சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி - திருமண்பட்டி கிராமம்... தாய் இல்லை... தந்தையோ மறுமணம் செய்துகொண்டு பிள்ளைகளைக் கைவிட்டுவிட்ட நிலை... இடுப்புக்குக் கீழே உணர்வற்ற நிலையில் வாழ்க்கை நடத்தும் அண்ணன்... ஆனால் மனதுக்குள், தனது தங்கையை எப்படியாவது நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற வைராக்கியம் குறையவில்லை... தங்கையோ அண்ணனுக்கு ஓர் அன்னையாக மாறி பணிவிடை செய்கிறாள்... ஏழ்மையில், மழைக்கு ஒதுங்கு வதுக்கு மட்டுமேயானதொரு வீடு... இருவருக்கும் குளிக்க, இயற்கை உபாதைக்கு ஒதுங்க கழிவறை, குளியலறை வசதி கூட வீட்டில் இல்லை... ஏழ்மையான நிலையிலும் வைராக்கியமாக வாழ விரும்பும் இவர்களைப் பற்றி நக்கீரன் இணையதளத்தில் வீடியோவாகப் பதிவிட்டு வெளியிட, தற்போது அண்ணன், தங்கையின் கனவினை நனவாக்கும் முயற்சியில் நக்கீரனோடு கரம் கோர்த்துள்ளது மனிதம்!
மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண் என மொத்தம் நான்கு பேர் கொண்ட குடும்பம். தாய், மரணிக்க, தந்தை கைவிட, தனது மூன்று சகோதரிகளை யும் காப்பாற்றுவதற்காக, பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு, பத்து வருடங் களுக்கு முன்பு கோயம்புத்தூ ருக்கு வேலைதேடிச் சென்று, பஞ்சர் ஒட்டும் பணியில் சேர்ந் திருக்கிறார் லெட்சுமணன். எதிர்பாராத விதமாக சாலை விபத்து ஒன்றில் சிக்கிய லெட்சுமணனுக்கு உயிர் பிழைத்ததே மறுபிழைப்பு. ஆனாலும் அவரால் முழுமையாக மீளமுடியாமல், இடுப்புக்குக் கீழே உணர்வற்ற நிலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்த நிலையில் வாழ்க்கை நடத்தும் சூழல். இடுப்புக்குக் கீழே உணர்வற்றுப்போனால் என்ன, நம்முடைய இரண்டு கைகளை வைத்து உழைத்து சகோதரிகளைக் காப்பாற்றலாம் எனத் துணிந்த லட்சுமணனுக்கு, எதிர்பார்த்த படி எதுவும் அமையவில்லை என்ற ஏமாற்றம், ஆற்றாமை!
தற்போது மூன்று சகோதரி களில் சிநேகா என்ற சகோதரி மட்டும் லட்சுமணனை உடனிருந்து கவனித்துவருகிறார். அதுகுறித்து கூறுகையில், "ஒரு அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னொருவர் சென்னை யில் கூலி வேலை செய்கின்றார். நானும் இங்கேயிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள மில்லுல வேலை செய்றேன். விடியற் காலையில் அண்ணனை எழுப்பி, மலஜலம் கழிக்க வைத்து, குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டிவிட்டு படுக்க வைத்துவிட்டு 7 மணிக்கு வேலைக்குக் கிளம்பிச் சென்றால் சாயாங்காலம் 6.30 மணிக்குத்தான் திரும்ப முடியும். என்னதான் வேலை பார்த் தாலும் சுயமாகத் தன்னுடைய வேலைகளைப் பார்க்கமுடியாத அண்ணன் நினைப்புதான் அங்க வரும். அடிச்சுப்பிடிச்சு வந்து, அண்ண னுக்குத் தேவையானவைகளைச் செய்துவிட்டு ஊர் உறங்கியபிறகு 11 மணிக்கு மேல பொது வெளியில் குளிக்க வேண்டும். இல்லையெனில் அதிகாலையில் 4 மணிக்குத்தான் குளிக்க முடியும்'' என்கிறார் சிநேகா. லெட்சுமணனும், சிநேகாவும் குடியிருக்கும் அந்த ஓட்டு வீடோ, ஓட்டை வீடாகக் காட்சியளிக்கிறது. சீமை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. மேற்கூரை வழியாக சூரிய வெளிச்சம் வீட்டினுள் அடிக்கிறது. தரையும் மண் தரைதான். அங்கங்கே தரை முழுதும் பெயர்ந்து இருக்கிறது.
லெட்சுமணனிடம் பேசினோம். "என் தங்கச்சிக்குக் குளிக்கக்கூட இடமில்ல. அதோ தெரியுதுல.. ரோட்டு ஓரமா.. அங்கதான் குளிக்கும். டாய்லட் கட்டணும். தங்கச்சி களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும் என்ற எண்ணத் தில்தான் வேலைக்குப் போனேனுங்க.. ஆனால் அந்த ஆக்சிடென்ட்டில் என் வாழ்க்கையே தொலைஞ்சு போச்சு. இப்ப என்னால சுயமா ஒன்னுக்குகூடப் போகமுடியாது. வீட்டுக்கு பாரமா இருக்கேன்னு தோணுது. இருந்தாலும் ஏதாவது செஞ்சு, என் தங்கச்சிகளக் கரை சேர்க்கணும். அதுதான் என்னுடைய லட்சியம்'' என்றார் நம்மிடம்.
இவர்களின் நிலைகுறித்து வீடியோ செய்தியாக்கி நக்கீரன் இணையதளத்தில் பதிவிட, "நான் உதவுகின்றேன்'' எனக்கூறி ஆயிரக்கணக் கான முகமறியா மனிதநேயமிக்க நபர்கள் அலுவல கத்தைத் தொடர்புகொண்டனர்.. "நாங்கள் இருக்கின்றோம்' என்ற பெயரிலான தன்னார்வலர் கள் குழுவினர் முன்னதாகக் களமிறங்கி, கழிப்பறை, குளியலறையின் கட்டிடப்பணிகளைப் பூர்வாங்க மாகத் தொடங்கி, லெட்சுமணனுக்குத் தேவையான கட்டில் மருந்துப் பொருட்களையும், மளிகைச் சாமான்களையும் வழங்கினர். இச்சூழலில், வழக்கறிஞரும், தி.மு.க.வின் மாநிலச் செய்தித்தொடர்பு இணைச்செயலாளருமான தமிழன் பிரசன்னாவும் உதவிக்கு வந்தார்.
நக்கீரன் மூலம் செய்தியறிந்த சிவகங்கை மாவட்ட நிர்வாகமோ, மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் களத்திலிறக்கி, என்னென்ன தேவைகளைச் செய்துதரவேண்டு மென்பதை நேரடியாகக் கண்டறிந்தது. "அவரது வங்கி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக் காததால் அரசு மானியப் பணத்தை அவர்களால் எடுக்க இயலவில்லை. அதனால் வங்கி அதிகாரி களை ஸ்பாட்டிற்கே வரவழைத்து பிரச்சனை சரி செய்யப்பட்டு பணம் அங்கேயே லெட்சுமணனுக்கு வழங்கப்பட்டது. அதுபோல் மார்ச் 14 அன்று அவருக்கு அரசின் சார்பில் வீடும் வழங்கப்பட வுள்ளது. என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி'' என நக்கீரனுக்குப் பாராட்டி னைத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி.
படங்கள்: விவேக்