தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி. எம்.எம். அப்துல்லா, ஒன்றிய அரசின் பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தனது கன்னிப்பேச்சில், கிரிப்டோகரன்சி குறித்த அறிவிப்பிலுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி யதைப் பலரும் பாராட்டியுள்ளனர். "உலகம் முழுவதும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட முறைக்கு, வரி விதிக்கும் நடைமுறை உள்ளது. அதாவது, எந்த வரியை அமல் படுத்தினாலும் அது ஒரு சட்டத்தை முன்வைத்தே விதிக்கப்படும். ஆனால், இந்த கிரிப்டோகரன்சி இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் கிரிப்டோகரன்சி என்று சொல்லப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிப்டோகரன்சிகளைக் கட்டுப்படுத்த எந்த ஒழுங்குமுறை அமைப்போ அல்லது நிறுவனமோ இல்லாததால், அதைச் சட்டப்பூர்வ மான சொத்தாகக் கருத முடியாது. அது சொத்தாகக் கருதப்படாவிட்டாலும், அதை ஒழுங்குபடுத்த எந்த ஒழுங்குமுறை அமைப்போ அல்லது சட்ட நிறுவனமோ இல்லையென்றாலும், ஒருவர் தனது சொந்த இடர் முயற்சியில் அதை வாங்கலாம். அதன்மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. ஆனால் அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கும் அரசு வரி மட்டுமே விதிக்கும். உலகில் இப்படி ஒரு முறை எங்காவது இருக்கிறதா?'' என்று எம்.எம். அப் துல்லா எழுப்பியுள்ள கேள்வி, இந்தியர்கள் பலரின் மன திலும் எழக்கூடிய கேள்வியாகும். இதன்மூலம், கிரிப்டோ கரன்சி டிஜிட்டல் பரிவர்த்தனை எப்படி செயல்படுகிறது?... இது பாதுகாப்பானதா?... இது நம்பகமான முதலீடு தானா?... என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
"கணிப்பொறி நிபுணர்கள் விளையாட்டுத்தனமாகத் தொடங்கிய விர்ச்சுவல் கரன்சி எனப்படும் கிரிப்டோகரன்சிதான் தற்போது வர்த்தக உலகின் பேசுபொருளாகியுள்ளது. தற்போது, பிட்காயின், லைட்காயின், ஸ்டெல்லெர் உள்பட பல நூறு கிரிப்டோகரன்சிகள் உருவாகிவிட்டன. இவற்றில், பிட்காயின் என்ற கிரிப்டோகரன்சியை உருவாக்கிய வரென்று சொல்லப்படும் சடோஷி நகமோட்டோ' என்ற மனிதரை இதுவரை யாருக்குமே தெரியாது என்பதே இதிலிருக்கும் பிரமிப்பு'' என்கிறார் டிஜிட்டல் எக்ஸ்பர்ட் ஷான் கருப்பசாமி.
மேலும் கூறுகையில், "பிட்காயினை உருவாக்கியவர் யாரெனத் தெரியாவிட்டாலும், அந்த தொழில்நுட்பம், ஓபன் சோர்ஸ் எனப்படும் திறந்த நிலை மென்பொருளாக இருப்பதால் பிட்காயின் எந்தத் தடையுமின்றி வளர்ந்து வருகிறது. இணை யம் என்பது உலகளாவிய அளவில் பொதுவான ஒன்றாக இருப்பதைப்போல், கிரிப்டோ கரன்சிகளும் எல்லை கடந் தவை. கிரிப்டோகரன்சிகள் மூலமாக பொருட்களை வாங்க, விற்க, எந்த வங்கியின் தயவும் தேவையில்லை. கிரிப் டோகரன்சிகளை எந்த நாடும் தடை செய்யவோ கட்டுப் படுத்தவோ முடியாது. இப்படி இருப்பதுதான் இதன்மீதான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
கிரிப்டோகரன்சிகளின் பரிமாற்றங்கள் அனைத்தும் ப்ளாக்செயின் என்பதில்தான் என்க்ரிப்டாகப் பதியப்பட்டிருக்கும். குறிப்பிட்ட கிரிப்டோகரன்சியின் வலைப்பின்னலில் உள்ள அனைத்துக் கணினிகளிலும் இது ஒரே நேரத்தில் சேமிக்கப்படும். இப்பணியில் ஈடுபடுபவர் களுக்கு இதனால் பணப்பலன் கிடைக்கும். ஆனால் இவர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது என்பது இன்னொரு ஆச்சர்யம்! இதனை யாரும் கட்டுப் படுத்தவோ, சொந்தம் கொண்டாடவோ முடியாது. ஏதேனுமொரு கணினியில் ஹேக் செய்தாலும் மற்ற கணினிகளில் அதன் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. குறிப்பிட்ட கணினி மட்டுமே நெட்வொர்க்கிலிருந்து நீக்கப்படும். எனவே இதில் பாதுகாப்புக்கான சிக்கல் எழ வாய்ப்பில்லை என்று கூறப்பட்டா லும், ஆங்காங்கே கிரிப்டோகரன்ஸியில் ஹேக்கிங் குறித்த புகார்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன'' என்றார்.
ஆம்! இந்தியாவில், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண ரமேஷ் என்ற ஹேக்கர், கடந்த 2015-ம் ஆண்டில் பிட்ஃபினிக்ஸ் பிட்காயின் பரிவர்த்தனைத் தளத்தை ஹேக் செய்து, 2,000 பிட்காயின்களை திருடியதாக வும், 2016 ஆகஸ்டில் 1,19,756 பிட்காயின்களைத் திருடியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது, கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. எனவே இதன் சாதக பாதகங்கள் குறித்து பேங்க் ஆப் சார்ஜாவின் தலைமை தகவல் பாதுகாப்பு அலுவலர் விமலாதித்தன் மணியிடம் கேட்டோம்.
"கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி மீது தடை கொண்டுவரப்பட் டது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே அந்தத் தடையை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீக்கி னார்கள். தடை நீக்கப் பட்டபின்னர், கிரிப்டோ கரன்ஸி மூலம் நடத்தப் படும் பிசினஸ் 650% அளவுக்கு பெரும் வளர்ச்சி யை எட்டியிருக்கிறது. சமீபத்திய சர்வே ஒன்று, இந்தியாவில் 2030-க்கு முன்னதாக, கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்கன் டாலர் அளவுக்கு கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்வார்கள் என்று தெரிவிக்கிறது. இப்படியான சர்வேயைப் பார்த்த பின்னர்தான், தனியார் வசமிருக்கும் கிரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனையில் இணைவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கரன்சியைக் கொண்டுவருவதாகத் தெரிகிறது.
இந்த டிஜிட்டல் மணி, எலக்ட்ரானிக் ஃபார்மட்டில் இருக்கக்கூடியது. இதைப் பயன் படுத்துவதற்கு, ரிசர்வ் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருக்க வேண்டும். அதன்மூலம் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்து பிசினஸ் செய்யலாம். 2019-ம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம் தங்கள் வசமிருக்கும் பயனாளர்களைக் கொண்டு லிப்ரா என்ற டிஜிட்டல் கரன்சியை விடப்போவதாக அறி வித்தது. இது பேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சீன அரசாங்கம், அதே 2019-ம் ஆண்டிலேயே டிஜிட்டல் யுவான் எனப்படும் சீன டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது.
கிரிப்டோகரன்சி பாதகங்கள்
கிரிப்டோ கரன்சியில் சாதகங்களும், பாதகங் களும் இருக்கின்றன. ஒவ்வொரு டிஜிட்டல் கரன்சி யும் ஒவ்வொரு வகை டெக்னாலஜியால் செயல் படுத்தப்படும். இந்த டெக்னாலஜியை அடிக்கடி அப்டேட் செய்யாவிட்டால் ஹேக்கர்கள் ஹேக் செய்ய முடியும். அடுத்ததாக, டிஜிட்டல் கரன்சியை வெளியிடக்கூடியவர்களின் நேர்மைத்தன்மை குறித்து யாருக்கும் தெரியாதென்பதால், மோசடி எண்ணத்தோடு அதில் தில்லுமுல்லு நடப்பதற் கேற்ப கரன்சி தொழில்நுட்பத்தை உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது. அது மிகப்பெரிய ஆபத்தாகக்கூடும். இன்னொன்று, இதில் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதனை யாருக்கேனும் விற்பார்களா என்பதைக் கண்காணிக்க இயலாது.
டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடுவ தால் பலரும் ரிசர்வ் வங்கி யிலேயே கணக்கு தொடங்க முன்வருவார்கள். இதனால் இதர கமர்சியல் வங்கிகள் பாதிக்கப்படலாம். இது வங்கித்துறையில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத் தக்கூடும். அதேபோல, ரிசர்வ் வங்கி, தனது வழக்க மான செயல்பாட்டை விட்டுவிட்டு, டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையில் முழுக்கவனத்தையும் செலுத்தத்தொடங்கினால், அவ்வங்கிக்கு பணிச் சுமை அதிகமாகி, அதன் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு, இதர கமர்சியல் வங்கிகளும் சிக்கலுக்குள்ளாகும். டிஜிட்டல் கரன்சியைச் செயல்படுத்துவதற்கு அதிகப்படியான மின் தேவை இருக்கிறது. மின் பயன்பாடு அதிகரிப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சப்படுகிறார்கள். இதனையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
எனவே டிஜிட்டல் கரன்சியைக் கொண்டு வருமுன் இதிலிருக்கும் சாதக பாதகங்களை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும். உலக அளவிலும், தேச அளவிலும் டிஜிட்டல் கரன்சி யைப் பயன்படுத்துவதில் ஒழுங்குமுறை விதிகளை வரையறுக்க வேண்டும். டிஜிட்டல் கரன்சி பரிவர்த் தனையைச் செயல்படுத்துவதில் ரிசர்வ் வங்கி, இதர கமர்சியல் வங்கிகளின் பங்களிப்பு குறித்த தெளிவான வரையறையை வகுக்க வேண்டும்.
டிஜிட்டல் கரன்சி மீது மிகக்கடுமையான ஹேக்கர் அட்டாக் நடத்தப்பட வாய்ப்புள்ளதால், பாதுகாப்புகளைப் பலப்படுத்துவதற்கான சைபர் செக்யூரிட்டி வழிமுறைகளை அரசாங்கம் வகுக்க வேண்டும்'' என்கிறார். கிரிப்டோகரன்சியின் பாதகங்கள் குறித்து இவர் தெரிவித்துள்ள கருத்தை ஆமோதிப்பதுபோலவே இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டி.ரபிசங்கர், கிரிப்டோகரன்சி யைத் தடை செய்ய வேண்டுமென்றும் இது நிதி மோசடித் திட்டங்கள் அனைத்தையும்விட மோச மானது என்றும் பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகள் சங்கத்தின் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இவர், "அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாட் டைத் தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதுதான் கிரிப்டோ கரன்சி தொழில்நுட்பம். எனவே இத்தொழில் நுட்பம், நாட்டின் நிதி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும். வங்கி அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய திறனை அழிக்கக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருபக்கம், ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை உருவாக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வங்கியின் துணை கவர்னரே அதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் ஆன்லைன் மோசடிகளால் பெருத்த இழப்புகளைச் சந்தித்துவரும் சூழலில், தற்போது கிரிப்டோகரன்சியையும் ஊடுருவ விடுவதால், பொதுமக்களின் வருமானத்தை மோசடி செய்வதற்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.