கணக்கு கேட்டதால் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு தனிக் கட்சி தொடங்கியவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வில் கேள்வி கேட்டதற்காக நீக்கப்பட்டிருக்கிறார் கட்சியின் சீனியரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர்ராஜா. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே அதில் இணைந்தவர், கட்சியில் சிறுபான்மையினரின் குரலாக-பலமாக இருந்தவர். 1986 உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. பலத்த தோல்வியை சந்தித்த நிலையில், மண்டபம் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக வெற்றி பெற்ற அன்வர்ராஜா மீது எம்.ஜி.ஆருக்குத் தனி மரியாதை உண்டு.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இருந்தவர், பின்னர் ஜெயலலிதா பக்கம் வந்து, அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அளவிற்கு மதிப்பைப் பெற்றவர். முத்தலாக் சட்டம் போன்றவற்றில் அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற செயல்பாடுகளை முழுமையாக எதிர்த்த அன்வர் ராஜா, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். ஆகியோரின் இரட்டைத் தலைமையின் பா.ஜ.க. ஆதரவு நிலைப் பாட்டை கடுமையாக எதிர்த்து, சசிகலாவின் தேவையை வலியுறுத்தியதால், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கடுமையான வசவுகளுக்குள்ளாகி, கட்சியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.
அன்வர்ராஜா நீக்கப்பட்டது, அ.தி.மு.க.வில் ஏற்கனவே அதிருப்தியில் உள்ள முஸ்லிம் நிர்வாகிகளை கடும் அதிருப்திக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கும் என்பதால், அவரைப் போலவே சீனியரான கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனை கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நாளில், அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக நியமித்திருக் கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும்.
தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராகப் பணியில் சேர்ந்தவர் உசேன். 1972ல் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆரை நீக்கிய கட்சியின் ஆட்சியில் நான் டிரைவராக இருக்க மாட்டேன் என நடுவழியில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, ராஜினாமா செய்தவர். அ.தி.மு.க.வைத் தொடங்கு வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எம்.ஜி.ஆருடன் பங்கேற்றவர். எம்.ஜி.ஆர். மரணத்துக்குப் பிறகு இவரும் "ஜா' அணி பக்கம் சென்று, "ஜெ.' பக்கம் வந்தவர்.
கன்னியாகுமரி மாவட்ட அரசியலில் திடீர் செல்வாக்குப் பெற்று, மந்திரிகளானவர்களால் சீனியரான தமிழ்மகன் உசேன் ஓரங்கட்டப்பட்டார். அவரது வீடு ஏலத்திற்குப் போகும் சூழல் வந்தது. பின்னர், ஜெயலலிதா கவனத்திற்கு இவையெல்லாம் கொண்டு செல்லப்பட, வக்ஃபு வாரியத் தலைவராகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் உசேனை நியமித்தார் ஜெ.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் உசேன் ஓரங்கட்டுப்பட்டுதான் இருந்தார். அன்வர்ராஜா நீக்கத்தால் அவர் பக்கம் கவனம் திரும்பி, அவைத்தலைவர் பதவியை கட்சித் தலைமை வழங்கியுள்ளது.
"ஒரு மரியாதை கிடைப் பதற்கு இத்தனை ஆண்டுகளா கிறது''’என்கிற குமரி மாவட்ட சீனியர் அ.தி.மு.க.வினர், "அதுவும் கூட அன்வர்ராஜாவின் நியாய மான கேள்விகளையும் நீக்கத் தையும் சமாளிப்பதற்காகத்தானே தவிர, உண்மையான அக்கறை அல்ல''’என்கிறார்கள் வேதனையுடன்.