்திருக்கிறது. அதுதான் எடப்பாடி அரசுக்கான இறுதிக்கெடு. இறுதி தீர்ப்பிலும் எங்களுக்கே வெற்றி கிடைக்கும். இறுதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகும்போது, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு ஏற்படும். அதனடிப்படையில் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார். முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் போல தற்போதைய கவர்னர் புரோஹித் நழுவிட முடியாது.

அந்தச் சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும். ஆனால், ’எடப்பாடி ஆட்சி கவிழ்ந்தது’ என்கிற சொல் சட்டமன்ற பதிவேடுகளில் பதிவாவதை விரும்பமாட்டார் எடப்பாடி. அதற்கு மாறாக, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா போல் சட்டமன்றத்தைக் கூட்டி நீண்ட விளக்க உரையாற்றிவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சியில் இறங்காமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார். டெல்லியிலிருந்து எங்களுக்கு கிடைக்கிற தகவல்கள்படி, இந்த சம்பவங்களை அரங்கேற்றும் வகையிலேயே எடப்பாடியின் எஜமானர்கள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

எடப்பாடி அரசை டிசம்பர் வரை விட்டுவைப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான நில எடுப்பு, தமிழக கடற்கரை கிராமங்களில் அதானிக்காக சிறு துறைமுகங்கள் அமைக்கும் பணிகள், கிழக்குக்கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் திட்டம் ஆகியவற்றை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு வலியுறுத்தியிருப்பதுதான். ஆக, எடியூரப்பா பாணியில் எடப்பாடிக்கு உத்தரவிட டெல்லி எஜமானர்கள் முடிவு செய்துள்ளனர்''‘என்கின்றனர் தினகரனின் ஆதரவாளர்கள்.

-இரா.இளையசெல்வன்