அ.தி.மு.க.வின் தலைமைப் பதவிக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே மௌனமாக நடந்துகொண்டிருந்த உரசல், சமீபத்தைய நிகழ்வுகளால் உக்கிரமாகியிருப்பதோடு இருவருக்கிடையிலான முட்டல் மோதலாகவும் வெடித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அ.தி.மு.க.வின் உட்கட்சித் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை அங்கீகரிக்க கட்சியின் பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பட்டியல் ஒப்படைக்கவேண்டும். அதற்காக ஜூன் 23-ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் என அறிவித்துள்ளார்கள். பொதுக்குழு கூட்டம் நடத்துவது எப்படி? என்னென்ன விவாதிப்பது? என்ன தீர்மானங்கள் இயற்றுவது? என்கிற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பெரும்பாலான மா.செ.க்கள் ஒற்றைத் தலைமை தேவை, அது, இ.பி.எஸ்.தான் என கருத்துக் கூறியுள்ளனர். சிலர் நடுநிலை, சிலர் எதிர்ப்பு என முடிவெடுக்காமலே கூட்டம் முடிந்துள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் இ.பி.எஸ். தரப்பு மேற்கொண்ட அணுகுமுறையால் கடுப்பான ஓ.பி.எஸ். தரப்பு ஆதரவுப் பிரமுகர்கள், இரட்டைத் தலைமையே தொடரட்டும் என வெளிப்படையாகப் பேசியதோடு, ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதர வாகப் போஸ்டரும் ஒட்டினர். ஒற்றைத் தலைமை எனச் சொல்வது நம்பிக்கை துரோகம் என ஓ.பி.எஸ்.ஸே வெளிப் படையாக ஜூன் 16-ஆம் தேதி இரவு செய்தியாளர்களை சந்தித்துப் பொங்கினார். இதற்கு நேரடியாக இ.பி.எஸ். பதில் தரவில்லை, களத்தில் பதிலடி தருகிறேன் என முடிவுசெய்து வடமாவட்டத்தில் பலத்தைக் காட்டும் பயணத்தை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி இரும்பேட்டில் புதிய நீதிக்கட்சி நிறுவனரான ஏ.சி.சண்முகம், தனது கல்லூரி வளாகத்தில் புதியதாக பெருமாள் கோவில் கட்டியுள்ளார். ஜூன் 17-ஆம் தேதி குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க.வின் வி.வி.ஐ.பி.களை அழைத்திருந்தார் ஏ.சி.எஸ். அந்த நிகழ்ச்சிக்கு போகலாமா? வேண்டாமா என ஊசலாட்டத்தில் இருந்த இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தந்த பேட்டியைப் பார்த்ததும் தனது ஆதரவாளர்களிடம் உடனடியாக விவாதித்து ஆரணிப் பயணத் தை உறுதி செய்தார். இந்த பயணம் ஓ.பி.எஸ்.ஸுக்கும் அவரது அணிக்கும் பதில் தருவதாக அமையவேண்டும் என முடிவுசெய்தார்.
சேலம், ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை என பயணத் திட்டம் முடிவு செய்யப்பட்டு, அந்தந்த பகுதி மா.செ.க்கள் பலத்த வரவேற்பு தரவேண்டுமென வேண்டுகோள் வைத்தார் இ.பி.எஸ். திருவண்ணாமலை தெற்கு மாவட்டச்செயலாளர் அக்ரி.கிருஷ்ண மூர்த்தி எம்.எல்.ஏ, பொதுக்குழு வுக்கான ஆலோசனைக் கூட் டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும், அது இ.பி.எஸ்.தான் என வெளிப் படையாகப் பேசினார். ஆரணி பயணம் பிரம்மாண்டமாக இருக்கவேண்டுமென இ.பி.எஸ் கேட்டுக்கொண்டதால், இர வோடு இரவாக தனது ஆதர வாளர்களை உசுப்பி பேனர்கள் வைத்து, கொடி கட்டி ஜமாய்த் தார் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி.
ஜூன் 17-ஆம் தேதி சேலத்திலிருந்து புறப்பட்ட இ.பி.எஸ். திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காட் டாம்பூண்டியில் கட்சிக் கொடி யேற்றிவிட்டு மேடையேறிய போது அவர் மீது பூக்களைத் தூவினர். பல இடங்களில் பெண்களை வரிசையாக நிற்க வைத்து வரவேற்பு, அண்ணா மலையார் கோவில் முன்பு இ.பி.எஸ்.சை வரவேற்க 500-க் கும் அதிகமான அ.தி.மு.க.வினர் குவிப்பு என அமர்க்களப்படுத் தினர். கழகத்தின் வருங்கால பொதுச்செயலாளர், வருங்கால முதல்வர் என மாவட்ட இணைச் செயலாளர் அமுதா அருணாச் சலம் மைக்கில் கோஷமிட்டதை புன்னகைத்தபடி கேட்டுக் கொண்டு மேடையேறி நிர் வாகிகள், தொண்டர்களைச் சந்தித்தார். கலசப்பாக்கம், போளூர், ஆரணியில் வரவேற்பு பலமாகயிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த இ.பி.எஸ், தங்கமணி, வீரமணி, முனு சாமி போன்ற வர்களிடம் ஓ.பி. எஸ் பேட்டி குறித்து கருத் துக் கேட்ட போது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
திருவண்ணாமலை நகரத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான பேனர்கள், திருவண்ணாமலை டூ ஆரணி செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான கொடிகள் கட்டியிருந்தனர். உளவுத்துறை கணக்குப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 550 பேனர்கள். இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைக் கணக்கிட்டால் ஆயிரத்துக்கும் அதிகமான பேனர்கள் இருந்தது என்கிறார்கள். பொதுவாக எதிர்க்கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்தால் பாதுகாப்பு விஷயத்தில் போலீஸ் கண்டுகொள்ளாது. ஆனால் இ.பி.எஸ் வந்தபோது, பயண வழிப் பாதுகாப்பு பக்காவாக செய்திருந்தனர். இதற்கு பதிலடியாக ஓ.பி.எஸ். என்ன செய்ய உள்ளாரோ?
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர், "வடமாவட் டத்தில் தனக்குள்ள பலத்தை ஓ.பி.எஸ். அணிக்கு காட்டும்வித மாகவே, இந்தப் பயணத்தை எடப்பாடி வடிவமைத்தார். சேலத்தில் காலை 6 மணிக்கு கிளம்பியவர், இரவு 8:20 மணிக்கே சென்னையிலுள்ள இல்லத்துக்குச் சென்றார். இதற்காக பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டுள்ளது''’என்றனர்.
அரசியல் பார்வையாளரான வேலூர் லோகேஷ்பாபு, “"தற்போதுள்ள இரட்டைத் தலைமை ஒற்றைத் தலைமையானால் அது அ.தி.மு.க.வுக்குதான் இழப்பு. ஓ.பி.எஸ். பொதுச்செயலாள ரானால் இ.பி.எஸ். சார்ந்த சமூகம் ஒத்துக்கொள்ளாது. இ.பி.எஸ். பொதுச்செயலாளரானால் ஓ.பி.எஸ். சார்ந்த சமூகம் ஒப்புக்கொள்ளாது. இருவரில் ஒருவர் அப்பதவிக்கு வந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே பலத்த சேதம் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும். இருந்தும் தங்களுக்குள்ள தனித்த பலத்தைக் காட்ட முயற்சிசெய்கிறார்கள். இதனை பா.ஜ.க. விரும்பாது. விரைவில் யார் தலைமை என்கிற விளையாட்டு முடிவுக்கு வரும்''’என்றார்.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்